பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Friday, September 26, 2008

ஜி.எஸ்.பி. பிளஸ் நலன்களை தொடர்ந்தும் தக்கவைப்பது இலங்கைக்கு சாத்தியமா?



ஜி.எஸ்.பி. பிளஸ் நலன்களை தொடர்ந்தும் தக்கவைப்பது இலங்கைக்கு சாத்தியமா? ஜி.எஸ்.பி.பிளஸ் என்பது இலங்கையில் தற்போது பரவலாகப் பேசப்படும் ஒரு விடயமாகக் காணப்படுகின்றது. ஆகவே, இலங்கைப் பொருளாதாரம் மீதான இதன் பொருளாதாரப் பரிமாணங்களைப் பகுப்பாய்வு செய்வது இங்கு சாலப்பொருத்தமானதாகும். ஜி.எஸ்.பி. என்பதன் விரிவாக்கப்பட்ட வடிவம் விருப்பத்தேர்வுகளின் பொதுமைப்படுத்தப்பட்ட முறைமை (Generalized System of Preferences- GSP) என்பதாகும். சில வேளைகளில் இது தீர்வை விருப்பத்தேர்வுகளின் பொதுமைப்படுத்தப்பட்ட முறைமை (Generalized System of Tariff Preferences) எனவும் அழைக்கப்படுகின்றது. வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மகாநாடு (அங்காட) அமைப்பு ஜி.எஸ்.பி. இனை 1968 இல் சிபார்சு செய்த போதும் ஐரோப்பிய ஒன்றியமே இதனை 1971 இல் முதன்முதலாக அமுல் செய்தது. இம்முறைமையின் கீழ் அபிவிருத்தியடைந்த நாடுகள் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் ஏற்றுமதிகளுக்குத் தீர்வைச் சலுகைகளை வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது.
ஜி.எஸ்.பி.பிளஸ் என்பது எளிதில் பாதிப்படையக்கூடியதும் விசேட அபிவிருத்தித் தேவைகளை உடையதுமான அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய முறைமையாகும். இம்முறைமையின் கீழ் இலங்கை , மொங்கோலியா, பொலிவியா, கொலம்பியா, ஈக்குவடோர் , பெரு, வெனிசுவெலா, கோஸ்ட்ராரிக்கா, எல்சல்வடோர், கௌதமாலா, கொண்டுராஸ், நிக்கரகுவா, பனாமா, மோல்டோவா மற்றும் ஜோர்ஜியா ஆகிய பதினைந்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது ஒன்றில் தீர்வை ஏதும் செலுத்தாமல் அல்லது குறைந்த தீர்வைகளைச் செலுத்தி ஏற்றுமதிகளைச் செய்யக்கூடிய வாய்ப்பினைக் கொண்டுள்ளன.
இதனால், ஏனைய நாடுகளுடன் வர்த்தக ரீதியாகப் போட்டியிடும் போது இந்நாடுகள் சாதகமான நிலையினைக் கொண்டுள்ளன. ஜி.எஸ்.பி.பிளஸ் முறைமையின் கீழான சலுகைகளை ஆசியாவில் இலங்கை மற்றும் மொங்கோலியா ஆகிய நாடுகள் மட்டுமே பெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
தற்போது ஜி.எஸ்.பி. பிளஸ் முறைமையின் கீழான சலுகைகளைத் தொடர்ந்து பெறுவதற்கு குறிப்பிட்ட நாடுகள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் என்பவற்றினால் விதந்துரைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் , நல்லாட்சிச் செயன்முறை மற்றும் சூழல் பாதுகாப்பு என்பவை தொடர்பான குடியியல் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச பொது இணக்க ஒப்பந்தம் ,பொருளாதாரம் , சமூகம் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பொது இணக்க ஒப்பந்தம், அனைத்து வகையான இனப்பாகுபாடுகளை ஒழிப்பதற்கான சர்வதேச பொது இணக்க ஒப்பந்தம் , பெண்களுக்கெதிரான பாகுபாடுகளை ஒழிப்பதற்கான சர்வதேச பொது இணக்க ஒப்பந்தம், சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது தரக்குறைவாக நடத்துதல் அல்லது தண்டனை என்பவற்றுக்கு எதிரான சர்வதேச பொது இணக்க ஒப்பந்தம், இனப்படுகொலைகளைத் தடுத்தல் மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபடுவோர்களைத் தண்டிப்பதற்கான பொது இணக்க ஒப்பந்தம் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான சர்வதேச பொது இணக்க ஒப்பந்தம் என்பவற்றை உள்ளடக்கியதாக இருபத்து மூன்று மிக முக்கிய சர்வதேச பொது இணக்க ஒப்பந்தங்களை ஏறுறுக் கொண்டு செயற்றிறனுடன் அமுல்படுத்த வேண்டும் என்பது அத்தியாவசியமானதாகக் கருதப்படுகின்றது.
அவ்வாறு ஏற்று அமுல்படுத்தத் தவறும் பட்சத்தில் ஜி.எஸ்.பி.பிளஸ் முறைமையின் கீழான சலுகைகளைக் குறிப்பிட்ட நாடுகள் இழக்கும் நிலை ஏற்படலாம் என வலியுறுத்தப்படுகின்றது.
இலங்கையைப் பொறுத்த வரையிலும் ஜி.எஸ்.பி.பிளஸ் முறைமையினைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்காக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக கடும் வாதப் பிரதிவாதங்கள் நிலவுகின்றன. மேற்கூறிய இருபத்திமூன்று சர்வதேச பொது இணக்க ஒப்பந்தங்களை இலங்கை செயற்படுத்த வேண்டுமானால் இலங்கையின் அரசியல் யாப்பினை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.
ஆனால், அரசாங்கம் மேற்குலகில் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவ்வாறு அரசியல் யாப்பினை மாற்ற முடியாது என்றும் நாட்டின் இறையாண்மையைக் கேள்விக்குட்படுத்த முடியாது எனவும் வாதிடும் அதேவேளை நாட்டின் எதிர்க்கட்சியோ, மனித உரிமை தொடர்பான சர்வதேச நியமங்களுக்கேற்ப இலங்கை செயற்பட வேண்டும் எனவும் ஏற்றுமதியாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வாதிடுகின்றது.
ஜேர்மனுக்கான எதிர்க்கட்சித் தலைவரின் தற்போதைய விஜயமும் ஜி.எஸ்.பி. பிளஸ் முறைமையின் கீழான சலுகைகள் இலங்கைக்குத் தொடர்ந்தும் கிடைப்பதை உறுதிசெய்வதற்கான ஒரு முயற்சியே என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற உலகப் புகழ் வாய்ந்த மூவரான அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் , தென்னாபிரிக்காவைச் சேர்ந்த டெஸ்மன் ருடு மற்றும் ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த அடொல்போ பெரெஸ் எஸ்குய்வெல் ஆகியோர் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலில் அங்கத்துவம் பெறுவதற்கான முயற்சியில் இலங்கையின் தோல்வியை உறுதிப்படுத்துமாறு உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டமையும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தேர்தலில் இலங்கை தோல்வியடைந்தமையும் மனித உரிமை விவகாரத்தில் இலங்கைக்கு மிகப் பெரும் பின்னடைவாகவே கருதப்படுகின்றது.
இது இலங்கை ஜி.எஸ்.பி.பிளஸ் முறைமையினைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதில் சில இடர்பாடுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் கருதப்படுகின்றது.
இலங்கையைப் பொறுத்த வரையில் ஜி.எஸ்.பி.பிளஸ் முறைமையின் கீழான சலுகைகள் இவ்வருட இறுதிப்பகுதியுடன் முடிவடைய இருப்பதால் அதனை 2009 ஜனவரியில் தொடங்கி அடுத்த மூன்று வருடங்களுககு நீடிக்கச் செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். ஜி.எஸ்.பி. பிளஸ் முறைமையின் மூலம் இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையே அதிகளவு நன்மையினை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை வருடாந்தம் மூவாயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆடை ஏற்றுமதிகள் மூலம் உழைக்கின்றது. தற்போது இலங்கை ஐம்பது வீதமான ஆடைகளை அமெரிக்காவிற்கும் நாற்பத்தைந்து வீதமான ஆடைகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஐந்து வீதமான ஏற்றுமதிகளை கனடா மற்றும் ஏனைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றது. ஆடைக் கைத்தொழில் துறையானது கிட்டத்தட்ட மூன்று இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஜி.எஸ்.பி.பிளஸ் முறைமையின் கீழான சலுகைகள் இலங்கை இழக்குமானால் மோசமாகப் பாதிக்கப்படுவது இலங்கையின் ஆடை உற்பத்தித்துறையாகும். முக்கியமாக நேரடியாகத் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுள்ள தொழிலாளர்கள் மட்டுமன்றி அத்துறையில் மறைமுகமாகத் தங்கியுள்ள ஏறக்குறைய பன்னிரெண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்படக்கூடும் எனக் கருதப்படுகின்றது.
ஆடைகள் ஏற்றுமதி செய்யும் போது இலங்கை பல்நார் உடன்படிக்கையின் கீழ் ((Multi Fiber Agreement - MFA) அமெரிக்கா, கனடா மற்றும் மேற்கு ஐரோப்பிய சந்தைகளில் அனுமதிப் பங்குகளை (Quota) 2006 ஆம் ஆண்டுவரை கொண்டிருந்தது. இதன் கீழ் இலங்கை ஏனைய நாடுகளுடன் போட்டியிட வேண்டிய தேவையின்றி தனக்கு வழங்கப்பட்ட அனுமதிப் பங்குகளுக்கேற்ப ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. ஆனால் 2006 ஜனவரியில் இம்முறைமை நீக்கப்பட்டமையினால் குறிப்பாக அமெரிக்காவிற்கான ஆடைகள் ஏற்றுமதி வீதமானது அண்மைய ஆண்டுகளில் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது. இவ்வீழ்ச்சியை ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி அதிகரிப்பின் மூலமே இலங்கை ஈடுசெய்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ஜி.எஸ்.பி. பிளஸ் முறைமையின் கீழான சலுகைகள் நீக்கப்படுமானால் அமெரிக்கச் சந்தையில் போட்டியிடுவதைப் போன்று ஐரோப்பிய சந்தையிலும் இலங்கை ஏனைய உலக நாடுகளுடன் திறந்த சந்தையில் போட்டியிட வேண்டிய நிலை உருவாகும். இது இலங்கைக்கு இலகுவான ஒரு விடயமல்ல. ஏனெனில சீனா, இந்தியா, பங்களாதேஷ், மெக்சிக்கோ, வியட்நாம் போன்ற நாடுகளை இலங்கையுடன் ஒப்பிடும் போது அதிக மனித வளத்தினையும் ஆடை உற்பத்திக்குத் தேவையான அதிக நார்த்தளத்தினையும் (Fiber Base) கொண்டிருப்பதால் குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடிய நிலையிலுள்ளன. இதனால் இந்நாடுகளுடன் திறந்த சந்தையில் போட்டியிடுவது இலங்கைக்கு ஒரு சவால் நிறைந்த விடயமாகும். குறிப்பாக தொடரும் பெற்றோலிய விலையேற்றம், உயர் பணவீக்கம், உயர் உற்பத்தி செலவு போன்ற காரணிகளால் இலங்கையின் உற்பத்திப் பொருட்களின் விலைகள் சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் ஜி.எஸ்.பி. பிளஸ் முறைமையின் கீழான சலுகைகளை இலங்கை இழக்குமானால் இலங்கையின் உற்பத்திப் பொருட்களின் விலைகள் சர்வதேச சந்தைகளில் இன்னும் அதிகரித்து இலங்கை தனது சந்தை வாய்ப்புகளை இழக்க நேரிடலாம் எனவும் கருதப்படுகின்றது.
தற்போது இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத்தொழில் துறையின் பங்களிப்பு வீதமானது 29 காணப்படும் அதேவேளை கைத்தொழில் துறையின் உபபிரிவான ஆடைகள் உற்பத்தியினை உள்ளடக்கியுள்ள தயாரிப்புத் துறையானது 18 வீதமாகக் காணப்படுகின்றது. இலங்கையின் ஏற்றுமதியினைப் பொறுத்த வரையில் கைத்தொழில் துறைசார் ஏற்றுமதிகளின் பங்களிப்பு வீதமானது தற்போது 78 வீதமாகக் காணப்படும் அதேவேளை அத்துறையினுள் உள்ளடங்கும் ஆடைகள் ஏற்றுமதியானது 61 வீதமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு என அனைத்துக் கோணங்களிலும் இலங்கைப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் பெறும் ஆடை உற்பத்தித் துறையின் சிறந்த செயலாற்றத்திற்கு ஜி.எஸ்.பி.பிளஸ் முறைமையின் கீழான சலுகைகள் இலங்கைக்கு எதிர்காலத்திலும் தொடர்ந்து கிடைப்பதனை உறுதி செய்வது பொருளாதார நோக்கில் மிகவும் அவசிமானதாகும்.

No comments: