பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Friday, February 13, 2009

தீர்வை

பொருளியல் தொடர்பில், தீர்வை என்பது, வருமானம் ஈட்டுவதற்காக நாடொன்றினால் விதிக்கப்படுகின்ற ஒரு வகை வரி ஆகும். இது பொதுவாக ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவை தொடர்பில் விதிக்கப்படுகின்றது. இவற்றையே சுங்கத் தீர்வை எனக் குறிப்பிடுகின்றனர்

வரி

வரி (tax) என்பது, அரசோ அதுபோன்ற அமைப்புக்களோ, தனி நபர் அல்லது நிறுவனங்களிடமிருந்து பெறும் நிதி அறவீடு ஆகும். வரி அறவிடும் வேறு அமைப்புக்களாகப் பழங்குடி இனக்குழுக்கள், விடுதலைப் போராட்டக் குழுக்கள், புரட்சிக் குழுக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய அமைப்புக்கள் அறவிடும் வரிகள் பெரும்பாலும் சட்டபூர்வமானவையாகக் கருதப்படுவதில்லை. இதனால் அரசாங்கங்கள் இவ்வாறு அறவிடப்படும் வரியைக் கப்பம் எனக் குறிப்பிடுவது உண்டு. மத்திய அரசு தவிர, உள்ளூராட்சி அமைப்புக்கள், மாநில அரசுகள் போன்ற பல துணை அரச அமைப்புக்களும் வரி அறவிடுவதுண்டு.
வரிகள் நேரடி வரி, அல்லது மறைமுக வரியாக இருக்கலாம். வரியைப் பணமாகவோ, பொருளாகவோ, அல்லது உழைப்பாகவோ செலுத்தும் வழக்கம் இருந்து வந்தது. மரபுவழி மற்றும் முதலாளித்துவத்திற்கு முற்பட்ட முறைமைகளின் கீழேயே வரிகள் பொருட்களாகவும், ஊழியம் போன்ற உடல் உழைப்பாகவும் அறவிடப்பட்டு வந்தது. தற்காலத்தில் வரிகள் பொதுவாகப் பணமாகவே அறவிடப்படுகின்றன.
பொதுவாக நாடுகளின் அரசுகள், அவற்றின் நிதி அமைச்சகங்களின் கீழ் அமையும் அமைப்புக்கள் மூலமாக வரிகளை அறவிடுகின்றன. வரிகள் செலுத்தப்படாவிட்டால் அபராதம், சிறை போன்ற தண்டனைகளும் வழங்கப்பட விதி முறைகள் உள்ளன.

வரி அறவிடுவதன் நோக்கங்கள்
அரசினாலும், அது போன்ற அமைப்புக்களாலும், வரிகள் அறவிடப்படுவதற்கான பல்வேறு காரணங்களை வரலாற்றில் காணமுடியும். பொதுவாக அவ்வமைப்புக்களின் செயற்பாடுகளுக்கான நிதியைப் பெறவே வரிகள் அறவிடப்படுகின்றன எனலாம். இவற்றுள் பின்வருவன முக்கியமானவை:
சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல்,

சொத்துக்களைப் பாதுகாத்தல்,

பொருளாதாரக் கட்டமைப்புக்களை உருவாக்கிப் பேணுதல்,

பொது வேலைகள் (public works),

சமூகப் பொறியியல் (social engineering),

அரச செயற்பாடுகள்.
பல நவீன அரசுகள், கீழே பட்டியலிடப்பட்டுள்ளவை போன்ற, நலத் திட்டங்களுக்கும், பொதுச் சேவைகளுக்காகவும்கூட வரிகள் மூலம் திரட்டப்படும் நிதியைப் பயன்படுத்துகின்றன:

கல்வி முறைமைகள்,

உடல்நலம் பேணல் முறைமைகள்,

வயோதிபர்களுக்கான ஓய்வூதியம்,

வேலையற்றோர் கொடுப்பனவுகள்,

சக்தி, நீர் வழங்கல், மற்றும் கழிவு மேலாண்மைத் திட்டங்கள்

பொதுப் போக்குவரத்து.

அரசுகள் பல வகையான வரிகளை அறிமுகப்படுத்துவதோடு, குறிப்பிட்ட வரியொன்றிலேயே பல்வேறு வீதங்களில் வரி அறவிடுகின்றன. பின்வருவன இதற்கான காரணங்களாக அமையக்கூடும்:

வரிச் சுமையைத் தனியார் மற்றும், வரி செலுத்தும் வணிகத் துறையினர் போன்ற வகுப்பாரிடையே பரவலாக்குதல்.

தனியார் மற்றும் சமூதாயத்தின் பல்வேறு வகுப்பாரிடையே வளங்களை மறுபகிர்வு செய்தல். முற்காலத்தில், பிரபுத்துவ சமுதாயத்தினரின் நலனுக்காக ஏழை மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில், வசதி படைத்தோரிடமிருந்து அறவிடப்படும் வரிப் பணத்திலிருந்து, வசதியற்றோர், வயதானோர் போன்றவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

வெளிநாட்டு நிதியுதவி, இராணுவ உதவி போன்றவற்றுக்கு நிதியளித்தல்,
பொருளாதாரத்தின் பருவினப்பொருளியல் செயற்பாட்டு விளைவுகள்மீது செல்வாக்குச் செலுத்துதல் (இதற்கான அரசின் வழிமுறைகள் அதன் நிதிக் கொள்கை எனப்படுகின்றது),
குறிப்பிட்ட சில வகைப் பரிமாற்றங்களை மற்றவற்றிலும் கவர்ச்சியானவை ஆக்குவதன்மூலம், பொருளாதாரத்தில் நிலவும் நுகர்வு மற்றும் வேலைவாய்ப்புப் போக்குகளை மாற்றியமைத்தல்.