பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Thursday, December 4, 2008

உலக உணவுப் பாதுகாப்பு சில தீர்மானங்கள்

கடந்தஆண்டு ஜீன் முதல் வாரத்தில் ரோம் நகரில், “உலக உணவுப் பொருள் நிலை” பற்றிய உயர்நிலை மாநாடு நடைப்பெற்று சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இம் மாநாட்டில் 180 உலக நாடுகள் பங்கேற்று விவாதித் திருப்பது உலக உணவுப் பொருள் நிலைகுறித்த முக்கியத்துவத்தையும், அவசரத்தையும் நமக்கு நன்கு உணர்த்துகிறது. பொதுவாக வளர்ச்சியடைந்த நாடுகளும் சரி, வளர்ந்து வரும் நாடுகளும் சரி, உணவுத் தேவையை முன்கூட்டியே கணக்கிட்டு உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருவது யாவரும் அறிந்ததே!
உணவு தானியப் பற்றாக்குறை அல்லது தொடர்ந்து வாட்டும் வறுமையில் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் சில நாடுகளைக் கூட (எத்தியோப்பியா, சோமாலியா) மற்றநாடுகளின் அபரிமிதமான தானிய உற்பத்தியைக் கொண்டு காத்து வந்திருக்கின்றோம். 1930களின் இறுதியில் நிலவிய உலகப் பெருமந்தம் (Great Depression of World Economy) அதன்பிறகு ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றின் தாக்கம் உலக நாடுகளைப் பெரிதும் சிந்திக்க வைத்தது. தொழிற்துறை வளர்ச்சி வேகம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவை நிர்ணயிக்கும் முக்கிய காரணி என்று மிகவும் நம்பப்பட்ட அந்தக் காலகட்டத்தில் வேளாண்மைத் துறையின் வளர்ச்சியும், உணவு உற்பத்தியுமே ஒரு நாட்டில் நிலையான வளர்ச்சியை ஊக்கப் படுத்தும் என்ற உண்மை உணரப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும், அன்றைய ஒருங்கிணைந்த ரஷ்யாவும் 1940 மற்றும் 1950 களில் உணவு உற்பத்தி பெருக்கத்தில் பெரிதும் தனது கவனத்தையும், ஆய்வையும் செலுத்தியது. அவரவர் வசதிக்கும், தேவைக்குகேற்ப திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டன. உயர் விளைச்சல் தரும் ரகங்கள், அதிகரிக்கப்பட்ட விளைநிலங்கள், நீர்ப்பாசன வசதி, ரசாயன உரக் கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாடு, வேளாண்மையில் இயந்திரங்களின் அறிமுகம் ஆகியவை மேற்கூறிய காலகட்டத்தில் வேளாண்மைப் புரட்சிக்கு உலக அளவில் வித்திட்டது.
இதன் தாக்கம் நம் நாட்டிலும் பெரிதும் உணரப்பட்டது. இதன் விளைவாக 1930 மற்றும் 1940களில் வறுமையிலும், பஞ்சத்திலும் பாதிக்கப்பட்ட நமது நாடு நவீன வேளாண் உற்பத்தியின் அவசியத்தையும், முக்கியத்துவத் தையும் உணர்ந்து ரஷ்யப் பொருளாதார முறையின் ஐந்தாண்டு திட்டங்களைப் போல் வகுத்துச் செயல்பட முனைந்தது. முதல் மற்றும் இரண்டாவது திட்ட காலத்தில் (1951-56 மற்றும் 1956-1961) வேளாண் உற்பத்தியில் தன்னிறைவை எட்ட வழிவகை ஏற்பட்டது. அதிவேகமாக வளர்ந்து வந்த மக்கள் தொகையின் அளவிற்கு ஏற்ப உணவளிக்கச் சாத்தியப்பட்டது. இன்றுவரை உலகின் இரண்டாவது மக்கள் தொகையைப் பெற்றிருக்கும் நமது நாட்டில் உணவுப் பற்றாக்குறையும், பட்டினிச்சாவும் இல்லை என்பது நமது முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
ஆனால் சமீபத்தில் ரோம் நாட்டில் கூடிய 180 உலக நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் “உலக உணவு நிலை” பற்றி விரிவாக விவாதிக்க வேண்டியதின் அவசியத்தையும், நம்முன் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வரும், காலநிலை மாற்றம் பற்றியும் உயிரி எரிசக்தி பற்றியும் சில உண்மை நிலைமையையும், எதிர் கொள்ள வேண்டிய செயல்பாடுகள் பற்றியும் அலசி ஆராய்ந்துள்ளனர்.
இன்றைய நிலையில், மிகவும் கவலை அளிக்கக்கூடிய செய்தியாக, நாளும் உலக அளவில் அதிகரித்துவரும் உணவுப் பொருட் களின் விலைதான் என்று இம்மாநாடு சுட்டிக் காட்டியுள்ளது. இதே நிலை தொடருமானால் வரும் ஆண்டுகளில் கிட்டத்திட்ட 100 மில்லியன் மக்கள் பஞ்சத்தில் தள்ளப்படுவார்கள் என்கிற கணக்கும் இம்மாநாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா.சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (ஊஅஞ) டைரக்டர் ஜெனரல் ஜேக்ஸ் டயாஃப் இம்மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் போது, உணவுப் பற்றாக்குறை என்பது வருங்காலத்தில் தவிர்க்க முடியாமல் போய்விடும் ஆபத்து இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம், வளர்ந்துவிடும் மக்கள் தொகை, உணவு உற்பத்தி செய்யும் நாடுகளின் வேளாண்மைத் தேக்கம், உலக வாணிபம் ஆகியவற்றைநாம் கடுமையாக எதிர்கொண்டு சமாளிக்கவில்லை என்றால் 2015க்குள் திட்டமிட்டுள்ள உலக வறுமை ஒழிப்பு எனும் தீர்மானம் பயனற்றதாகிவிடும் என்று எச்சரித்துள்ளார்.
சமீபத்திய ரோம் மாநாட்டின் முக்கிய அம்சமாகக் கருதப்படுவது உலகின் உணவுப் பொருள் உற்பத்தி நிலையை ஆராய்ந்து வேளாண் பொருட்களின் வழங்கலை உலகம் முழுக்க சீர் செய்வதுடன் அவற்றின் விலையை நிலைப்படுத்துவதும் ஆகும். இம்முயற்சி மேற் கொள்ளப்படாவிட்டால், சீரற்றவேளாண் உற்பத்தியும், நிலையற்றவேளாண் பொருட்கள் விலையும் உலக அரங்கில் ஒரு பெரிய பொருளாதார சீர்கேட்டை உருவாக்கிவிடும் என்ற அச்சமும் இம்மாநாட்டில் முன்வைக்கப் பட்டுள்ளது.
வளர்ந்து வரும் மக்கள் தொகை ஒருபுறம், உயர்தரம் வாய்ந்த வாழ்க்கை நிலையில் உள்ள நாடுகள் மறுபுறம், உணவுத் தேவைக்கே அல்லல்படும் நாடுகள் இன்னொருபுறம் என்றநிலையை இனியும் மாற்றாவிட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும் என்றகருத்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உணவுப் பொருள் பற்றாக்குறைஅல்லது தட்டுப்பாட்டிற்கு சமீபத்திய காரணியாக உயிரி எரிபொருள் (க்ஷண்ர்-ச்ன்ங்ப்) உருவெடுத்துள்ளதாகவும் கருத்து வெளிப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எழுந்துள்ள முக்கிய தீர்மானம் அல்லது முடிவு என்ன வென்றால் வளர்ந்துவரும் நாடுகளிலும், மூன்றாம் உலக நாடுகளிலும் மற்றவற்றையும் விட வேளாண் துறைவளர்ச்சிக்கும், உணவு உற்பத்திக்கும் முக்கியத்துவமும், உதவியும் அளிக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து நாடு களும் வேளாண்துறைமுதலீட்டையும், வேளாண்சார்ந்த வாணிபத்தையும், கிராமப் புறவளர்ச்சியையும் ஊக்குவிக்கவேண்டும். குறிப்பாக வேளாண்சந்தை சீர்படுத்தப்பட வேண்டும் என்பதேயாகும்.
இத்தீர்மானத்தில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்ட போதிலும், சில நாடுகள் இக்கருத்தை விமர்சனம் செய்யத் தயங்கவில்லை. வளர்ச்சியடைந்த நாடுகளின் வேளாண் மானியமுறையும் ஐ.எம்.எஃப், உலகவங்கி போன்ற அமைப்பினை நாம் அதிகமாக சார்ந்திருப்பதாலும் வேளாண் கொள்கையில் பெரிய மாற்றத்தை உலக நாடுகள் ஏற்படுத்த முடியவில்லை என்றகருத்தை அர்ஜென்டினா, மற்றும் இதர லத்தீன் அமெரிக்க நாடுகள் இம்மாநாட்டில் வலியுறுத்தியுள்ளன.
வாணிப தாராளமயமாக்கலைப் பற்றி நாம் பேசும் போதும், எழைகளின் வாழ்வாதாரத் தையும் உணவுப் பாதுகாப்பையும், ஏழை விவசாயிகளின் இன்றைய உண்மை நிலைமை யும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய அரசின் வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் அவர்கள் உறுதிபடக் கூறியுள்ளார். இது நமக்கு மகிழ்ச்சியளித்தாலும் உலக வேளாண் கொள்கை மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான தீர்மானத்தில் அமெரிக்காவின் கை ஓங்கியிருந்தாக மற்ற நாடுகள் கருத்துத் தெரிவித்துள்ளன. வேளாண் துறைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திவிட்டு உணவுப் பொருள் ஏற்றுமதி மேற்கொள்ளுதல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம். ஆனால் வளர்ந்து வரும் நாடுகள் உணவுத் தட்டுபாட்டில் மேலும் சிக்கிக் கொள்ளும் என்பது தென் அமெரிக்கா, கியூபா, நிகரகுவா, ஈக்வடார் ஆகிய நாடுகளின் ஒத்த கருத்தாக இம்மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தியா, வியட்நாம், சீனா மற்றும் 10 நாடு களில் உணவு நிலை ஓரளவு சீராக இருந்தாலும் எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறைஏற்படும் என்ற அச்சம் இருப்பதால் உணவுப் பொருள் ஏற்றுமதிக்கு கணிசமான அளவு தடை விதித்துள்ளன. ஏற்றுமதிக்கு தடை விதிப்பதால் மட்டுமே நிலைமை சீராகிவிடுமா என்றகேள்வி இத்தருணத்தில் எழுவது நியாயமே. வளர்ந்து வரும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய வேளாண் தொழில் முற்றிலும் பாதுகாக்கப் படவேண்டும். விளைநிலங்களின் அளவு எக் காரணம் கொண்டும் குறைய அனுமதிக்கக் கூடாது. அதேபோல் மக்கள் தொகை பெருகு வதை கட்டுப்படுத்துவதிலும் தீவிரமாக செயல்பட வேண்டும். மேற்கூறிய தீர்மானங்கள் இந்தியாவிற்கு இன்றைய அவசரத் தேவையாகும்.
இத்தருணத்தில் நாம் மற்றொரு உலகளாவிய பெரும் பிரச்சனையை மனதில் கொண்டு செயலாற்ற வேண்டியள்ளது. அதாவது, பருவநிலையிலும் காலநிலையிலும் ஏற்படும் மாற்றம் உலக வேளாண்துறையிலும், உணவுப் பொருள் உற்பத்தியிலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இப்பிரச்சனை குறித்தும் ரோம் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப் பட்டுள்ளது. சமீப காலமாக மழையின் அளவிலும், காலநிலையிலும் ஏற்பட்டு வரும் மாற்றம் நமக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. வரும் காலங்களில் இப்பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
இயற்கையின் தன்மையை சலனப்படுத்தாமல், பசுமையைக்காத்து, நீர் ஆதாரங்களை சிறப்புடன் நிர்வகித்து, இயற்கை சார்ந்த வாழ்வு முறைக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நிலைமை சீர்படும் என்றும் இம்மாநாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments: