பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Friday, October 3, 2008

கைத்தொழில் பூங்கா/பேட்டை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்

[K।S.அனோஜி]
பிரதான நகரங்களுடன் ஒப்பிடுகையில் பிராந்தியங்கள் போதாத கைத்தொழில் ஆதாரக் கட்டமைப்பு வசதிகள் இருப்பது, நாட்டின் சமூக – பொருளாதார அபிவிருத்தியில் கொழும்புக்கும் புறநகர்ப் பிரதேசங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளியை விளைவித்துள்ளது. நாட்டின் கைத்தொழிற் கூறுகளின் 80 சதவீதம் மேல் மாகாணத்தினுள் மட்டுமே இடமமைக்கப்பட்டுள்ளதைத் தரவுகள் புலப்படுத்துகின்றன. எனவே, அதனால் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு, பிராந்திய கைத்தொழில் மயப்படுத்தலை மேம்படுத்துவதற்காகவும் கைத்தொழில் அபிவிருத்திச் செயன்முயற்சிகளை நாடு பூராகவும் பரவச் செய்வதற்கும் பிராந்திய கைத்தொழிற் பேட்டை (கைத்தொழிற் பூங்கா) அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்தது. பிராந்திய கைத்தொழில் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் அறிமுகஞ் செய்ததை அடுத்து, பல தசாப்தங்களாக கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் மட்டும் மையப்படுத்தப்பட்ட கைத்தொழில்களின் விரிவாக்கம் இப்போது, 15 கைத்தொழிற் பேட்டைகள் நாடு பூராகவும் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, கணிசமான மட்டத்தில் கிராமப் பிரதேசங்களுக்குச் சென்றுள்ளது. முதலீட்டாளர்கள் இப்பிராந்தியங்களில் கைத்தொழில்களை அமைப்பதற்குத் தேவையான ஆதாரக் கட்டமைப்பு வசதிகள் உள்ள, பொருத்தமான காணியைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சு உதவுகிறது. கைத்தொழிற் பேட்டைகளில் மேலும் புதிய கைத்தொழில்களை அமைப்பதற்கு தனியார் துறையை ஊக்குவிப்பதற்காக கைத்தொழிற் பேட்டைகளில் தற்போதிருக்கும் ஆதாரக் கட்டமைப்பு வசதிகளை தரமுயர்த்துவதற்கு கடந்த அண்மைய ஆண்டுகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1990 இன் 46ஆம் இலக்கக் கைத்தொழில் மேம்படுத்தற் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட பிராந்தியக் கைத்தொழிற் குழுக்கள், முதலீட்டாளர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் இக் கைத்தொழிற் பேட்டைகளில் கைத்தொழில்களைத் தாபிப்தற்குப் பொருத்தமான காணியை விதந்துரைப்பதன் பொருட்டும் பிராந்தியப் பணிப்பாளர்கள், பிராந்தியக் கைத்தொழிற் சேவை நிலையப் பதவியினர் ஆகியோருடன் சேர்ந்து, முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளன. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2005 இறுதிவாக்கில் அபிவிருத்தி செய்த மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 395 ஏக்கர் ஆகும். இந்த நிலப்பரப்பு 293 காணித்துண்டுகளாக பிரிக்கப்பட்டது. அவற்றில் 229 காணித் துண்டுகள் கைத்தொழிலதிபர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் தாபிக்கப்பட்ட 146 கைத்தொழிற் கூறுகள் வர்த்தக உற்பத்தி வேலையை ஆரம்பித்து 12,343 தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன. மேலும் 39 கைத்தொழிற் கூறுகளின் தொழிற்சாலைக் கட்டிட நிருமாண வேலைகள் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.
2005 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் இலங்கை முழுவதிலும் 300 கைத்தொழில்களை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டது. இந்த முயற்சியின் போது கிராம மட்ட செயலாளர் பகுதி ஒவ்வொன்றுக்கும் ஆகக் குறைந்தது ஒரு கைத்தொழிலையாவது நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டது. 2006 ஏப்பிரல் மாதத்திலிருந்து 02 வருடங்களுள் பொறித்தொகுதி, பொறிச்சாதனம், கட்டடங்களில் 30 மில்லியன் ரூபாவுக்குக் குறையாத ஒரு தொகையை இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முதலீடு செய்த புதிய கைத்தொழில் ஒன்றை ஆரம்பித்து 200 பேருக்குக் குறையாமல் நேரடித் தொழில்வாய்ப்பு வழங்குகின்ற ஏதாவது கம்பனி 5 – 10 வருட வரிவிலக்கைப் பெறுவதோடு சுங்கத் தீர்வைகளின் பெறுமதி சேர்த்த வரி ஆகியவற்றிலிருந்தும் விதிவிலக்குப் பெறும். இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் உள்ளூர் முதலீட்டாளர்களும் முதலீடு செய்வதற்கு அழைக்கப்படுகின்றனர்.

No comments: