பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Monday, October 20, 2008

உணவுப் பற்றாக்குறைக்கான நிதியுதவியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம்

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் உணவுத்தட்டுப்பாட்டையடுத்து இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய உணவுத்தட்டுப்பாட்டை நீக்குவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு உலக வங்கி முன்வந்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு கடன்களைப் பெற்றிருக்கும் இலங்கையின் கோரிக்கையை சாதகமாக ஏற்றுக்கொண்டு இலங்கைக்குக் கடன்வழங்க முன்வந்திருப்பதாக கொழும்பில் ஊடகவியலாளர்கள் சிலரைச் சந்தித்த உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான பிரதித் தலைவர் ப்ரவுல் பட்டேல் கூறியுள்ளார்.
“இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், எவ்வளவு என்பதைகக் கூறுவது கடினமானது. 10 மில்லியன் அல்லது 15 மில்லியன் டொலர்கள் பற்றி நாங்கள் கதைக்கவில்லை. 100 மில்லியன் டொலர் பற்றிக் கேட்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் உலக வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், உணவுத் தட்டுப்பாட்டை நீக்குவதற்கான நிதியத்தின் ஊடாக உலக வங்கியே சரியான நடவடிக்கையை எடுத்த முதலாவது அமைப்பு எனக் கூறியுள்ளார்.
“நாங்கள் 50மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளோம். அவை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன” என பட்டேல் குறிப்பிட்டார்.
“இலங்கை போன்ற உணவுத்தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்குவதற்கு 800 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி தேவைப்படுகிறது. சர்வதேச அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக கடன்கள் வழங்கப்படும்” என்றார் அவர்.இலங்கையில் வறுமை இருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் உலக வங்கியின் ஆசிய பிராந்தியத்தின் பிரதித் தலைவர் ப்ரவுல் பட்டேல், மேல்மாகாணத்தில் 2006-2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் 15.2 ஆகக் காணப்பட்ட வறுமை 7 வீதத்தால் வீழ்ச்சியடைந்திருப்பதாகக் கூறினார்.

No comments: