
உலக பொருளாதார வளர்ச்சி 2009 ஆம் ஆண்டில், 1-1.5 வீதத்தினால் வீழ்ச்சியடையும் எனவும், இது 2008 ஆம் ஆண்டில் எதிர்ப்பார்க்கப்பட்ட 2.9 வீத வளர்ச்சியின் அரைவாசியாக இருக்கும் எனவும் ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் அபிவிருத்திக் குழுவின் தலைமைப் பொருளியலாளர் ஹெய்னர் ப்ளாஸ்பெக் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் ஏற்பட்ட எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு என்பவற்றின் காரணமாக, ஏற்கனவே உலகளாவிய பொருளாதாரம் தட்டுத்தடுமாறிக்கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதிப்பிடப்பட்ட அளவையும் விட அதிகமாக பணவீக்கம் அதிகரித்துச் செல்வதானது இன்று பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பணவீக்கத்தை எதிர்கொள்ள வட்டி வீதத்தினைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் விலை அதிகரிப்பு, பொருட்களின் விலை அதிகரிப்பு என்பவற்றைக் கட்டப்படுத்த இறுக்கமான பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் அபிவிருத்திக் குழுவானது, அபிவிருத்தியடைந்த நாடுகளும், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் மேலும் தமது வளர்ச்சி குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்நாடுகளின் மத்திய வங்கிகள் தமக்கிடையில் பொறுப்புணர்வுடன் கூட்டிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அந்தக் குழு வேண்டுகோள்விடுத்துள்ளது
No comments:
Post a Comment