பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Wednesday, September 24, 2008

மீண்டும் பணவீக்கம்

மீண்டும் பணவீக்கப் பிரச்சினை இந்தியப் பொருளாதாரத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
1960ல் தொடங்கி 2000 - 01ஆம் ஆண்டுவரை 8 முதல் 9 சதவீதமாக இருந்த பணவீக்க அளவு, மத்திய அரசின் விரைவான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் 4லிருந்து 5 சதவீதமாகக் குறைந்தது.
தற்போது மிக அதிக அளவிலான பணஅளிப்பு மற்றும் வங்கிக்கடனில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக பணவீக்கம் 6 சதவீதத்தைத் தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
பங்குச் சந்தையின் தொடர்ந்த ஏறுமுகம் மற்றும் அசையா சொத்துகளின் அபரிமித விலைஉயர்வு ஆகியன இதன் விளைவே என்பதில் ஐயமில்லை.
தற்போதைய பணவீக்கப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் மத்திய அரசு, அதாவது நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் எதிர்கொண்டுள்ள சவால்களை இரண்டாகப் பிரிக்கலாம்.
ஒன்று, இந்த பணவீக்க உயர்வை எவ்வாறு கட்டுப்படுத்துவது; அடுத்து 9 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காதவண்ணம் பணவீக்கத்தை எங்ஙனம் கட்டுப்படுத்துவது என்பதாகும்.
அடிப்படையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு பொதுவாக நான்கு வித நடவடிக்கைகளை எடுப்பதுண்டு. அவை
பணக்கொள்கை,
நிதிக்கொள்கை,
வர்த்தக மற்றும்
செலாவணிக் கொள்கை என்பவை ஆகும்.
பணக்கொள்கை தொடர்பான நடவடிக்கையின் மூலம் பண அளிப்பையோ அல்லது வட்டி விகிதத்தையோ கட்டுப்படுத்த இயலும்.
நிதிக்கொள்கை தொடர்பான நடவடிக்கையின் மூலம் தீர்வை தளர்வுகளுக்கு வழிவகுப்பது; வர்த்தகக் கொள்கையின் மூலம் ஏற்றுமதி, இறக்குமதிக் கட்டுப்பாடு மற்றும் தளர்வுக்கு வழிகோலுவது; செலாவணிக் கொள்கையின் மூலம் ரூபாய் மதிப்பை வலுப்படுத்தி, இறக்குமதிப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது ஆகும்.
பணவீக்கத்திற்குக் காரணமான பணசுழற்சி மற்றும் பண உருவாக்கம், பொருள்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது என்பது பரவலான கருத்து. ஆகவே பணவீக்கப் பிரச்சினையை பணவளர்ச்சியை மட்டுப்படுத்துவதன் மூலமோ அல்லது வட்டி விகிதத்தின் மூலமோதான் கட்டுப்படுத்த இயலும்.
அண்மையில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கையும் இதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
அதேவேளையில், தற்போதைய பணவீக்கம் சந்தைத் தேவையின் அடிப்படையில் எழுந்த காரணியாக இல்லாமல் சந்தை அளிப்பின் பின்புலத்தால் எழுந்த காரணியாக இருப்பதால் இதைக் கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் ரிசர்வ் வங்கி பெரிய அளவில் பங்களிப்பது என்பது இயலாத செயலாகும்.
ஆகவே நிதியமைச்சகத்தின் நிதிக்கொள்கை தொடர்பான நடவடிக்கைகள் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
சிமெண்ட், அலுமினியம், ரசாயனப் பொருள்கள் மற்றும் சில குறிப்பிட்ட மூலதனப் பொருள்களின் மீதான சுங்கத் தீர்வையை ஏற்கெனவே கணிசமாகக் குறைத்ததன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் நிதியமைச்சகமும் களத்தில் இறங்கியுள்ளது ஆரோக்கியமான சமிக்ஞையாகும்.
இதன் மூலம் உயரும் பணவீக்கத்தின் எதிர்மறையான தாக்கத்தை வெகுவாகக் குறைக்க முடியும்.
இதுபோன்ற பன்முக நடவடிக்கைகளால் சில நேரங்களில் பணவீக்கம் காணாமல்போய் பணவாட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை.
ஆனால் இன்றைய அளவில் பணவீக்கம் என்பது உலகளாவிய பிரச்சினை. வளர்ந்த, வளர்ச்சியடைந்து வரும் மற்றும் பின்தங்கிய நாடுகள் அனைத்திலும் உள்ள மத்திய வங்கிகள் அனைத்தும் பணக்கொள்கையின் மூலம் பணவீக்கத்தை அணுகும் போக்கு தொடர்ந்து வருகிறது.
அதேவேளையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவிகிதத்தை உயர்த்துவது என்ற வழக்கமான நடவடிக்கையைத் தாண்டி சிந்திக்கவும், செயல்படவும் தொடங்க வேண்டியது அவசியமாகும். இந்தியா இதற்கு விதிவிலக்கல்ல.
மேலும் வட்டி விகித உயர்வு என்ற நடவடிக்கையைப் பெருமளவு சார்ந்திருப்பது என்பது பொருளாதாரத்தை இறக்கநிலைக்குக் கொண்டு செல்லும் என்ற வாதத்தை இந்தியா கடந்த காலங்களில் நிரூபணமாக்கியுள்ளது.
பொருளாதார உண்மை நிலவரம் பற்றிய முழுமையான தகவல்கள் ரிசர்வ் வங்கியிடம் இல்லாதது பணக்கொள்கையைக் கொண்டு மட்டும் தற்போதைய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் என்ற வாதத்தைப் பொய்யாக்குகிறது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் இந்தியாவின் 10 சதவீத வளர்ச்சி இலக்கு பாதிக்கப்படும் என்ற ஐயத்துக்கும் அடிப்படை இல்லை.
இருப்பினும் 9 சதவீத பொருளாதார வளர்ச்சி, 6 சதவீத பணவீக்கம் என பயணத்தைத் தொடங்கியுள்ள இந்தியா, 10 சதவீத வளர்ச்சி மற்றும் 2 சதவீத பணவீக்கம் என 10 ஆண்டுகளாகப் பயணத்தைத் தொடர்ந்து வரும் சீனாவிடமிருந்து கற்க வேண்டியது நிறையவே உள்ளது.
இது விரிவுரையாளர் திருவள்ளுவரின் கட்டுரையின் ஒரு பகுதி(K.S.அனோஜி)

No comments: