பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Saturday, October 4, 2008

உலக உணவு உற்பத்தியை அதிகரிக்காவிட்டால் அபிவிருத்தியடையும் நாடுகளுக்கு அச்சுறுத்தல்-ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் எச்சரிக்கை



[K.S.அனோஜி]
உலகமானது அதிவேகமாக அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலைக ளைக் குறைக்கும் வகையில் விவசாய உற்பத்திகளை உடனடியாக அதிகரிக்க வேண்டியுள்ளது எனவும், இல்லையேல் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு அது அச்சுறுத்தலாக அமையும் எனவும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2007 ஆம் ஆண்டு மத்தியிலிருந்து உணவுகளுக்கான செலவினமானது உலகளாவிய ரீதியில் 40 சதவீதமளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கமரூன், புர்கின்கா பஸோ, ஹெயிட்டி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உணவு விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.""நாங்கள் தவறு எதனையும் செய்யவில்லை. பிரச்சினை பாரியதாக உள்ளது. நாங்கள் சரியான உதவி வழங்கினால் தீர்வுகள் கிட்டும்'' என பான் கீமூன் தெரிவித்தார்.கானாவின் தலைநகர் ஆக்ராவில் இடம்பெற்ற வாணிபம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 5 நாள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ""கடந்த மூன்று வருடத்திற்கு மேற்பட்ட காலப்பகுதியில் உலகமானது அது உற்பத்தி செய்வதைவிட கூடுதலான அளவு நுகர்கிறது என்பது மட்டும் நிச்சயம்'' என பான் கீமூன் குறிப்பிட்டார்.எண்ணெய் விலைகள் உயர்ந்தமை, அமெரிக்க டொலரின் வீழ்ச்சி, இயற்கை அனர்த்தங்கள் என்பனவே உலக உணவு விலையேற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சித்திட்டமானது 80 நாடுகளிலுள்ள 73 மில்லியன் மக்களுக்கான உணவுகளைப் பெற்றுக்கொடுக்க வருடாந்தம் 750 மில்லியன் அமெரிக்க டொலரை நிதியுதவியாக வழங்க திட்டமிட்டுள்ளதாக பான் கீமூன் கூறினார்.உலக பொருளாதார வரைவிலக்கணங்களுக்கு அமைய அல்லாமல் உலகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை கருத்திற்கொண்டு உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதாக அவர் இதன்போது வலியுறுத்தினார்.2015 ஆம் ஆண்டுக்குள் தீவிர வறுமையை அரைவாசியாகக் குறைப்பது என ஐக்கிய நாடுகள் சபையில் 2000 ஆம் ஆண்டு உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட மிலேனியம் இலக்குகள் எட்டப்படாத நிலையிலேயே உள்ளன என பான் கீமூன் குறிப்பிட்டார். ""நாம் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் பன் மடங்கு முயற்சிக்க வேண்டியுள்ளது'' என அவர் தெரிவித்தார்.பான் கீமூன் இவ்வாரம் லைபீரியா, புர்கினா பஸோ மற்றும் ஐவரிகோஸ்ட் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: