பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Monday, November 10, 2008

பயோ எரிபொருளும் சோளம் உற்பத்தியும்


இன்றைக்கு உலகின் பெருமளவில் பேசப்படும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று எரிபொருட்கள் தொடர்பான சர்ச்சைகள். அனு ஆற்றலோ, பெட்ரோலிய குழாய் திட்டமோ, எரிவாயு திட்டப்பணியோ, இன்றைக்கு சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தும் இந்த எரிபொருள் சர்ச்சை காலப்போக்கில் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை நழுவிக்கொண்டிருக்கிறது நம்மில் பலருக்கு. இந்த நிலையில் வளர்ந்த முன்னேறிய நாடுகள் பல மாற்று எரிபொருள் என்ற திசையில் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகளையும் வளர்ச்சியயும் ஊக்குவித்ததோடு, அவற்றில் பயன்பாட்டையும் படிப்படியாக அதிகரித்து சுகவாசிகளாக சிரித்துக்கொண்டுள்ளன. வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் அல்லது வளரும் நாடுகளோ இன்றைக்கு செல்வந்த நாடுகளின் பிடியில் உள்ள எண்ணெய் வளங்களின் சந்தை பேரத்தில் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை இழந்துகொண்டிருக்கின்றன. பெட்ரோல், டீசல் வாசத்தோடு கொஞ்சம் அரசியல் வாசமும் வீசுவதுபோல தோன்றுகிறதா, சரி விடயத்திற்கு வருவோம். ஆக இன்றைக்கு எரிபொருட்களான பெட்ரோல், டீசல், எரிவாயு எல்லாம் தோண்டத்தோண்ட சுரக்கும் கேணிபோன்ற நிலை கடந்து, சரக்கு தீர்ந்தது அடுத்த கிணறை பார் என்ற நிலைக்கு ஆளாகிக்கொண்டுள்ளன. ஒரு விதை ஊன்ற ஐம்பதாய், எழுபதாய், நூறாய் பலன் தரும் பயிர்கள் போல் இந்த பெட்ரோலும், டீசலும் இருந்தால் இன்றைக்கு பெட்ரோல் பயிர்கள் நிறைந்த பரப்பாகத்தான் பூமி காட்சியளித்திருக்கும். கற்பனையில் மட்டுமே சாத்தியமாகும் பெட்ரோல் பயிர் உண்மையில் சாத்தியம் என்றால்..?? அட போப்பா கிண்டலடிக்கத்தான் இவ்வளவு நேரம் பேசினது என்று சலிக்கவேண்டாம். உண்மையில் பெட்ரோல் விளையும் பயிர்கள் உண்டு நேயர்களே. ஓ, என்ன மறுபடியும் மூலிக பெட்ரோல் கதையா? என்கிறீர்களா. இல்லை, இல்லை. உண்மையில் பெட்ரோல் விளையும் பயிர்கள் உண்டு. ஆனால் அப்பயிர்கள் பெட்ரோல் என்ற பெயரோடு அழைக்கப்படுவதுமில்லை, அவை பெட்ரோலை தருவதுமில்லை. விளக்கமாக சொல்லவேண்டும் என்றால், பயிர்கள் மூலம் பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள் தயாரிப்பது சாத்தியம் என்பதை இன்றைக்கு பல நாடுகள் ஏற்றுக்கொண்டதோடு, அவற்றை பரவலான அளவில் பயன்படுத்தவும் தொடங்கியுள்ளன. பயோடீசல், எத்தனால் ஆகியவை சோளம், கரும்பு போன்ற பயிர்களிலிருந்து தயாரிக்கப்பட்டு செல்வந்த நாடுகள் பலவற்றில் பயனபடுத்தப்படு வெற்றிகரமான, லாபகரமான எரிபொருளாக மாறியுள்ளன.
வடமேற்கு சீனாவின் சோள விவசாயிகளுக்கு சுன் ஜியாங்ஹொங்கின் சோளத் தட்டுகள், சோளக் கதிர்களின் மீதான் ஆர்வம் மட்டில் வியப்பு மேலிடுகிறது. எதற்காக இந்த நபர் நம்மிடம் வந்து சோள அறுவடைக்கு பின்னர் பயனில்லாமல் வீசி எறியப்படும் தண்டுகள் அல்லது சோளத் தட்டுகளை கேட்கிறார் என்ற கேள்விகள் அவர்களுக்கு உண்டு. வழமையாக கால்நடைத் தீவனமாக அல்லது வெற்றாக எரியூட்டப்பட்டுவிடுகிற இந்த சோளத் தட்டுகளை பயன்படுத்தி எத்தனால் எனப்படும் எரிபொருளை தயாரிக்கும் ஒரு ஆலையை நிறுவவேண்டும் என்பதுதான் சுன் ஜியாங்ஹொங்கின் எண்ணம். சோழியன் குடுமி சும்மா ஆடுமா? எத்தனால் மற்றும் பயோடீசல் எரிபொருள் பயன்பாட்டிலும், சந்தையிலும் ஒரு புரட்சியே செய்யும் அளவுக்கு உலகின் எரிபொருள் தேவை இருக்கிறது. பயனில்லாதது என்று தூக்கியெறிப்பட்ட, கொளுத்து குளிர் காயப்பட்ட இது போன்ற பயிர்களின் மிச்சங்களில் எரிபொருள் தயாரித்து வளரும் நாடுகள் தங்களது தேவையை நிறைவு செய்ய முயற்சிக்கலாம் என்பது மகிழ்ச்சியான சேதியல்லவா. ஆனால் இதெல்லாம் எளிதில் நிகழ்ந்துவிடக்கூடிய மாய வித்தை அல்ல. சவால்கள் நிறைந்த பணியாகும்.
உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால், ஒரு டன் எத்தனால் தயாரிக்க நான்கு டன் சோளத் தட்டுகள் அல்லது தண்டுகள் தேவை. வீணாகப்போகும் இவற்றை சேகரிப்பதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதே சுன் ஜியாங்ஹொங்கின் அனுபவம். இது சீனா போன்ற நாடுகளின் பயோடீசல், எத்தனால் ஆகிய பயோ எரிபொருள் அல்லது உயிரி எரிபொருள் துறையின் நிலையாகும்.
சீனாவில் உயிரி எரிபொருள் என்பது வேண்டுமானால் புதியதாக இருக்கலாம் ஆனால் இந்த எரிபொருளின் தயாரிப்பில் முக்கியத்துவமிக்க கிரெயின் ஃபெர்மன்டேஷன் எனப்படும் நுண்ணுயிர் பதப்பாடு முறை சீனாவில் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பரிச்சயமான ஒன்று என்கிறார் சீன வேளான் பொறியியல் கழகத்தின் தலைவர் ஷு மிங்.
பயோ எரிபொருள் என்று பார்த்தால் அதிகமாக பயன்பாட்டில் இருப்பது எத்தனால் ஆகும். இது பெரும்பாலும் சோளத்திலிருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர சோயாபீன்ஸிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பயோ டீசல் அமெரிக்கா, பிரேசில் நாடுகளில் அதிகம். கரும்பு உற்பத்தி அதிகம் உள்ள பிரேசில் இந்த பயோ எரிபொருள் துறையில் பெரும் பங்கு ஆற்றி வருகிறது. அமெரிக்காவில் இந்த பயோ எரிபொருள் துறை இன்றைக்கு நேற்றல்ல, கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானது. அப்போதைக்கு தேவைக்கதிகமான விளைச்சல், தானியங்கள் கூடுதலாக உள்ள நிலையில் உபரியானதை வீணாக்காமலிருக்க இந்த எத்தனால், பயோ டீசல் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் 2000ம் ஆண்டில் முற்பகுதியில் உலக பெட்ரோல் டீசல் விலை அதிகாகிக்கொண்டிருந்தபோது, மாற்று எரிபொருள் தேவை என்ற நிலையில், இந்த பயோ எரிபொருட்கள் மாற்று எரிபொருளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. புதிய ஆய்வுகள் இந்த பயோ எரிபொருட்கள் முன்பு நினைத்ததைவிட அதிகமான பயன் தருபவை, உற்பத்தித் திறன் கொண்டவை என்று வலியுறுத்துகின்றன.
அன்மையில் பெய்சிங்கில் சிங்ஹுவா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநில வேளாண்துறை உள்ளிட்ட சில துறைகளும், நிறுவனங்களும் ஏற்பாடு செய்த உலக பயோ எரிபொருள் ஆய்வரங்க கூட்டமர்வில் சீனாவின் மிகப்பெரிய அளவிலான வேளான் உற்பத்தி பொருட்கள் பயோ எரிபொருளாக மாற்றப்படும் சாத்தியங்களை உறுதிபடுத்துவதாக சீன தேசிய உயிரி மேம்பாட்டு மைய்த்தின் உயிரி தொழிநுட்பத்துறை சியு ஹொங்வேய் கருத்து தெரிவித்துள்ளார். இன்றைக்கு சீனாவின் ஹேனான், அன் ஹூய் ஹெய்லோங்சியாங், லியாவ்நிங், சிலின் ஆகிய மாநிலங்களில் வழமையான பெட்ரோலுடன், எத்தனால் எனப்படும் உயிரி எரிபொருளை, பயோ எரிபொருளை கலந்து பயன்படுத்தும் முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹேனான், அன் ஹூய் ஹெய்லோங்சியாங், மற்றும் சிலின் மாநிலங்களில் உள்ள நாஙு ஆலைகளில் எத்தனால் உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. சீனாவை பொறுத்த வரை பயோ எரிபொருள் உற்பத்தியை தொழிலாகக் கொண்டால் பெருமளவு லாபம் பார்க்கமுடியாது. காரணம் இங்கே பெட்ரோல் டீசல் விலை இந்தியாவிலோ அல்லது வேறு சில நாடுகளில் உள்ளது போலவோ அதிகம் இல்லை. ஆனால் அதர்காக இந்த மாற்று எரிபொருளின் ஆக்கப்பூர்வமான பலன்களை ஒதுக்கிவுட முடியுமா என்ன. அன்மையில் சென்னையில் தேசிய வேளான் அறக்கட்டளை மையத்தில் வைத்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் சந்த்த்தபோது 2020ம் ஆண்டுக்குள் உணவு உற்பத்தியை தொழில்நுட்ப உதவியுடன் இருமடங்காக அதிகரிக்க விவசாயிகள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் தொடர்ந்து ஒரே பயிராக பயிர் செய்யாமல் சுழற்சி முறையில் பயிர்களை மாற்றி மாற்றி பயிர் செய்ய வேண்டும் என்றும் இதன்காரணமாக அதிக உற்பத்தி கிடைப்பதுடன் மண்ணின் வளமும் அதிகரிக்கும் என்றும் கூறிய குடியரசுத் தலைவர்,
நாட்டில் டீசல் எண்ணை இறக்குமதிக்காக ரூ.13 ஆயிரத்து 500 கோடி செலவாகிறது. இந்த நிலையில் பயோ-டீசல்தான் மாற்று எரிபொருள். காட்டாமணக்கில் 22 சதவீதம் எண்ணை உள்ளது. எனவே, விவசாயிகள் பயோ-டீசல் உற்பத்திக்காகவும், தங்களது வருமானத்தை பெருக்கிக்கொள்ளவும், விளைநிலங்களில் காட்டாமணக்கு பயிரிட முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக அரசின் 2006 - 2007 திருத்த நிதியறிக்கையில் விவசாயிகளது நலன் பற்றி குறிப்பிடும்போது, எத்தனால் பெட்ரோலிற்கு மாற்றாகவும், பயோ டீசல், டீசலிற்கு மாற்றாகவும் பயன்படுகிறது. முதல் கட்டமாக பெட்ரோலுடன் எத்தனால் 5 விழுக்காடு கட்டாயமாகக் கலந்து பயன்படுத்த நடுவணரசு ஆணையிட்டுள்ளது. எனவே, அத்தனை சக்கரை ஆலைகளிலும் எத்தனால் உற்பத்தி செய்வதற்கான வசதியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். சர்க்கரைச் சோளம், சர்க்கரைக் கிழங்கு மூலமும் எத்தனால் தயாரிக்கலாம் என்பதனால் இவைகளை பயிர் செய்ய விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கப்படும் என்றும் ஜெட்ரோப்பா எனப்படும் காட்டாமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பயோ டீசலாக, டீசலிற்கு மாற்றாக பயன்படும் என்பதால் தரிசு நிலங்களில் காட்டாமணக்கு விளைவிக்க ஊக்குவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக பயோ எரிபொருளை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் உலகின் இரு பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளான சீனாவும் இந்தியாவும் ஊக்கமுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இன்றைக்கு உலக பொருளாதார வளர்ச்சியில் தங்களது அசுர வேக வளர்ச்சியால் மற்ற எல்லா நாடுகளையும் வாயைப் பிளக்கச் செய்யும் இந்த இரு பெரும் நாடுகள் முனைப்புடன் செயல்பட்டால், வேளான்மையை அடிப்படையாகக் கொண்ட இந்த நாடுகளின் கையில் பயோ எரிபொருட்களின் எதிர்காலம் என்பதை மாற்ற இயலாது.

Friday, November 7, 2008

பொருளாதார தாராளவாதமும் மக்கள் உரிமைகளும்

1. தாராளவாதத்தின் இரண்டு முகங்கள்: ஒரு கண்ணோட்டம்

கடந்த இரு தசாப்தங்களாக நவதாராளவாதம் உலகளாவியரீதியில் பரவி வருவதைக் காண்கிறோம். இந்தப் போக்கின் அடிப்படையாக அமைந்திருப்பது சுதந்திரவர்த்தகக் கொள்கையும் தனியுடைமையாக்கலுமாகும். அரசியல் தாராளவாதத்தின் முக்கிய விழுமியங்களாகக் கருதப்படும் தனிமனித சுதந்திரம், மனித உரிமைகள் போன்றவற்றிற்கும் இந்தப் பொருளாதார அடிப்படைக் கொள்கைக்குமிடையே முரண்பாடுகள் உண்டு. அதாவது லிபரலிசத்தின் அரசியல் ஜனநாயக இலட்சியங்கள் அதன் பொருளாதார இலட்சியங்களுடன் முரண்படுகின்றன.
தாராளவாதத்தின் உலகளாவிய எழுச்சிக் காலகட்டத்தில் - அதாவது கடந்த இரு தசாப்தங்களில் - மனித உரிமைமீறல்கள் அதிகரித்துள்ளன. இதற்கு ஒரு முக்கிய காரணம் பல தெற்கத்திய நாடுகளில் பொருளாதார தாராளவாதக் கொள்கைகளின் அமுலாக்கல் தொழிலாளர்களினதும் பொதுமக்களினதும் அரசியல் உரிமைகளை நசுக்கிவருவதே ஆகும். தெற்கத்திய நாடுகளில் மட்டுமல்ல கிழக்கு ஐரோப்பாவிலும் இந்தநிலையைக் காணக்கூடியதாகவுள்ளது.
லிபரலிசத்தின் பொருளாதாரத்திற்கும் அரசியலுக்குமிடையிலான இந்த முரண்பாடு வரலாற்றுரீதியானது. அரசியல் ஜனநாயகமாக்கலின் வளர்ச்சியை ஏற்படுத்த சந்தைப் பொருளாதாரத்தை அரசு பலவகையில் நெறிப்படுத்தல் கட்டுப்படுத்தல் அவசியம் என்பதை மேற்கு ஐரோப்பாவின் வரலாறு நன்கு காட்டுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரித்தானியாவின் அரசியல் பொருளாதார போக்குகளை ஆய்ந்தறிந்த கார்ல் பொலன்யி கூறுவதுபோல் அந்நாட்டின் முதலாளித்துவ அபிவிருத்தியின் வரலாறு ஒரு இரட்டை இயக்கப்பாட்டினைக் கொண்டிருந்தது. ஒருபுறம் சந்தை சக்திகள் பரவி எழுந்தன. இவை பண்டமயமாக்கலை முன்தள்ளின. மறுபுறம் மனித உழைப்புச்சக்தியும் இயற்கை வளங்களும் பண்டமயமாக்கப்படும் இந்தப் போக்கிற்குச் சமூகத்திடமிருந்து பலவிதமான எதிர்ப்புக்கள் தோன்றின. தொழிலாளர்கள் அடிப்படை உரிமைகளைக் கோரினர். ஆளும் வர்க்கத்தினால் மூலதனத்திற்கும் உழைப்பிற்குமிடையிலான முரண்பாட்டைச் சந்தைச்சக்திகளிடம் மட்டுமே விட்டுவிட முடியவில்லை. தொழிற்சங்கங்கள் வேலைநேரம், கூலி, வேலைத்தள சூழல் போன்றவற்றைப் பிரதான போராட்ட விடயங்களாக்கின. இந்த வர்க்கப் போராட்டத்தின் விளைவுகளில் ஒன்று உழைப்புச்சக்திச் சந்தையின் நெறிப்படுத்தலாகும். அரசினால் பலவிதமான சட்டங்களும் விதிமுறைகளும் உருவாக்கப்பட்டன. இதேபோன்று பொதுமக்கள் அமைப்புக்கள், வறுமை குறைப்பு, சூழல் பாதுகாப்பு போன்றவற்றிற்காகப் போராடிச் சில வெற்றிகளைப் பெற்றன. இந்தப் போராட்டங்கள் இன்றும் தொடருகின்றன. நிலம் பண்டமயமாக்கப்பட்டபோதும் சூழல் பாதுகாப்புச் சட்டங்களும் விதிகளும் நிலச்சந்தையை சிலவழிகளில் நெறிப்படுத்த உதவுகின்றன.
சகல விருத்தி பெற்ற முதலாளித்துவ நாடுகளின் வரலாற்றிலும் முரண்பாடான இந்த இரட்டை இயக்கப்பாட்டினைக் காணலாம். இதன் செயற்பாடுகளினால் நடைமுறை முதலாளித்துவ பொருளியல் பாடநூலில் முன்வைக்கப்படும் தூயசந்தைப் போட்டி பொருளாதார மாதிரியைவிட பலவகையில் வேறுபட்டிருக்கிறது. நிறுவனமயமாக்கப்பட்டுள்ள மனிதஉரிமைகள், தொழிற்சங்கங்கள், சூழல் இயக்கங்கள், பெண்ணுரிமை அமைப்புக்கள் போன்றவை முதலாளித்துவத்தின் ஜனநாயக முகத்தினைச் சார்ந்தவை. இவை அதே முதலாளித்துவத்தின் மற்றைய முகத்தின் அம்சங்களான சந்தைப்போட்டி, தனியுடைமை லாபநோக்கு போன்றவற்றுடன் முரண்படுகின்றன. இறுதி ஆய்வில் இந்த முரண்பாட்டிற்கு முதலாளித்துவ அமைப்பிற்குள் தீர்வுகாணமுடியாது. ஆயினும் மக்களுரிமைகளின் குறைந்தபட்ச நிறுவனமயமாக்கலின் நடைமுறை முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. விருத்தியடைந்த முதலாளித்துவ அமைப்புகளின் இந்த வரலாற்றம்சம் இன்று முதலாளித்துவம் விருத்திபெறும் நாடுகளின் தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் சில பாடங்களைத் தருகின்றது. சந்தைச்சக்திகளின் பாதகமான தாக்கங்களுக்கெதிராக அணிதிரண்டு போராடுவதன்மூலமே குறைந்தபட்ச உரிமைகளையாயினும் வென்றெடுக்க முடியும். அதேவேளை இந்த உரிமைகளின் நிரந்தரமான நிறுவனமயமாக்கலையும் நியாயமான செயலாக்கலையும் உத்தரவாதப்படுத்த தொடர்ச்சியான வெகுஜன இயக்கங்களும் அவசியம்.

2. இன்று நாம் எதிர்நோக்கும் சவால்

மூலதனத்தின் சர்வதேச மயமாக்கல் இதை இன்று பூகோள மயமாக்கல் - புடழடியடணையவழைn - என அழைக்கிறார்கள். முன்னெப்போதையும்விட பரந்து ஆழ்ந்து நகரும் காலமிது. இந்தக் காலகட்டத்தில் பொருளாதார தாராளமயமாக்கல் பல தேசியப் பொருளாதாரங்களைப் பாதகமாகத் தாக்கியுள்ளது. சமீப காலங்களில் ஜப்பானையும் தென்கிழக்காசிய நாடுகளையும் தாக்கிய பொருளாதார நெருக்கடிகள் உலகப்பொருளாதார அமைப்பின் நெறிகெட்ட இயக்கத்தன்மைகளை நன்கு வெளிப்படுத்தின. ஆசியநாடுகளின் நெருக்கடிகள் தொடரும் அதேவேளை கிழக்கு ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் நெருக்கடிகள் ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கக்கண்டமும் பல பாதகமான விளைவுகளை அனுபவிக்கிறது.
மேலும் குறிப்பாகக் கூறுவதாயின் பல்வேறு வறிய நாடுகளில் வேலையில்லாதோர் தொகை அதிகரித்துள்ளது. அரசாங்கங்கள் சமூகவிருத்திக்கான செலவினத்தைக் குறைத்ததால் பள்ளிக்கூடம் செல்லமுடியாத குழந்தைகளின் தொகையும் பொதுமக்களின் பிரச்சினைகளும் அதிகரித்துள்ளன. கல்வி, சுகாதாரத்துறைகளின் தனியுடைமையாக்கலினால் கணிசமானோர் இந்த வசதிகளிலிருந்து நிரந்தரமாக வெளிவாரிப்படுத்தப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் உரிமைப்போராட்டங்கள் நசுக்கப்படுகின்றன. விலைவாசியேற்றம் தொழிலாளர்களை மட்டுமல்ல விவசாயிகளையும் பாதிக்கிறது.
இன்று உழைக்கும் மக்கள் தமது உரித்துடைமைகள் பலவீனமாக்கப்படுவதைத் தடுக்க முடியாத நிலையிலுள்ளனர். ஒருபுறம் அடிப்படைச் சமூகசேவைகளுக்கான அரசசெலவு குறைக்கப்படுகிறது. இச்சேவைகள் படிப்படியாக தனியார்துறைமயமாக்கப்படுகின்றன. மறுபுறம் உழைப்பாளிகளின் ஊதியம் போதியளவு வளரவில்லை. தரமான சமூகசேவைகளை விலைகொடுத்து வாங்குமளவிற்கு பெரும்பாலான தொழிலாளரிடம் கொள்வனவு சக்தியில்லை. இதனால் இவர்கள் படிப்படியாகத் தரம் குறைந்துகொண்டிருக்கும் அரச சமூகசேவை நிலையங்களிடம் செல்கிறார்கள். அரசினால் வழங்கப்படும் சமூகசேவைகளின் தரம் உயர்த்தப்படாவிட்டால் இந்த மக்களின் எதிர்கால சந்ததிகளின் கல்வி, சுகாதார நலன்கள் நிரந்தரமாகப் பாதிக்கப்படும். நகர்ப்புறத் தொழிலாளர்கள், கிராமப்புற வறிய விவசாயிகள், கூலியுழைப்பாளர்கள் (தோட்டத்தொழிலாளர்கள் உட்பட) போன்ற சமூகப்பிரிவுகளும் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்படும் பகுதிகளில் வாழும் மக்களும் தரம்குறைந்த சமூகசேவைகளின் நீண்டகால பாதகமான விளைவுகளை அனுபவிக்கிறார்கள்.
இத்தகைய சமூக அரசியல் பிரச்சினைகள் தலைவிரித்தாடும் நிலையிலும் சர்வதேச நிதிநிறுவனங்களும் மேற்கத்தைய அரசியல் தலைமைகளும் பொருளாதார தாராளவாதத்திற்கு தொடர்ந்தும் புகழ்பாடுகின்றன. இந்தப் பிரச்சினைகள் தற்காலிகமானவை, தவிர்க்கமுடியாதவை என சர்வதேசநாணய நிதியமும் உலகவங்கியும் கூறுகின்றன. இதுதான் நீண்டகால அபிவிருத்திக்கு சமூகம் கொடுக்கும் விலை. ஆனால் இந்த விலையைவிட வரப்போகும் சமூகநன்மைகளின் பெறுமதி அதிகமானதென அவை ஆறுதல் கூறுகின்றன. ஆனால் எனது அபிப்பிராயத்தில் இந்தப் பிரச்சினைகளுக்கு இப்போ தீர்வு கிடைக்காவிடில் சமூகத்தின் கணிசமானோர் நீண்டகாலத்தில் பெரிதும் பாதிக்கப்படப்போகின்றனர்.
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இன்றைய பொருளாதார தாராளவாதிகளுக்கான பதிலை விருத்திபெற்ற முதலாளித்துவநாடுகளின் வரலாறு கொடுக்கிறது. அந்த வரலாற்றின் இரட்டை இயக்கப்பாட்டினை நாம் புரிந்துகொள்ளல் இன்றைய சவாலை எதிர்நோக்க ஓரளவு உதவும். இங்கு நான் குறிப்பிட்ட சமூக அரசியல் பிரச்சினைகளை மற்றைய பல பிரச்சினைகளுடன் இணைத்துப் பார்த்தலும் அவசியமாகும். இப்படி அணுகும்போது நாடுகளிற்கிடையிலான விசேட வேறுபாடுகள் முக்கியத்துவம் அடைகின்றன. உதாரணமாக இலங்கையை எடுத்துக்கொள்வோம். இங்கு குறிப்பிட்ட பிரச்சினைகள் எல்லாம் இருக்கும் அதேவேளை இலங்கையில் இன்னும் தீர்த்துவைக்கப்படாத தேசியஇனப்பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. இராணுவமயமாக்கப்பட்டுள்ள இப்பிரச்சினை மற்றைய பிரச்சினைகளை அரசியல்ரீதியில் பின்தள்ளியுள்ளது. ஆயினும் மற்றைய பிரச்சினைகளும் தொடர்ந்து ஆழமாகிவருகின்றன. அதுமட்டுமல்ல அரசின் உள்நாட்டு யுத்தக்கொள்கையும் நடைமுறையும் தமிழ்மக்களை பெரிதும் பாதிக்கும் அதேவேளை சகலமக்களினதும் அடிப்படை சுதந்திரங்களையும் பாதிக்கின்றது. தென்னிலங்கை அரசியலையும் துப்பாக்கிக் கலாச்சாரம் ஆக்கிரமித்துள்ளது. வன்செயல்களற்ற ஒரு உள்@ர்த் தேர்தலைக்கூட அரசாங்கத்தினாலும் பிரதான எதிர்க்கட்சியான ரு.N.P.யினாலும் நடத்த முடியவில்லை.
இலங்கைபூராவிலும் மக்கள் உரிமைகள் மீறப்பட்டுவரும் இந்த நிலையில் நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள், உரிமைமீறல்களை மேலும் வலுப்படுத்துகின்றன. ஆனால் தொழிலாளர் உரிமைகளுக்கான சமூகநல உத்தரவாதங்களுக்கான போராட்டங்கள் மற்றைய ஜனநாயகப் போராட்டங்களுக்கு ஒரு பலமான ஆதர்ஷத்தையும் நேரடி உந்துதலையும் வழங்கவல்லன. தேசியஇனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு இல்லாவிடில் உள்நாட்டு யுத்தம் தொடரும். இது தொடர்வது பொதுவான உரிமை மறுப்புகளுக்கு உதவுகிறது. இங்கு நாம் இலங்கையின் தெற்கில் வாழும் மக்களின் உரிமைப்போராட்டத்திற்கும் வடகிழக்கில் வாழும் மக்களின் உரிமைப்போராட்டத்திற்கும் இடையே ஒரு முக்கிய தொடர்பினைக் காண்கிறோம். தமிழ்மக்களின் இனவிடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாட்டினை வலுப்படுத்த இந்தத் தொடர்பு பயன்படும். அதேநேரம் தெற்கில் இடம்பெறும் மக்களுரிமைப் போராட்டங்கள் வடகிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஆதர்ஷத்தை வழங்கும். அங்கே ஜனநாயகத்திற்கான போராட்ட நிலைமைகள் இராணுவமயப்படுத்தலாலும் துப்பாக்கிக் கலாச்சாரத்தாலும் நசுக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றைய உலகின் அரசியல் பொருளாதாரப் போக்குகளின் உள்நாட்டுத்தாக்கங்களையும் இவற்றிற்கெதிராக தொழிலாளர்களும் பொதுமக்களும் எடுக்கும் முயற்சிகளையும் கணக்கிலெடுக்காது இனவிடுதலைக்கு வியாக்கியானம் கொடுக்க முடியாது. இந்தப்பரிமாணத்தை உள்வாங்குதல் சகல இனவிடுதலைப்போராட்டங்களின் கடமை. இந்த உள்வாங்கல் இனஎல்லைக்கோடுகளைக் கடந்து செயற்படும் பிரச்சினைகளுக்கும் இனரீதியாகத் தாக்கும் பிரச்சினைகளுக்கும் இடையிலான உறவுகளைப் புரிந்துகொள்ள உதவும். அந்தப்புரிந்துணர்வு பல மட்டங்களில் இடம்பெறும் உரிமைப்போராட்டங்களுக்கிடையிலான தொடர்புகளைப்பலப்படுத்த உதவும்.

3. முடிவுரை

பொருளாதார தாராளவாதத்தின் நடைமுறைகள் மக்களுரிமைகளை மறுப்பதையும் அதை எதிர்த்து அணிதிரண்ட தொழிலாளர் மற்றும் பொதுமக்கள் அமைப்புக்களுக்கூடாக போராட்டங்கள் நடத்தவேண்டிய அவசியத்தையும் பற்றிப் பார்த்தோம். இன்றையநிலையில் இந்தப் போராட்டங்களை நீண்டகாலநோக்கில் அணுகி அவற்றை மக்கள் ஜனநாயகப் புரட்சிமீட்டெடுப்பின் அம்சங்களாக்குவது அடிப்படைச் சமூகமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உதவும். மக்கள் ஜனநாயகப்புரட்சியின் மீட்டெடுப்பிற்கு அப்புரட்சிபற்றிய மீள்சிந்திப்பு அவசியமாகும். இது தனிமனிதர்களால் அன்றி போராட்ட இயக்கங்களின் கூட்டுமுயற்சிக்கூடாக செயற்படுத்துதலே சரியான நடைமுறையாக எனக்குப்படுகிறது. இந்தக்கூட்டு முயற்சியும் போராட்டங்களும் இன்றைய முதலாளித்துவத்திற்கு அப்பால் ஒரு புதிய சமூகஅமைப்பு பற்றிய கற்பிதத்திற்கு அவசியமாகும். அதாவது சோசலிசம்பற்றிய புதிய கற்பிதத்திற்கான வழிமுறையாக இது அமைகிறது.