பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Wednesday, September 24, 2008

தேசம் கடந்த பன்னாட்டு மூலதனங்கள் தேச எல்லைகளையே அழிக்கின்றன



 .


உலகளவில் மக்கள் கூட்டம் தமது வரலாற்று ரீதியான சுயஅடையாளங்களையே, படிப்படியாக ஒரு சில பன்னாட்டு நிறுவனங்களிடம் இழந்து வருகின்றன. மறுபக்கத்தில் உழைப்பு சார்ந்து உருவாகும் மனிதனுக்கேயுரிய சுயமான சிந்தனைத் திறனை, மூலதனம் மலடாக்குகின்றது. சுதந்திரமான ஜனநாயகமான தெரிவுகள் அனைத்தும், உலகளவில் பரந்துபட்ட மக்களுக்கு படிப்படியாக மறுக்கப்படுகின்றது. தேசங்கடந்த அந்நிய முதலீட்டினால், இயற்கையான மனித தேர்வுகள் எல்லாம் பாரிய அளவில் எல்லை கடந்து அழிக்கின்றது.

தேசங்கடந்த அந்நிய முதலீடுகள் தேசிய முதலீட்டை அழிக்கின்ற போது, தேசிய பண்பாடுகள், தேசிய கலாச்சாரங்கள், சுயஅறிவியல் தளங்கள் முற்றாகவே சிதைக்கப்பட்டு மலடாக்கப்படுகின்றது. தேசிய உற்பத்திகள் அழிகின்ற போது, பன்னாட்டு உற்பத்திகளே ஒரேயொரு தெரிவாகி விடுகின்றது. சுதந்திரமான தேசிய தெரிவுகள் எல்லாம் முற்றாக சிதைத்து மலடாக்கப்படுகின்றது.


இதன் விளைவுகள் கற்பனைக்கு உட்பட முடியாத வகையில் மிகப் பிரம்மாண்டமானவை. உதாரணமாக மூன்றாம் உலக நாடுகளின் அந்நிய நேரடி மூலதனத்தின் அளவு 1990இல் 12 சதவீதமாக இருந்தது. இது 1995இல் 38 சதவீதமாகியது. மூன்றாம் உலக நாடுகளின் தேசியம் அன்றாடம் உயிருடன் கொல்லப் படுகின்றது. இதை யாரும் மறுக்க முடியாது. உண்மையில் 1995ஆம் ஆண்டில் மூன்றாம் உலக நாடுகளில், தனியார் மூலதனம் அரசு மூலதனத்தை விட ஐந்து மடங்கு அதிகமாக மாறியது. இது ஐந்து வருடத்துக்கு முன்பு அதாவது 1990இல் அரசு மூலதனம் தனியார் மூலதனத்தை விடவும் அதிகமாக இருந்தது. 19901994இல் மொத்த நிதிவரத்தில் 29 சதவீதம் அரசைச் சார்ந்து இருந்தது. இது 1994இல் 6 சதவீதமாகியது. அரசு என்பது தனது அடிப்படையான சமூகக் கட்டுமானத்தை முற்றாக தனியார்துறை சார்ந்ததாக மாறி வந்ததையே இவை துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. தேசிய சமூகப் பண்புகள் சிதைவதை இது துரிதமாக்கியது. 1980இல் உலகளவிலான வணிகத்தில் ஈடுபட்ட நாடுகள் எண்ணிக்கை 28 சதவீதமாக இருந்தது. இது 1986இல் 19 சதவீதமாக குறைந்த போனது. தேசங்களின் தேசிய தலைவிதி, சமூகத்துக்கு வெளியில் தனியார் கையில் தாரைவார்க்கப்பட்டது. மூன்றாம் உலக நாடுகளில் 1990இல் உலக அளவில் மொத்த அந்நிய முதலீடு 15 சதவீதமாகவே இருந்தது. இது 1996இல் 40 சதவீதமாகியது. ஏற்றுமதி முதலீடு 2 சதவீதத்தில் இருந்த 30 சதவீதமாகியது. தனிப்பட்ட முதலீடுகள் 1995இல் 3200 கோடி டாலரில் இருந்து 1996இல் 4600 கோடி டாலராகியது. சமூகக் கூறுகள் அன்றாடம் அரித்து உறிந்தெடுக்கப்பட்டது.


ஒரு நாட்டின் தலைவிதி தனியார் துறை சார்ந்து அந்நியர் வசம் கைமாறிச் செல்வதை இவை எடுத்துக் காட்டுகின்றது. ஒரு தேசத்தின் சுயாதீனம் சிதைந்து, மறுகாலனியாக தேசங்கள் திவாலாவதையே காட்டுகின்றது. இதன் வெட்டுமுகத் தோற்றமோ மேலும் துயரமானவை. உதாரணமாக 1991இல் உலகில் உள்ள 40,000 தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் உலகளவில் 2,50,000 உற்பத்தி நிறுவனங்களை விழுங்கி ஏப்பமிட்டது. அதாவது 2.5 லட்சம் தேசிய உற்பத்திகள் மட்டுமின்றி அதன் பன்மைத்துவத்தையும் கூட 40,000 நிறுவனங்கள் விழுங்கி ஏப்பமிட்டன. இதன் மூலமான பண்பாட்டுச் சிதைவுகளை, கலாச்சாரச் சிதைவுகளை, மனித அவலங்களை எந்த ஜனநாயகமும் சரி சுதந்திரமும் கூட ஏறெடுத்து கூடப் பார்த்தில்லை. இந்த பன்னாட்டு நிறுவனங்களின் வரலாறு என்பது பல கட்டங்கள் ஊடாகவே வளர்ச்சியுற்றன. ஆரம்பத்தில் காலனிகள் மூலம் உலகத்தையே அடிமைப்படுத்தி உலகைப் பங்கிட்டு கொள்ளை அடித்தன. முதலாம் உலக யுத்தம் இப்படிக் கொள்ளையடித்த காலனிகளை மறுபங்கீடு செய்யக் கோரியே ஆரம்பமாகியது. இந்த மூலதனத்துக்கான யுத்தத்தின் முன்பு இந்த நாடுகள் இட்டுயிருந்த அந்நிய முதலீடுகளைப் பார்ப்போம்.


1914இல் உலகளாவிய அந்நிய மூலதனங்கள் கோடி டாலரில்


மேற்குஐரோப்பா 9நாடுகள் தென் ஐரோப்பா கிழக்குஐரோப்பா தென்அமெரிக்கா ஆசியா ஆப்பிரிக்கா மொத்தம்
இங்கிலாந்து 26.3 825.4 24.8 61.8 368.2 287.3 237.3 1831.1
பிரான்ஸ் 125.5 38.6 133.2 266.3 115.8 83.0 102.3 864.7
ஜெர்மனி 131.0 100 83.5 83.4 90.5 23.8 47.6 559.8
அமெரிக்கா 67.4 90 3 2.9 164.9 24.6 1.3 351.4
7 நாடுகள் 10 10 0 10 20 150 20 220
மொத்தம் 459.2 1117.5 325.5 559.4 839 6 10 466.4 4377

9 நாடுகள் இலங்கை, பர்மா, இந்தோசீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, இந்தியா மற்றும் சீனாவாகும்

7 நாடுகள் பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிஸ், ஜப்பான், ரஷ்யா, போர்ச்சுகல், சுவீடன்


ஏகாதிபத்தியம் நேரடிக் காலனிகள் மூலமும், மிகப் பெரிய அந்நிய முதலீட்டின் மூலமும் மிகப் பிரம்மாண்டமான வகையில் கொள்ளையிட்டன. கொள்ளைகளை எடுத்துவரும் வசதிக்காகவே அதிக அந்நிய முதலீட்டை நடத்தினர். அதாவது கொள்ளைகளை எடுத்துவர புகையிரதப் பாதைகளை அமைப்பதில் பெரும் நிதி செலவிடப்பட்டது. 18701913க்கும் இடையில் 1.91 லட்சம் கிலோ மீட்டர் நீளமாக புகையிரதப் பாதைகளை 36 நாடுகளில் ஏகாதிபத்தியம் அமைத்தது. இந்த பாதைகள் ஊடாகத்தான், மூலதனம் ஏகாதிபத்தியத்துக்கு கடத்திச் சென்றனர். இந்த மூலதனங்கள் தான் இன்றைய பன்னாட்டு நிறுவனங்களின் அடித்தளமாகும். அடிமைகளின் உழைப்பையும், சொந்த நாட்டு உழைக்கும் மக்களின் உழைப்பையும் சூறையாடி பெரும் மூலதனங்களை திரட்டிக்கொண்டனர். காலனிய மூலதனத்துக்கு முன்பு, கூலிகளற்ற அடிமைகளின் உழைப்பே, மேற்கில் குவிந்த மூலதனத்துக்கு ஆதாரமாகவும் நெம்புகோலாகவும் இருந்தது. உதாரணமாக 14501870க்கும் இடையில் 1.5 கோடி ஆப்பிரிக்க அடிமைகள் ஆப்பிரிக்காவில் இருந்து கடத்திச் சென்றனர். இவை பல நாடுகளில் காணப்பட்ட மனித அடிமைகளின் ஒரு பகுதி மட்டும்தான். மனித உழைப்புகள் சூறையாடப்பட்ட வடிவங்கள் பற்பல. அந்நிய மூலதனத்தின் குவியல், மனிதப் புதைகுழிகளின் மேல் கட்டமைக்கப்பட்டவைதான். இது மனிதர்களை புதிதாக மேலும் நவீனமாக அடிமைப்படுத்துவதன் மூலமே, நாகரிகமடை கின்றது. இது சொந்த இனம் மற்றும் நிறத்தையும் கூட விட்டு விடவில்லை.


இந்த நாகரிகமானது மார்க்ஸ் மூலதனத்தில் கூறுவது போல் ஒரு சமூக இயக்கத்தின் மேல் நிகழ்கின்றது. அதை அவர் மார்னிங் ஸ்டார் பத்திரிகையில் இருந்தே எடுத்துக்காட்டுகின்றார். நம் வெள்ளை அடிமைகள் உழைத்துழைத்து சாவுக்குழியில் விழுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் அமைதியாக வாய் பேசாமல் உழைத்து உழன்று நோயுற்றுச் சாகின்றனர். ஏன் இந்த அவலச் சாவுகள் என்றால், நாகரிகமான இந்த மூலதன அமைப்பிற்காகவே. சுதந்திரமாகவும், ஜனநாயகபூர்வமாகவும் உயிர் வாழும் முதலாளியின் ஆன்மா ஈடேற்றத்துக்காகவே. மார்க்ஸ் கூறுவது போல் ஒரு வணிகச் செயலால் மட்டும் ஆதாயம் ஈட்டுதலும் அவனது குறிக்கோள் அல்ல. செல்வத்தின் மீது எல்லையற்ற பேராசை, பரிமாற்ற மதிப்பை நோக்கி வெறியுடன் ஓடுதல். முதலாளிக்கும் கஞ்சனுக்கும் பொதுக் குணங்கள். கஞ்சன் பைத்தியம் பிடித்த முதலாளி. முதலாளியோயெனில் பகுத்தறிவுள்ள கஞ்சன் என்றார். ஜனநாயகம், சுதந்திரம் என்பது பேராசையுடன் கூடிய மூலதனத்தின் சொந்த ஆன்மாவே. இந்த வரையறையில் தான் மூலதனம் உலகெங்கும் சதிராட்டம் போடுகின்றது.


மனித இனத்துக்கே எதிராக ஊடுருவும் அந்நிய மூலதனம், மனித இனத்துக்கு எதிராக கொடூரமாக, எப்படி தேசிய எல்லைகளைக் கடந்து ஊடுருவிப் பாய்கின்றது என்பதை நாம் பார்ப்போம். 2002இல் தேசம் கடந்த அந்நிய ஆக்கிரமிப்பு சார்ந்த முதலீடுகள் அண்ணளவாக 2,00,000 கோடி டாலரைத் தாண்டிச் சென்றது. இவற்றின் மூலம் ஏகாதிபத்தியங்களில் கொழுப்பேறியுள்ள பெரும் பணக்காரக் கும்பல்கள், மனித இனத்துக்கு எதிராக உலகைச் சூறையாடி செல்வக் கொழுப்பில் மிதந்தனர். 2001ஐ விட 2002ஆம் ஆண்டு செழிப்பான ஆண்டாகவே திகழ்ந்தது. 2000உடன் ஒப்பிடும் போது, 2001இல் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மந்தத்துக்கு அந்நிய முதலீட்டில் ஏற்பட்ட நெருக்கடியும் ஒரு காரணமாகும். 2001இல் உலகளவில் அந்நிய முதலீடு 2000டன் ஒப்பிடும் போது, 51 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டிருந்தது. இது 2001க்கு முந்திய 10 வருடத்தில் முதல் தடவையாக நடந்தது. இப்படி ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு, கடந்த 30 வருடத்தில் கூட நடக்கவில்லை. 2000ஆம் ஆண்டில் அந்நிய முதலீடு 1,50,000 கோடி டாலர் தாண்டிச் சென்றது. இது 2001இல் 73,500 கோடி டாலராகக் குறைந்த போது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சரிவால் ஏற்பட்ட விளைவை நாம் மேல் உள்ள அத்தியாயங்களில் பார்த்தோம். உண்மையில் 2001இல் ஏழை மக்கள் பெரும் பணக்காரக் கும்பலுக்கு எதிராக, தங்கள் மூச்சுக்களை கொஞ்சம் தக்கவைக்க முடிந்தது அவ்வளவே. ஆனால் 2002இல் மீண்டும் அந்நிய முதலீட்டை வேகப்படுத்திய தேசங்கடந்த பன்னாட்டு மூலதனங்கள், உலகை அடிமைப்படுத்துவதில் எகிறிக் குதிக்கின்றன.


2002இல் 65,000 தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள், உலகளவில் 8.5 லட்சம் அந்நிய முதலீட்டை நடத்தியது. இவற்றில் மூன்றில் ஒன்று மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களாகும். இவை மூன்றில் ஒரு பகுதி உலக ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியது. 2001இல் அந்நிய முதலீடுகள் வழங்கிய மொத்த வேலை வாய்ப்பு உலகளவில் 5.4 கோடியாகும். ஆனால் மறுபக்கத்தில் தேசிய உற்பத்திகள் அழிக்கப்படும்போது, கோடிக்கணக்கான மக்கள் வேலையை இழந்து விடுகின்றனர். அத்துடன் இன்று தேசிய முதலீடுகள் எதுவும் செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு மூன்றாம் உலக நாட்டிலும் அந்நிய முதலீடுகள் மட்டுமே ஒரேயொரு முதலீடாகியுள்ளது.


பயன்பாட்டுப் பொருட்கள் கூட பெருமளவில் அந்நிய முதலீட்டு உற்பத்தியாகவே காணப்படுகின்றது. 1995இல் உலகில் 37,000 பன்னாட்டு நிறுவனங்கள் இருந்தன. இதில் முதல் 100 நிறுவனங்கள் 3,40,000 கோடி டாலர் சொத்தை வைத்திருந்தது. இந்த பன்னாட்டு நிறுவனங்கள் 2 லட்சம் பொருட்களை உற்பத்தி செய்தது. அதே நேரம் 15 கோடி மக்களுக்கே வேலை வழங்கியது. 1993இல் 5,50,000 கோடி டாலர் பெறுமதியான வர்த்தகத்தை உலகளவில் கட்டுப்படுத்தியது. உலகளவில் அந்நிய முதலீடுகளின் நிரந்தர இருப்பு 1990இல் 1,70,000 கோடி டாலராக இருந்தது. இது 2001இல் 6,60,000 கோடி டாலராகியது. இது 2002இல் 15,00,000 கோடி ஈரோவாகியது. 1990உடன் 2002யை ஒப்பிடும் போது அந்நிய முதலீட்டின் நிரந்தர இருப்பு 9 மடங்காகியுள்ளது. உலகம் படிப்படியாகவே சில பன்னாட்டு நிறுவனங்களின் சொத்தாக மாறி வருவதையே இது எடுத்துக் காட்டுகின்றது.


2000 ஆண்டு அந்நிய முதலீடு 1,50,000 கோடி டாலராக இருந்தது. 60,000 தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் 8.2 லட்சம் அந்நிய முதலீட்டை மூன்றாம் உலக நாடுகளில் நடத்தியது. இன்று தேசங்களில் முதலீடு என்பது, அந்நிய முதலீடு மட்டும் தான். 54 நாடுகளில் 1,000 அந்நிய பொருட்கள் சார்ந்த உற்பத்தியின் பெறுமதி மட்டும், 6,00,000 கோடி டாலராக இருந்தது. மொத்த அந்நிய முதலீட்டில் நாலில் மூன்றை, முன்னேறிய மேற்கு நாடுகள் கட்டுப்படுத்தின. 2000ஆம் ஆண்டில் மேற்கு உலகைச் சூறையாடிய அந்நிய முதலீட்டின் அளவு 21 சதவீதத்தால் அதிகரித்த போது, இதன் தொகை 1,00,000 கோடி டாலராகியது.


இப்படி உலக மக்களையே வரைமுறையின்றிச் சூறையாடும் அந்நிய முதலீட்டின் அளவு, மறுபக்கத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் சர்வதேச நெருக்கடியை கூர்மையடைய வைக்கின்றது. உலகச் சந்தையை கைப்பற்றும் ஏகாதிபத்திய போட்டியில் நாள் தோறும், ஒவ்வொரு வினாடியும் ஒரு யுத்தமாகவே தொடர்கின்றது. ஒன்றையொன்று அழிப்பது முதல், தேச எல்லை கடந்த சூறையாடலில் கடுமையாகப் போரிடுகின்றன. முதலீட்டின் அளவு சூறையாடும் அளவைத் தீர்மானிப்பதுடன், அவர்களுக்கு இடையிலான வெற்றி தோல்விகளை வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் நிர்ணயம் செய்கின்றது. இந்த வகையில் அந்நிய முதலீடுகளின் அளவுகளைக் குறிப்பாகப் பார்ப்போம்.


அந்நிய முதலீடுகளைச் செய்வோர் யார் எனப் பார்ப்போம். அந்நிய முதலீட்டை 2001இல் அதிகமிட்ட ஏகாதிபத்தியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டது. அந்நிய முதலீடுகள் கோடி டாலரில்


முன்னேறியநாடுகள் 1996 1997 1998 1999 2000 2001
அமெரிக்கா 8897.8 10339.8 17443.4 28337.6 30091.2 12443.5
பிரிட்டன் 2578 3322.9 7432.4 8797.3 11655.2 5379.9
பிரான்ஸ் 2197 2317.4 3098.4 4707.0 4293.0 5262.3
பெல்ஜியம்,லுக்கசம்பேர்க் 1406 1199.8 2269.1 13305.9 24556.1 5099.6
நெதர்லாந்து 1500 11132 3696.4 4128.9 5245.3 5047.1
ஜெர்மனி 640 1224.4 2459.3 5475.4 19512.2 3183.3
கனடா * 1152.7 2280.9 2443.5 6661.7 2746.5
ஸ்பெயின் * 769.7 1179.7 1575.8 3752.3 2178.1
இத்தாலி * 370.0 263.5 691.1 1337.7 1487.3
சுவீடன் 549 1096.8 1956.4 6085.0 2336.7 1273.4
ஜப்பான் 20 320 326 1231 * *
ரசியா 247 663 276 289 * *
* தெரியாது


அந்நிய முதலீட்டை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் 2000, 2001இல் அதிகமிட்டன. சில விதிவிலக்குகள் இருந்த போது நிலைமை அமெரிக்கா சார்பு நிலையில் காணப்பட்டது. ஆனால் இதற்குப் பிந்திய காலத்தில் நிலைமை முற்றிலும் நேரெதிராக மாறியது. இதை பின்னால் விரிவாகப் பார்க்கவுள்ளோம். அந்நிய முதலீடுகள் எந்த நாட்டில் அதிகமிடப்பட்டது என்பதைப் பார்ப்போம்.


அந்நிய முதலீட்டை 2001இல் அதிகமிட்ட மூன்றாம் உலக நாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டது. அந்நிய முதலீடுகள் கோடி டாலரில்


வளரும் நாடுகள் 1997 1998 1999 2000 2001
சீனா 4423.7 4375.1 4031.9 4077.2 4684.6
மெக்சிக்கோ 1404.4 1193.3 1253.4 1470.6 2473.1
ஹாங்காங் (சீனா) 1136.8 1477.0 2459.6 6193.8 2283.4
பிரேசில் 1899.3 2885.6 2857.8 3277.9 2245.7
பெமூட்டாஸ் 292.8 539.9 947.0 1098.0 985.9
போலந்து 490.8 636.5 727.0 934.2 883.0
சிங்கப்பூர் 1074.6 638.9 1180.3 540.7 860.9
சவுதி அரேபியா 381.7 56.1 150.2 88.8 665.3
சிலி 521.9 463.8 922.1 367.4 550.8
செக்குடியரசு 130.0 371.8 632.4 498.6 491.6


உலகமயமாதல் தனது விரிவான ஆக்கிரமிப்பை உலகளவில் தொடங்கியவுடன், பெருமெடுப்பில் அந்நிய மூலதனத்தை சீனாவில்தான் இட்டன. இதில் ஹங்காங் உள்ளடங்கும் போது, மிகப் பிரமாண்டமான ஒன்றாக மாறிவிடுகின்றது. எந்தளவுக்கு நாடுகளின் சுயாதீனம் இழக்கப்படுகின்றதோ, அந்தளவுக்கு அந்நிய முதலீடுகள் அதிகரிக்கின்றது. இதில் சீனா மட்டுமே விதிவிலக்காக உள்ளது. சீனா விதிவிலக்காக இருப்பதற்குக் காரணம், அதிக லாப வீதத்தை மூலதனத்தக்கு பெற்றுத் தருவதால் மூலதனம் வரைமுறையின்றி ஊடுருவிப் பாய்கின்றது. அதே தளத்தில சீன மூலதனமும் சுயதீனமாகச் செயலாற்றத் தொடங்குகின்றது.


எல்லை கடந்த அந்நிய முதலீடுகள் ஏகாதிபத்தியம் சார்ந்து இருப்பதுடன், அவை விரல்விட்டு எண்ணக் கூடிய சில நாடுகளைச் சார்ந்து இருக்கின்றது. உலகம் ஒரு சில நாடுகளுக்கு அடிமையாவதையே இவை எடுத்துக்காட்டுகின்றது. அதிலும் ஏகாதிபத்திய அரசுகளின் மூலதனத்துக்கு வெளியில், பெருமளவில் ஒரு சில பன்னாட்டு நிறுவனங்களினால் அந்நிய முதலீடுகள் கட்டுப்படுத்தப்படுகின்றது. இங்கு அந்நிய ஏகாதிபத்திய அரசு மூலதனங்களின் அளவு குறைக்கப்பட்டு, தேசங்கடந்த பன்னாட்டு மூலதனங்கள் பெருகிவருவது உலகமயமாதலின் ஒரு நிகழ்ச்சிப் போக்காகும்.


மூன்றாம் உலக நாடுகள் சார்ந்தும் சில அந்நிய முதலீடுகள் நடக்கின்றன. இதில் சில விதிவிலக்குடன் சீன மூலதனம் பெருமெடுப்பில் நிகழ்கின்றது. இது தவிர்ந்த மூன்றாம் உலக நாடுகள் சாந்த முதலீடுகள் என்பது, தேசிய எல்லைக்குள் உருவான சில தரகு முதலாளிகள், தாம் சூறையாடிய பெருந்தொகை மூலதனத்தை நாட்டுக்கு வெளியில் கடத்திச் செல்லுவதையே இது குறிக்கின்றது. இவை ஏகாதிபத்திய நாடுகளில் பொதுவாக போடப்படுகின்றது. இந்த முதலீடுகள் அல்லது நிதி மூலதனங்கள் எப்போதும் எடுத்துச் சென்ற தனிப்பட்ட நபரின் குடியுரிமையை அடிப்படையாக கொண்டு, நாட்டின் பெயரால் வரையறுக்கப் படுகின்றது. உண்மையில் இந்த மூலதனம் நாட்டின் எல்லையைக் கடந்து வெளியேறுகின்றதேயொழிய, குறித்த மூன்றாம் உலக நாட்டின் அந்நிய முதலீடாக இருப்பதில்லை. அரசியல் ரீதியாகவும் சரி, பொருளாதார ரீதியாகவும் சரி எந்த விதமான தாக்கத்தையும் சொந்த நாட்டுக்கு சார்பாக செயல்படுவதில்லை.


இது ஏகாதிபத்திய நாட்டுக்கு சார்பாக, சொந்த நாட்டுக்கு எதிராகவே எப்போதும் செயல்படுகின்றது. இந்த மூலதனத்தை நாட்டுக்கு வெளியில் கடத்திச் செல்லும் மூன்றாம் உலக கொள்ளைக்காரர்கள், தமது குடியுரிமையை மாற்றிக் கொள்வதன் மூலம், ஒரே நாளில் அந்த சொத்துக்கள் ஏகாதிபத்தியம் சார்ந்து விடுகின்றது. மூலதனத்தை அமெரிக்காவுக்குள் கடத்தி வரும் நபருக்கு விசேட குடியுரிமை சட்டத்தின் கீழ் விசேட அமெரிக்கப் குடியுரிமை வழங்கப்படுகின்றது. வருடாந்தரம் பெருந்தொகையானோர் இப்படி அமெரிக்காவுக்குள் மூலதனத்தைக் கடத்திச் செல்கின்றனர். உலகில் 100 கோடிக்கு அதிகமான சொத்துக்களை வைத்திருந்த பல மெக்சிகர்கள் ஒரே நாளில் அமெரிக்கராகிவிட்டனர். இது பொதுவாக மூன்றாம் உலக நாடுகளின் பெயரால் அடையாளம் காணப்படும் பெரும் மூலதனத்துக்கு, நாள்தோறும் நடக்கின்றது. இது சீனா மூலதனத்துக்கு மட்டும் விதிவிலக்காக உள்ளது. சீனா ஒரு ஏகாதிபத்தியமாக தன்னை மாற்றி அமைத்து வருகின்றது. உலக மூலதனத்தில் உயர்ந்த லாபவெறி வக்கரிக்கும் போது, சீனா ஏகாதிபத்தியமயமாதல் துரிதமாகி வருகின்றது.


அந்நிய முதலீடு சார்ந்த உலக ஆதிக்கம் ஏகாதிபத்தியம் சார்ந்தும், அதேநேரம் கடுமையான ஏகாதிபத்திய முரண்பாட்டையும் கொண்டுள்ளது. இங்கு உலகமயமாக்கலில் ஏகாதிபத்திய அரசுகள் இடும் அந்நிய முதலீடுகள் குறைந்து, ஏகாதிபத்தியம் சார்ந்த பன்னாட்டு தனியார் முதலீடுகள் அதிகரித்து வருகின்றது. ஏகாதிபத்திய அரசு சார்ந்த முதலீடுகளும் கணிசமான பெரும் தொகையாகவே இருக்கின்றது. அதேநேரம் ஏகாதிபத்திய தேசிய ஆதிக்கம் முதன்மை பெற்ற உலகளாவிய ஒழுங்கு காணப்படுகின்றது. ஏகாதிபத்திய அரசு மூலதனத்தை உள்நாட்டிலும் அந்நிய நாட்டிலும் தனியார் மயமாக்கும் போக்கில், தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் தேசிய உணர்வுடன் அக்கம்பக்கமாக ஒன்றிணைந்த ஏகாதிபத்திய ஆதிக்கப் போக்கு, ஏகாதிபத்திய முரண்பாட்டை ஆணையில் வைக்கின்றது. அந்நிய முதலீட்டில் தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் பங்கு இதில் முக்கியமானதும், ஏகாதிபத்திய அரசுக்கு நிகரான ஒரு பாத்திரத்தை வகிக்கின்றது.


1993இல் வெளிநாட்டு முதலீட்டை எடுப்பின், உலகளவிலான மொத்த முதலீட்டில் அரைவாசியை, ஒரு சதவீதமான பன்னாட்டு நிறுவனங்களே முதலிட்டன. உலகளவில் தேசிய அரசுகள், சுதந்திரமான மக்கள் கூட்டம், சுதந்திரமான தெரிவுகள் எப்படி பந்தாடப்படுகின்றது என்பதை இந்த முதலீடு எடுத்துக் காட்டுகின்றது. ஒருசதவீதமான முதலீட்டாளனின் பண்பாட்டு மற்றும் அவனின் நலன்களை உறுதி செய்வதை அடிப்படையாக கொண்டே, 50 சதவீதமான முதலீடுகள் உலகைச் சூறையாடியது. 50 சதவீதமான புதிய முதலீடு ஏற்படுத்திய உற்பத்தி தவிர்க்க முடியாமல், ஒரு சதவீதமான பன்னாட்டு நிறுவனத்தின் தெரிவையே சமூகத் தெரிவாக்கியது. உலகமயமாதல், வரையறைக்கு உட்பட்ட ஒரு சில நிறுவனங்களின் தெரிவையே மனித சமூகத்துக்கு ஏற்படுத்துகின்றது. இது மனித குலத்தின் உழைப்பு சார்ந்த இயற்கை பரிணாமத்துக்கே திட்டவட்டமாகவே எதிரானது. இதற்குள் தான் மனிதனின் சுதந்திரம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும் வாய்கிழிய பிதற்றிப் பீற்றப்படுகின்றது.


1993இல் உலகளாவிய முதலீட்டில் 50 சதவீதத்தை ஒரு சதவீதமான பன்னாட்டு நிறுவனங்களேயிட்டது என்றால், பரந்துபட்ட மக்களின் வாழ்வியல் இருப்பின் கொடூரத்தை நாம் புரிந்துகொள்ள எதுவும் நம்மைத் தடுப்பதில்லை. உண்மையில் முதலீட்டின் அளவு அந்நியனின் கைக்கும், விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசில நிறுவனங்களுக்கும் மாறிவரும் அளவு அதிகரிக்க, தேசிய முதலீடுகள் குறைகின்றது. இதன் மூலம் அந்நிய முதலீடு நவீனத் தொழில்நுட்பத்தின் துணையுடன் வேலை வாய்ப்பை இல்லாததாக்குகின்றது. மறுபக்கத்தில் தேசிய முதலீடு குறையும் போது, வேலையின்மை பெருகுவதை தாண்டி எதுவும் உலகில் நடப்பதில்லை. ஒரு நாட்டின் வறுமை, வேலையின்மை, சமூக சீரழிவுகள் அனைத்தும் முதலீட்டின் நோக்கில் இருந்தே தொடங்குகின்றது. உலக உற்பத்தியில் 25 சதவீதத்தைக் கட்டுப்படுத்தியவர்கள், உழைக்கும் ஆற்றல் உள்ள நூற்றுக்கு ஒருவனுக்குக் கூட வேலை வழங்கத் தயாரற்ற ஒன்றாகவே உலகமயமாதல் உள்ளது. அதாவது உழைக்கும் ஆற்றல் உள்ள 200 பேரில் ஒருவனுக்கே வேலை வழங்குகின்றது. மிகுதியாக உள்ள 199 உழைக்கும் மக்களுக்கு, மற்றைய உற்பத்தியாக விடப்பட்டு இருந்த 75 சதவீதமான துறையே வழங்கியது.


ஆனால் உலகளாவிய உலகமயமாதல் கொள்கை தேசிய உற்பத்திகளை அழித்து விரல்விட்டு எண்ணக் கூடிய பன்னாட்டு நிறுவனங்களிடம் முழுமையாக ஒப்படைப்பதை அடிப்படையாகக் கொண்டது. எந்த சுதந்திரமான ஜனநாயகமான அரசும், இதைத்தான் தனது கொள்கையாக்கி உலகமயமாக்குகின்றது. இந்த வகையில் உலக முதலீட்டில் 50 சதவீதத்தை ஒரு சதவீதமான பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் நிலைக்கு 1993லேயே உலகம் தரம் தாழ்ந்தது. சுற்றிவளைத்து ஒட்டு மொத்தமாக பார்த்தால், 1982இல் உலக உற்பத்தியில் 30 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 70 சதவீதத்தையும், முதலீட்டில் 80 சதவீதத்தையும் பன்னாட்டு நிறுவனங்களே கட்டுப்படுத்தின. 1992இல் 90 சதவீதமான பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்கள் ஏகாதிபத்திய நாடுகளிலேயே காணப்பட்டது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி என்பன வெளிநாட்டு முதலீட்டில் 79 சதவீதத்தைக் கட்டுப்படுத்தியது. இங்கு முதலீடுகள் என்பது நேரடி மற்றும் மறைமுக வழிகளில் விரிவாகி வருகின்றது. தேசிய அரசுகளின் முதலீடுகள் கூட, இன்று பன்னாட்டு நலனுக்கு இசைவானதாக மாற்றப்படுகின்றது. இதை நோக்கி கடன்கள் நிபந்தனையுடன் வழங்கப்படுகின்றது. இம்முதலீடுகளை நேரடியாக பன்னாட்டு நிறுவனங்கள் செய்யாவிட்டாலும், பன்னாட்டு நிறுவனமே லாபத்தை முழுமையாக அடைகின்றது. பொருளாதார ரீதியாகவும், மறுபக்கத்தில் மூலதனத்துக்கான வட்டியை அறவிட்டு சூறையாடும் போது இரட்டைக் கொள்ளையே அரங்கேறுகின்றது.


உலகில் எதைத் திட்டமிட்டாலும் அதை பன்னாட்டு நிறுவனங்களே திட்டமிடுகின்றன. தேசிய அரசுகள் வெறும் வெற்றுப் பொம்மைகள்தான். மக்கள் சுதந்திரமாக வாக்குப் போட்டு தம்மை ஆள்வோரைத் தெரிவு செய்தனர் என்பது, இந்த முறுக்கி விட்ட (கீ கொடுத்த) பொம்மைகளுக்குத் தான். மக்களின் நலனை பிரதிநிதித்துவம் செய்த அரசுகள் என எதுவும் உலகில் இருப்பதில்லை. இதையே இன்றைய முதலீடுகள் மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டுகின்றன.


உலகம் எப்படி அடிமையாகி விடுகின்றது என்பதை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானிய மொத்த முதலீட்டு இருப்பும், அவை எத்தனை முதலீடுகளில் செயல்படுகின்றது என்பது, எடுப்பாகவே எடுத்துக் காட்டுகின்றது.



1.எத்தனை முதலீடுகளில்

2.மொத்த முதலீடு (நிரந்தர இருப்பு) கோடி ஈரோ

3. எத்தனை முதலீடுகளில்

4.மொத்த முதலீடு (நிரந்தர இருப்பு) கோடி ஈரோ


1999 2000
ஐரோப்பா 21,835 3,22,300 25,559 3,55,300
அமெரிக்கா 7,791 6,81,500 8,172 7,48,500
ஜப்பான் 3,444 1,37,200 2,793 1,73,000


உலகெங்கும் உற்பத்தியை ஒரு சில நிறுவனங்களே திட்டமிடும் நிலைக்கு, உலகப் பொருளாதாரம் தரம்தாழ்ந்து வருவதையே இது தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. இந்த நிறுவனங்கள் அதிக லாபம் தருவன என எதைக் கருதுகின்றதோ, அவைகளையே மனிதனின் தேவையாக மாற்றுகின்றனர். எவை எல்லாம் அதிக லாபத்தைத் தரமுடியாதவை என்று கருதுகின்றதோ அவை அழிக்கப்படுகின்றது. இது தேசிய உற்பத்தியிலும் மட்டுமின்றி, லாபத்தைப் பெறமுடியாத ஏழை மக்களையும் இட்டு ஒரேவிதமான கொள்கையைத் தான் கையாளுகின்றது. இதனடிப்படையில் பன்னாட்டு மூலதனம், ஒரேவிதமான முதலீட்டை உலகளவில் நடத்துவதில்லை. மாறாக இருப்பதையும் அழிப்பதில் தான், லாபம் அதிகரிக்கின்றது என்ற பாசிச தத்துவத்துக்கு இணங்கவே அழித்தொழிக்கின்றனர். இங்கு இருப்பதை என்பது பரந்து காணப்படும் பன்மையான உற்பத்திகளையும், உற்பத்தி முறைமைகளையும் அழிக்கப்படுகின்றது. உண்மையில் மனித இனத்தை, பண்ணையில் அடைத்து வளர்க்கும் மந்தைக்குரிய நிலைக்கு மூலதனம் அடிமைப்படுத்தி வருகின்றது. அதாவது வளர்ப்புப் பண்ணைகளில் எப்படி வளர்ப்பு மிருங்களுக்கு உணவிடப்படுகின்றதோ, அப்படி பன்னாட்டு நிறுவனங்கள் மனிதனின் நுகர்வை வரையறுக்கின்றது. இங்கு தெரிவுகள் முதல் அனைத்துவிதமான மனித செயற்பாடு களும், பன்னாட்டு நிறுவனங்கள் எதை உற்பத்தி செய்கின்றதோ, அதற்குள்தான் அனைத்தும். இந்த அடிமைத்தனம் உலகமயமாதலின் சிறப்பான எடுப்பான ஒரு நிலையாகும். இதுவே உலகமயமாதலின் அடிப்படையான தத்துவமும் கூட.


இந்த அடிமைத்தனம் ஒரு சில நாடுகளின் ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றது. அடக்கியாளும் ஒரு மக்கள் பிரிவின் வெற்றிகரமான ஒரு உலகம் என்ற பாசிச கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதனடிப்படையில் உலகில் அந்நிய முதலீடுகள் விரிந்த தளத்தில் உலக மக்களிள் வாழ்வாதாரங்களின் மேலாகப் பாய்கின்றது. இந்த முதலீடுகள் அந்நிய நாடுகளில் ஒரு நிரந்தரமான அடிமைத்தனத்தை உருவாக்கும் அசையா மூலதனமாக மாறிவிடுகின்றன.


இந்த வகையில் அந்நிய முதலீடுகள் உலக மக்களை அடிமைப்படுத்த எங்கே இடப்படுகின்றது என்று பார்ப்போம். அந்நிய முதலீடு கோடி டாலரில்


1998 1999 2000 2001
உலகம் 69,446 1,08,826 1,49,193 73,514
ஏகாதிபத்திய நாடுகள் 48,424 83,776 1,22,747 50,314
மூன்றாம் உலக நாடுகள் 18,761 22,514 23,789 20,480


அந்நிய முதலீடுகள் ஏழை நாடு முதல் பணக்கார நாடுகள் வரை விரவிப் பாய்கின்றது. மூலதனம் குறித்த ஒரு பகுதியை மட்டும் குறிப்பாகச் சுரண்டுவதில்லை. உலகெங்கும் விரிந்த தளத்தில் சுரண்டுவதுடன், அதனடிப்படையில் உலகையே தனக்குக் கீழ் அடிமையாக்க முனைகின்றது. இதனடிப்படையில் மூலதனம் ஒன்றையொன்று ஏறிமிதித்து மேலேறவும் முயலுகின்றது. மறுதளத்தில் அதிக அந்நிய முதலீடு டாலரின் அடிப்படையில் மேற்கில் இடப்படும் நிலைமை என்பது, எந்தவிதத்திலும், ஏழை நாடுகளின் மேலான ஆக்கிரமிப்பை குறைத்ததாக புள்ளி விபரங்களை முன்வைத்து மதிப்பிட்டுக் காட்டமுடியாது. இப்படி ஒரு கோட்பாட்டு திரிபை, உலகமயமாதலை ஆதரிப்போர் சிலர் முன் வைக்கின்றனர். இதில் உள்ள உண்மை என்னவெனப் பார்ப்போம். உண்மையில் இந்த முதலீட்டின் அளவை, குறித்த நாடுகளின் பணப் பெறுமதியின் அளவில் காணும் போதே, இதைப் பூரணமாக புரிந்து கொள்ளமுடியும். இந்தப் பணப் பெறுமானம் பலமடங்காக (உதாரணமாக இந்தியா 50 முதல் இலங்கை 100 மடங்கு மேலான பெறுமதியைக் கொண்டது) பணப்பெருக்கத்தைக் கொண்டது. மற்றொரு உண்மை மூன்றாம் உலக நாடுகளில் 2 டாலரைக் கொண்டு வாழமுடியும் என்றால், அதைக் கொண்டு மேற்கில் உயிர்வாழவே முடியாது. உதாரணமாக மேற்கில் உழைப்புக்கான அடிப்படைக் கூலி மாதம் சராசரியாக 1000 டாலராக உள்ளது. ஆனால் அதைக் கொண்டு ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதே சிரமமானது. அனைத்து உழைப்பளார்களிடமும் இருந்து அறவிடப்படும் கட்டாய வரியில் இருந்து மீள் வழங்கப்படும் சமூக உதவியைக் கொண்டே, இங்கு அடிப்படைக் கூலியை பெறுவோர் உயிர் வாழ்கின்றனர். ஆனால் இந்த 1000 டாலரைக் கொண்டு இலங்கையில் அல்லது இந்தியாவில் என்ன செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரிந்ததே. மேற்கு மற்றும் மூன்றாம் உலக நாடுகளில் உற்பத்திக்கான கூலியில் உள்ள அடிப்படையான பாரிய வேறுபாடு சார்ந்து, அந்நிய மூலதனம் மூன்றாம் உலக நாடுகள் மேல் பாயும் போது பலமடங்காகி, பிரமாண்டமான சமூக விரோதப் பாத்திரத்தை மனிதனுக்கு எதிராக உருவாக்குகின்றது.


இப்படி உலகில் அதிக அந்நிய முதலீடுகள் ஊடுருவியுள்ள நாடுகளையும், அவற்றின் தொகையையும் கோடி ஈரோக்களில் பார்ப்போம்.


1999 2000
மொத்தம் 1141000 கோடி ஈரோ 1276900 கோடி ஈரோ
அமெரிக்கா 681499 கோடி ஈரோ 748549 கோடி ஈரோ
ஐரோப்பா 322277 கோடி ஈரோ 355337 கோடி ஈரோ
ஜப்பான் 50045 கோடி ஈரோ 46426 கோடி ஈரோ
ஆஸ்திரேலியா * 36749 கோடி ஈரோ
கனடா 26858 கோடி ஈரோ 30038 கோடி ஈரோ
ஹாங்காங் 18143 கோடி ஈரோ 21055 கோடி ஈரோ
பிரேசில் 11721 கோடி ஈரோ 15963 கோடி ஈரோ
தென்கொரியா 16641 கோடி ஈரோ 11887 கோடி ஈரோ
தாய்வான் 3101 கோடி ஈரோ 3447 கோடி ஈரோ
மெக்சிக்கோ 1938 கோடி ஈரோ 1987 கோடி ஈரோ
மற்றவை 5065 கோடி ஈரோ 5418 கோடி ஈரோ

* தெரியாது


அந்நிய முதலீடுகள் தொகையின் அடிப்படையில் மேற்கில் அதிகமாக இருக்கின்றது. இதுபோல் தான் கடனும். ஆனால் பணப்பெறுமதி அடிப்படையிலும், உழைப்புக்கான கூலி அடிப்படையிலும் அந்நிய மூலதனத்தையும், கடனையும் மேற்குடன் ஒப்பிடும் போது, அவை மூன்றாம் உலகில் பல மடங்காக இருக்கின்றது. இவை நாடுகளின் திவால்தன்மையையே ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இவை மூன்றாம் உலகில் புகுந்தாலும் சரி, மேற்கில் புகுந்தாலும் சரி அனைத்து மேற்கு மூலதனமாகவே இருக்கின்றது. மாற்றாக மூன்றாம் உலகை நோக்கிய மேற்கத்திய மூலதனக் கொள்கை, நேரடியான ஈவிரக்கமற்ற சமூக அழித்தொழிப்பாகவே செயல்படுகின்றது. மேற்கில் சலுகைக்கு உட்பட்ட எல்லைக்குள் செயலாற்றுகின்றது. இதுவே உலகமயமாதலின் இன்றைய எதார்த்தம். மூலதனத்தை உற்பத்தி செய்யும் தொழிலாளி வர்க்கம் மேற்கில் ஸ்தாபனமாக இருப்பதும், மூன்றாம் உலக நாடுகளில் தொழிலாளர்கள் ஸ்தாபனமாகாத நிலைமை மூலதனத்தின் சலுகைகளையும், சுரண்டலின் அளவையும், சுரண்டலின் பன்மையையும், தெரிவையும் கூடத் துல்லியமாக மாற்றியமைக்கின்றது.


இப்படியான இந்த அந்நிய முதலீடுகள் உலகமயமாதல் ஊடாக எந்த வேகத்தில் முன்னேறி, எப்படி உலக மக்களைச் சூறையாடுகின்றனர் எனப் பார்ப்போம். அனைத்துப் பெறுமானமும் கோடி டாலரில்


1 982 1990 2000
அந்நிய முதலீடு 5700 கோடி டாலர் 20200 கோடி டாலர் 127100 கோடி டாலர்
அந்நிய முதலீடுகள் கடத்தியவை 3700 கோடி டாலர் 23500 கோடி டாலர் 115000 கோடி டாலர்
அந்நிய முதலீட்டின் இருப்பு 71900 கோடி டாலர் 88900 கோடி டாலர் 631400 கோடி டாலர்
அந்நிய முதலீடு மூலமான அந்நிய இருப்பு 56800 கோடி டாலர் 171700 கோடி டாலர் 597600 கோடி டாலர்
உள்நாட்டில் அந்நிய பொருட்களின் விற்பனை 246500 கோடி டாலர் 546700 கோடி டாலர் 1568000 கோடி டாலர்
உள்நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் விற்பனை 56500 கோடி டாலர் 142000 கோடி டாலர் 313700 கோடி டாலர்
உள்நாட்டில் அந்நிய சொத்துகள் 188800 கோடி டாலர் 574400 கோடி டாலர் 2110200 கோடி டாலர்
உள்நாட்டில் அந்நியரின் ஏற்றுமதி 63700 கோடி டாலர் 116600 கோடி டாலர் 357200 கோடி டாலர்
அந்நிய முதலீடு வழங்கிய வேலை வாய்ப்பு 1.74 கோடி 2.37 கோடி 4.5 கோடி
மிகப் பெரிய வீட்டு உற்பத்தியில் அந்நியர் 1061200 கோடி டாலர் 2147500 கோடி டாலர் 3189500 கோடி டாலர்

அந்நிய முதலீடுகள் எப்படி தேச எல்லைகளைக் கடந்து ஊடுருவிச் சுரண்டிச் செல்லுகின்றது என்பதையே இவை அழகாக எடுத்துக்காட்டுகின்றது. தேசங்களின் தனித்துவத்தைச் சிதைப்பதையும், தேசங்களைக் கொள்ளை அடித்துச் செல்வதையும் தாண்டி, உலகமயமாதல் எதையும் மனித குலத்துக்கு செய்து விடவில்லை என்பதையே அந்நிய மூலதனம் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. வீட்டு உற்பத்தி மீதான அந்நியர் கட்டுப்பாடுகள் மற்றும் ஆதிக்கம், சிறு உற்பத்திகளை இல்லாதொழிக்கின்றது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தை அந்நியரின் ஆதிக்கத்துக்குள் சென்றுவிட்டதை இவை எடுத்துக்காட்டுகின்றது. தேசங்களின் சந்தை அந்நியப் பொருட்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, தேசிய உற்பத்திகளையும் அது சார்ந்த பண்பாட்டு வேர்களையும் ஒழித்துக் கட்டுவதையே அந்நிய முதலீட்டின் விளைவுகள் நேரடியாக எடுத்துக் காட்டுகின்றது. 1982இல் இருந்ததைவிட 2000இல் புதிதாக 2.76 கோடி மக்கள் அந்நிய முதலீட்டு நிறுவனங்களில் புதிதாக தொழில் செய்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்களின் விற்பனை 2,57,200 கோடி டாலரால் அதிகரித்தது. அண்ணளவாக இது 5 மடங்கால் அதிகரித்தது. அந்நிய பொருட்களின் விற்பனை 13,21,500 கோடி டாலராக அதிகரித்தது. அதாவது 6.3 மடங்கால் அதிகரித்தது. வீட்டு உற்பத்தி பொருட்களில் விற்பனை 21,28,300 கோடி டாலரால் அதிகரித்தது. அண்ணளவாக மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. அந்நிய சொத்துக்களின் இருப்புகள் 10 மடங்காக அதிகரித்துள்ளது. அந்நிய முதலீட்டின் மூலம் நாட்டைவிட்டு கடத்திச் சென்றவை 1980இல் 3,700 கோடி டாலர் மட்டுமே. 1990இல் 23,500 கோடி டாலர். இது 2000இல் 1,15,000 கோடி டாலராகியது. அந்நிய நாடுகளின் தலையீடு தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லுகின்றது. தேசங்களில் வாழ்ந்த, வாழ்கின்ற மக்கள் இவற்றை அந்நியரிடம் நாளந்தம் இழந்து செல்வதையே இவை எடுத்துக்காட்டுகின்றது.


சொந்தநாட்டின் உற்பத்தி அழிவால் சொந்த நாட்டின் நுகர்வின் அளவு வேகமாகக் குறைகின்றது. மேலுள்ள தரவுகள் உள்நாட்டு உற்பத்திகள் அழிந்து வருவதையே தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. தேசத்தினதும், மக்களினதும் சுய உற்பத்திகளை அழிப்பதன் மூலம், அதில் ஈடுபட்ட பல பத்து கோடி மக்கள் தமது உழைப்பையும் உழைப்பின் ஆற்றலையும் இழந்துள்ளனர். இதன் மூலம் பொருட்களின் மேலான அறிவையும், அதன் பன்மைத்துவம் சார்ந்த வரலாற்று பயன்பாட்டையும் இழந்து வருகின்றனர். மனித இனத்தின் இந்த இழப்பு, மனித உயிர்வாழ்வதற்கான அடிப்படையை வேட்டுவைக்கும் முதற்படிகளில் கால் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் மக்கள் இயற்கையுடன் இயற்கையாக வாழ்ந்த நீண்ட நெடிய வாழ்வுக்கு ஏற்படும் அழிவு, பாரிய சுற்றுச்சூழல் சூறையாடலாகவே மாறிவிடுகின்றது.


அளவுக்கு மீறிய வகையில் சுற்றுச்சூழலை அந்நிய மூலதனம் வரைமுறையின்றி அழிக்கின்றது. ஒட்டுமொத்த விளைவால் வறுமை விரவிப் பரந்து பாய்கின்றது. அந்நியப் பொருட்களை வாங்கி நுகருமாற்றல் மேல் இருந்து கீழாக குறைந்து வருவதால், கீழ் உள்ளவர்களின் நுகரும் ஆற்றல் அழித்தொழிக்கப்படுகின்றது. பண்பாட்டு மற்றும் கலாச்சாரங்கள் உற்பத்தி உறவுகளில் இருந்து கட்டமைக்கப்படுவதால், தேசிய உற்பத்தியில் ஏற்படும் அழிவால் சொந்த தேசியப் பண்பாடுகள் கலாச்சாரங்கள் வேகமாக சீரழிவுக்குள்ளாகி பண்பாடற்ற மக்கள் கூட்டத்தை உருவாக்குகின்றது. அந்நியப் பொருள் சார்ந்த பண்பாடுகள் சமூகக் கூட்டைத் தகர்த்து, அதனிடத்தில் லும்பன் தனமான, வக்கிரமான, நுகர்வு வேட்கை சார்ந்த தனிமனிதப் பண்பாட்டை, கலாச்சாரத்தை உருவாக்குகின்றது. இது சூறையாடும் தனிமனித வக்கிரத்தால் வேட்கை அடைகின்றது. சமூக இருப்பின் அனைத்துக் கூறையும் மறுதலிக்கின்றது. பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் சூறையாடும் வேட்கையே, தனிமனிதனின் வேட்கையாக மாற்றப்பட்டு, அப்பண்பாடே உலகமயமாதல் பண்பாடாகி விடுகின்றது.


இப்படி உருவாகும் பண்பாட்டுக்கு அடிப்படையான கூறுகளையே அந்நிய முதலீடுகள் செய்கின்றன. தேசங்களையே கொள்ளையடிக்கும் இந்த அந்நிய முதலீடுகளை பிராந்திய ரீதியாக எடுத்துப் பார்ப்போம். அந்நிய முதலீடுகள் கோடி டாலரில்


பிரதேசம் 2000 2001 2002 2003 2003 2004
அரபு மற்றும் ஆப்பிரிக்கா 3,090 3,200 3,410 3,590 3,780 3,980
ஆசியா மற்றும் பசிபிக் நாடுகள் 25,060 25,180 25,810 27,450 29,240 31,090
ஐரோப்பா 37,560 37,740 38,460 39,310 40,200 41,050
தென் அமெரிக்கா 6,560 6,570 6,840 7,290 7,820 8,350
வடஅமெரிக்கா 47,740 47,570 49,460 52,230 55,020 57,820

அந்நிய முதலீடுகள் வருடாந்தரம் சீராகவே, அனைத்து பிரதேசங்களிலும் அதிகரித்துச் செல்வதை இது எடுத்துக் காட்டுகின்றது. உலகைச் சூறையாடும் உலகமயமாக்கல் கொள்கை, உலகத்தின் எந்தப் பிரதேசத்தையும் விட்டுவிடவில்லை. மனித குலத்தின் அடிமைத் தனங்களின் மீது உலகமயமாதல் ஆதிக்கத்தை நிறுவும் மூலதனத்தின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்கு எல்லைகள் எதுவும் கிடையாது என்பதையே தரவுகள் தெளிவாகவே பறைசாற்றி விடுகின்றது. உலகில் விதிவிலக்கற்ற வகையில் தேசங்களையும், அதில் வாழும் மக்களை சூறையாடுவதுமே உலகமயமாதலின் ஜனநாயகமாகும்.


1980இல் பெரும் பன்னாட்டு நிறுவனத்தின் வர்த்தகத்தில் 35 சதவீதம் சொந்த நாட்டுக்கு வெளியில் போடப்பட்ட முதலீட்டில் இருந்தே கிடைத்தது. மேற்கில் காணப்படும் செல்வத்தின் கொழிப்பு வெளியில் இருந்தே கிடைக்கின்றது. தேசங்களின் எல்லைகளைக் கடந்து மக்களின் வாழ்வையே அழித்தொழிக்கும் இந்த ஆக்கிரமிப்பு, 1985க்கு பின்பாக தலைகால் தெரியாதளவுக்கு வேகம் பெற்றது. 1990இல் உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்களின் மொத்த முதலீடு 1,70,000 கோடி டாலராகும். இது 1985க்கும் 1990க்கும் இடையில் 35 சதவீதத்தால் வருடாந்தரம் அதிகரித்தது. இதன் மூலம் அந்நிய ஏற்றுமதி 13 சதவீதத்தாலும், வீட்டு பயன்பாட்டு உற்பத்தியை 12 சதவீதத்தாலும் பன்னாட்டு நிறுவனங்கள் உலகளவில் புதிதாகக் கட்டுப்படுத்தின. எதிர்மறையில் மக்கள் இதனால் தமது சுயபொருளாதார கட்டுப்பாட்டை இழந்தனர். இது சார்ந்த பண்பாட்டுச் சீரழிவுகளைச் சந்தித்தனர். உற்பத்தி சார்ந்த உலகளாவிய பன்னாட்டு அந்நிய முதலீடுகள் வருடாந்தரம் தொடர்ந்து அதிகரித்து செல்லுகின்றது. மறுபக்கத்தில் உலகைச் சூறையாடுவதில் சளையாத போட்டி, ஏகாதிபத்தியத்துக்கு இடையில் கடுமையான முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்றது. இது தேசங்களின் தேசியத்தை அழித்து, தேசங்கடந்த முதலீட்டை அதிகரிக்க வைக்கின்றது. இவற்றை கீழ் உள்ள புள்ளிவிபரங்கள் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது.


தேசங் கடந்த உலகைச் சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களின் அந்நிய முதலீடுகள், ஏகாதிபத்திய முரண்பாடுகளாகி விடுகின்றது. போட்டி போட்டுச் சுரண்டும் இந்த அந்நிய முதலீடுகள் சதவீதத்தில்


நாடு 1975-79 1985-89 1991
ஐரோப்பிய யூனியன் 40 44 45.4
அமெரிக்கா 45 16.9 16.6
ஜப்பான் 5.9 17.6 17.3


அந்நிய முதலீட்டில் ஏற்பட்ட கடுமையான சர்வதேச மாற்றத்தையே இது எடுத்துக் காட்டுகின்றது. உலகை அடிமைப்படுத்தி தக்கவைக்கும் சமூக ஆதிக்கத்தை, சுரண்டும் சுதந்திரமான ஜனநாயகம் என்ற எதார்த்த உலகப் போக்கு இணங்க, மூலதனத்தை கொண்டு நடத்தும் ஏகாதிபத்திய போராட்டத்தையே இது எடுப்பாக எடுத்துக் காட்டுகின்றது. ஜப்பான் தனது அந்நிய முதலீட்டை 1990இல் 214.6 சதவீதத்தால் அதிகரிப்பைச் செய்தது. இதன் மூலம் அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் இடையே கடுமையான இழுபறியான போராட்டத்தை நடத்தினர். 1988இல் ஜப்பானின் தேசிய உற்பத்தி 35,00,000 கோடி இந்தியா ரூபாவாகியது. இதன் மூலம் அமெரிக்காவையும் மிஞ்சியது. அதேநேரம் 1987இல் ஜப்பனின் மொத்த வெளிநாட்டுச் சொத்தின் பெறுமதி 42,00,000 கோடி இந்தியா ரூபாவாகியது. ஜப்பான் அமெரிக்காவிலேயே தனது முதலீட்டை பெருக்கிக்கொண்டது. ஆனால் பின்னால் ஜப்பான் மூலதனத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி, அமெரிக்காவை முன்னுக்கு கொண்டு வந்தது. இவை அலையலையாக ஏற்றயிறக்கத்தை ஏற்படுத்தியது. இவற்றைத் தொடர்ந்து துல்லியமாக ஆராய்வோம்.


சொந்த நாடுகளுக்கு வெளியில் மற்றைய நாடுகளை சூறையாடப் போடப்பட்ட மொத்த அந்நிய மூலதனத்தில் தனித்தனி நாடுகளின் பங்கு சதவீதத்தில்


நாடுகள் 1971 1980 1990 1994
அமெரிக்கா 52 42.8 26.1 25.6
ஜப்பான் 2.7 3.8 12.1 11.7
பிரிட்டன் 14.5 15.6 13.8 11.8
ஜெர்மனி 4.4 8.4 9.1 8.6
பிரான்ஸ் 5.8 4.6 6.6 7.7


இங்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் மூலதனத்துக்கு உலகளவில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான தொடர் நெருக்கடியை எடுத்துக்காட்டுகின்றது. ஜப்பானின் வெளிநாட்டு முதலீடு 2001, 2002இல் 2,18,600 (அண்ணளவாக 2086 கோடி டாலராக) கோடி யென்னாக இருந்தது. 1992இல் இது 50,000 (அண்ணளவாக 500 கோடி டாலர்) கோடி யென்னாக இருந்தது. 1992 உடன் ஒப்பிடும் போது, 2001, 2002இல் ஜப்பானின் அந்நிய முதலீடு 4 மடங்கு மேலாகியுள்ளது. உலகளாவிய பொருளாதார ஆதிக்கத்துக்கான போட்டி கடுமையானதும், இழுபறியானதுமான ஒரு போராட்டமாக மாறி இருப்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. ஈராக் நெருக்கடி முதல், ஐரோப்பிய யூனியனில் முரண்டு பிடிக்கும் பிரிட்டிஷ் கொள்கைகளுக்கு அடிப்படையான விளக்கம், மூலதனத்தின் உலகளாவிய வெற்றி தோல்விகளில் இருந்தே பிறக்கின்றது.


ஜப்பான், மற்றும் ஐரோப்பிய சர்வதேச ரீதியாக உலகை மறுபங்கீடு செய்ய முனைந்த அமைதியான, சுதந்திரப் போட்டியை, அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் ஈடுகொடுக்க முடியவில்லை. தற்காப்பு நிலையில் நின்று, பலாத்காரமான ஆக்கிரமிப்புகள் ஊடாக காலனிகளை உருவாக்கி உலகைத் தக்கவைக்கவே முனைகின்றன. இதேநேரம் ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவின் இராணுவ ரீதியான தற்காப்பை எதிர்கொள்ளும் வகையிலும், எதிர்காலத்தில் எதிர்தாக்குதல் நிலையை அடையவும் தனது சொந்த இராணுவக் கட்டமைபை ஒருங்கிணைத்து வருகின்றனர். மூலதன நெருக்கடிகள் சமகாலத்தில் இராணுவ ரீதியானதாக அதிகரித்து வருகின்றது. மறுபக்கத்தில் தொடர்ந்தும் அமெரிக்காவின் அந்நிய முதலீட்டின் அளவு சரிந்த போதும், உலகளவில் அதிக முதலீட்டை அமெரிக்காவே செய்யும் நிலை தொடர்ந்தும் அமெரிக்காவுக்குச் சாதகமாகவே உள்ளது.


தேச எல்லைகளைக் கடந்து சென்ற அந்நிய மூலதனத்தின் பாய்ச்சல் சதவீதத்தில்

நாடுகள் 1990 1998 1999
அமெரிக்கா 89 223 179
ஜப்பான் 119 91 95
ஜெர்மனி 54 329 334
பிரான்ஸ் 57 415 -


ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடக்கும் இழுபறியான போராட்டத்தை மட்டுமின்றி, அவர்கள் உலகெங்கும் எப்படி நாலுகால் பாய்ச்சலில் ஊடுருவி வருகின்றனர் என்பதையுமே இவை எடுத்துக்காட்டுகின்றது. அந்நிய முதலீடு மட்டுமின்றி, இதனுடன் நிதி மூலதனமும் அக்கம்பக்கமாகச் செயல்படுகின்றது. இது கடன் என்ற போர்வையில், வட்டி ஊடாகவும் தேசங்களையே சூறையாடுவதும், உள்நாட்டு உற்பத்திகளைக் கடுமையான கடன் நிபந்தனையூடாக அழித்து ஏகாதிபத்தியத்துக்கு இசைவாக உள்நாட்டு பொருளாதாரத்தை மாற்றி விடுகின்றனர். இதன் மூலம் உலகை அடிமைப்படுத்தி, கட்டுப்படுத்துகின்றனர். நாடுகளின் திவால் தன்மையை உருவாக்கி, அதை தனக்கு இசைவானதாகவே மாற்றிவிடுகின்றனர். வருடாந்தரம் அந்நிய முதலீடு ஊடான சுரண்டல் மற்றும் கடனுக்கான வட்டியை அறவிடுவது அதிகரித்துச் செல்வதன் மூலம், ஏகாதிபத்திய உலக ஆதிக்கம் பரந்துபட்ட மக்களின் மேல் கடுமையாகி அவையே பெரும் சுமையாகி வருகின்றன. சுதேசிய மக்கள் தமது நாடுகளில் உழைத்துக் கூடி வாழமுடியாத நிலையில், பரிதாபகரமாகக் கையேந்தி நிற்கும் காட்சி உலகமயமாக்கலில் இரசனைக்குரியதாக, இதைக் காட்டியே பொறுக்கித் தின்னும் தன்னார்வக் கும்பலை உருவாக்குகின்றது. சுதேசிய மக்களைக் கொள்ளை அடித்தவர்களே, அதில் இருந்த சில சில்லறைகளை தன்னார்வக் குழுக்களுக்கு கிள்ளிப் போடுவதே கொடையாகப் பசப்பப்படுகின்றது.


இப்படி ஏகாதிபத்தியங்கள் உலகைத் தமக்குக் கீழ் அடக்கியாள்வதன் மூலம், மக்களை வரைமுறையின்றி சுரண்டவும், தமக்கு இடையில் உலகச் சந்தையைக் கைப்பற்ற நடத்தும் போராட்டம், எதார்த்தத்தில் எப்படி பிரதிபலிக்கின்றது எனப் பார்ப்போம். அந்நிய முதலீடுகள் கோடி டாலரிலும், இது உலகளவில் சதவீதத்திலும்


நாடுகள் 1989 1992 1994 1982-1986 1987-1991

அமெரிக்கா 2600 கோடி 3900 கோடி 4600 கோடி 19 சதவீதம் 13 சதவீதம்
ஜப்பான் 4400 கோடி 1700 கோடி 1800 கோடி 13 சதவீதம் 18 சதவீதம்
பிரிட்டன் 3500 கோடி 1900 கோடி 2500 கோடி 18 சதவீதம் 14 சதவீதம்
ஜெர்மனி 1800 கோடி 1600 கோடி 2100 கோடி 10 சதவீதம் 10 சதவீதம்
பிரான்ஸ் 2000 கோடி 3100 கோடி 2300 கோடி 5 சதவீதம் 11 சதவீதம்


அமெரிக்காவும், பிரிட்டனும் உலகைச் சூறையாடும் தமது சுதந்திர உரிமையைத் தக்கவைப்பதில், தொடர்ச்சியான நெருக்கடியில் சிக்கி நிற்பதையே இவை எடுத்துக்காட்டுகின்றது. உலகளவில் உருவாக்கியுள்ள மூலதன ஆதிக்கத்தைத் தக்கவைக்க கடுமையாகவே போராடுவதையும் இது காட்டுகின்றது. ஜப்பான், ஐரோப்பா (பிரான்ஸ், ஜெர்மனி...) போன்ற ஏகாதிபத்தியங்கள், உலகச் சந்தையைக் கைப்பற்றுவதன் மூலமே உலக ஆதிக்கத்தை நிறுவமுனைகின்றது. ஒரு ஏகாதிபத்திய யுத்தம், பொருளாதாரக் கட்டுமானத்தின் மேல் தொடர்ச்சியாக அலையலையாக அன்றாடம் நடக்கின்றது. இருந்தபோதும் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் மூலதனங்கள் இரண்டாம் உலக யுத்தகால அனுகூலங்களைத் தக்கவைத்து நீடிப்பதால், உலகளவில் மிகப் பெரிய அந்நிய மூலதனத்தைத் தக்கவைக்க முடிகின்றது.

இதை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால், அந்நிய முதலீடு கோடி டாலரில்


2001 2002
அமெரிக்கா 14,400 3,000
பிரிட்டன் 6,200 2,500
பிரான்ஸ் 5,520 5,150
சீனா 4,680 5,270
லுக்சம்பேர்க் * 12,500
ஜெர்மனி 3,400 3,800
நெதர்லாந்து 5,120 2,910
கனடா 2,900 2,050
* தெரியாது


உலகச் சந்தையைக் கட்டுப்படுத்தும் புதிய அந்நிய முதலீடுகள், ஏகாதிபத்தியத்துக்கு இடையில் இடம்மாறி வருவதையே இது எடுத்துக்காட்டுகின்றது. அந்நிய முதலீட்டை உலகளவில் குவிப்பதில் சீனாவும் புதிதாகக் களமிறங்கியுள்ளது. சீனாவுக்குள் ஊடுருவிய அந்நிய மூலதனம் மலிவு உற்பத்திகள் மூலம் உலகச் சந்தையைத் திணறடிக்க வைக்கின்றது. சீனப் பாசிசச் சர்வாதிகார அரசும், சீன முதலாளிகளும் இணைந்து, 100 கோடிக்கு மேற்பட்ட சீன உழைக்கும் மக்களை என்றுமில்லாத அளவில் தாம் மட்டும் அதிகளவில் சுரண்டுவதன் மூலம், பெரும் நிதியாதாரங்களைத் திரட்டுகின்றனர். இந்த நிதியை உள்நாட்டிலும், அந்நிய நாடுகளிலும் குவிக்கின்றனர். இதன் மூலம் சீனா ஒரு ஏகாதிபத்தியமாக தன்னை மாறிவருகின்றது. இதன் மூலம் சீனா உலகில் பலமுனைகளுக்கு இடையிலான புதிய ஏகாதிபத்திய நெருக்கடிகளைத் தொடங்கி வைத்துள்ளது.


உலகளாவிய நிதி மூலதனத்தை ஆராய்ந்தால், உலகமயமாதலில் சீனா வகிக்கும் சர்வதேச முக்கியத்துவத்தையும் அதன் ஏகாதிபத்தியப் போக்கையும் வெட்ட வெளிச்சமாக வெளிபடுத்துவதைக் காணமுடியும்.


2003இல் நிதி மூலதனத்தை அந்நிய நாடுகளில் அதிகமிட்ட நாடுகள்


ஜப்பான் 20.9 சதவீதம்
சீனா, ஹாங்காங் 9.8 சதவீதம்
ஜெர்மனி 9.2 சதவீதம்
சுவிஸ் 6.1 சதவீதம்
ரசியா 5.7 சதவீதம்
பிரான்ஸ் 4.8 சதவீதம்
தாய்வான் 4.8 சதவீதம்
நோர்வை 4.7 சதவீதம்
மற்றவை 34.3 சதவீதம்


நிதியாதாரங்கள் நாடு கடந்து செல்வதன் மூலம், சர்வதேச ரீதியான சூதாட்டத்தில் ஆழமாகவே கால்பதித்து நிற்பதை இவை குறிக்கின்றது. நிதி மூலதனத்தை நாடுகடத்திச் செல்வதில் அரசு மற்றும் மூலதனத்தின் பெரும் சொந்தக்காரராக உள்ள தனியாரும் ஈடுபடுகின்றனர். உற்பத்தியில் ஈடுபடாத நிதிகள், தன்னை பெருக்கிக் கொள்ள குறுக்கு வழியில் செயல்படுகின்றது. ஏகாதிபத்திய அரச கடன்களிலும், சர்வதேச கடன்களிலான சூதாட்டத்திலும் இந்த நிதியாதாரங்கள் ஏகாதிபத்தியத்தினால் கவர்ந்திழுக்கப்படுகின்றது. பெரும்பாலும் மூன்றாம் உலக நாடுகளில் கொள்ளையடிக்கும் பெரும் நிதிகள் முதல் ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான ஏற்றத் தாழ்வான வர்த்தகப் பற்றாக்குறைகளால் உருவாகும் நிதிகள் இப்படி மாறிவிடுகின்றது. இந்த வகையில் ஜப்பான், சீன நிதிகள் பெருமெடுப்பில் அமெரிக்காவில் குவிந்து கிடக்கின்றது. அத்துடன் மக்களின் சிறு சேமிப்புக்களையும் கூட எடுத்து சர்வதேச நிதிச் சூதாட்டங்களில் ஈடுபடுகின்றனர். மக்களின் உழைப்பில் உருவான நிதிகளை எடுத்து தனது சூதாட்டத்தில் இறக்கிவிடுகின்றன. இதற்கு மக்களின் சேமிப்பாக உள்ள ஓய்வூதிய நிதிகளையும் பயன்படுத்து கின்றனர். மக்களின் ஓய்வூதிய நிதியில் இருந்து சர்வதேச முதலீடு 1989இல் 30200 கோடி டாலராக இருந்தது. இது 1994இல் 79,000 கோடி டாலராகியது. 1990இல் ஓய்வூதியம் மற்றும் பரஸ்பர நிதி சாந்த முதலீடு 20,00,000 (20 லட்சம்) கோடி டாலராகியது. இது 1980உடன் ஒப்பிடும் போது பத்து மடங்கு அதிகமாகும். இதேபோல் நிதி மூலதனத்திலும் ஓய்வூதிய நிதி இறக்கப்படுகின்றது. இப்படி உருவாகும் நிதி மூலதனத்தை யார் தமது சொந்தப் பற்றாக்குறையுடன் இறக்குமதி செய்கின்றனர் எனப் பார்ப்போம்.


2003இல் நிதி மூலதனம் இறக்குமதி செய்தவர்கள் யார் எனப் பார்ப்போம்.


அமெரிக்கா 75.5 சதவீதம்
ஒஸ்ரியா 2.8 சதவீதம்
ஸ்பானியோல் 2.5 சதவீதம்
பிரிட்டன் 2.3 சதவீதம்
மெக்சிகோ 2.2 சதவீதம்
இத்தாலி 1.5 சதவீதம்
போத்துகல் 1.4 சதவீதம்
மற்றைய நாடுகள் 12.0 சதவீதம்


உலகில் 75 சதவீதமான நிதியாதாரங்களை அமெரிக்காவே இறக்குமதி செய்துள்ளது. உலகளவில் மக்களிடம் கொள்ளை அடிக்கப்பட்ட நிதியில் 75 சதவீதம் அமெரிக்காவுக்குள் பாய்ந்து சென்றுள்ளது. இந்த நிதி தான் அமெரிக்கப் பொருளாதாரத்தை சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தக்கவைக்கின்றது. நிதி மூலதனம் அமெரிக்காவை நோக்கி பாய்ச்சல் என்பது, அமெரிக்கா பொருளாதார மீதான அந்நிய ஆதிக்கத்தை இறுக்குகின்றது. உதாரணமாக, சவூதி அரேபியா அமெரிக்காவில் 60,000 கோடி டாலர் முதலிட்டுள்ளது. இவை எல்லாம் அமெரிக்கப் பொருளாதாரத்தை மட்டுமல்ல, உலகில் அமெரிக்காவே மிகப்பெரிய கடனாளி நாடாகியுள்ளது. இது அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்கள் மேல், ஒரு கடுமையான நெருக்கடியை உருவாக்குகின்றது. இதன் போது அமெரிக்கா தான் உருவாக்கிய உலகமயமாதல் சட்டவிதிகளை ஒருதலைப்பட்சமாக மீறுவதுடன், தனக்கு விதிவிலக்கைக் கோரும் அளவுக்கு உலகையே தனது இராணுவ வலிமையால் மிரட்டுகின்றது.


மறுபக்கத்தில் அமெரிக்காவில் அமெரிக்கர் அல்லாதோர் ஆதிக்கம் பெருமெடுப்பில் உள்ளது. உதாரணமாக அமெரிக்கர் அல்லாத நிதி முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் வணிகக் கடனில் 40 சதவீதத்தையும், பெரும் நிறுவனப் பங்குப் பத்திரத்தில் 26 சதவீதத்தையும், அமெரிக்கா பங்குகளில் 13 சதவீதத்தையும் கைப்பற்றியிருந்தனர். இந்த வகையில் ஜப்பானை அடுத்து சீனாவின் மூலதனம் அமெரிக்காவுக்குள் அதிகளவில் சென்று, அமெரிக்கப் பொருளாதாரத்திலும் ஒரு கெடுபிடியை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் ஜப்பானுக்கு அடுத்ததாக, சீனாதான் அதிக நிதி மூலதனத்தை பங்குப் பத்திரம் மூலம் முதலிட்டுள்ளது. இது 2001இல் 8200 கோடி டாலராக இருந்தது. 2002இல் 11,900 கோடி டாலராக அதிகரித்தது. சீனா அசுரபலத்துடன் ஒரு ஏகாதிபத்தியமாக, சீனா மக்களின் பிணங்களின் மேலாக பரிணமித்து வருகின்றது. அதே நேரம் சீனாவின் கடன் ஒரு பாய்ச்சலை நடத்துகின்றது. 2002க்கு முந்திய ஐந்து வருடத்தை விடவும் கடன் இரண்டு மடங்காகியுள்ளது. இது 25,000 கோடி டாலரில் இருந்து 50,000 கோடி டாலராகியுள்ளது. கடன் எதற்காக வழங்கப்படுகின்றது என்று பார்த்தால் அதிர்ச்சியான விடயங்கள் வெளிவருகின்றன. உதாரணமாக சீனாவில் வாழ்பவர்களின் சராசரி வயதைக் குறைக்க உலக வங்கி கோருகின்றது.


இன்றைய சீன மக்களின் சராசரியான ஆயுள் வயதான 70 வருடங்கள், உலகச் சராசரியை விட 2 வருடம் அதிகம் என்கிறது உலகவங்கி. இதை, இரண்டு வருடங்களை, குறைப்பதன் மூலமே, மூலதனத்துக்கு அதிக லாபம் என்கின்றது. சராசரி வயதை 68 எனும் வகையில், அவர்களை உணவின் மூலம் உயிருடன் கொல்லக் கோருகின்றது. இதன் அடிப்படையில் பண்பாட்டு, கலாச்சார மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம் இதை சாத்தியமாக்கக் கோருகின்றது. பண்பாடு ரீதியாக உணவிலும் மாற்றத்தைச் செய்ய நிர்ப்பந்திக்கின்றது. அந்த அடிப்படையில் மாட்டு இறைச்சியையும், பால் கிரீமையும் உண்ணக் கோருகின்றது. இதற்காக 1999இல் 9.35 கோடி டாலரை கடனாக வழங்கியது. மாட்டுக் கறியை அதிகம் உண்பதன் மூலம் அதிகக் கொழுப்பை ஏற்படுத்தி மரணத்தை துரிதப்படுத்தவும், இதன் மூலம் ஏகாதிபத்திய மாட்டு இறைச்சிக்கான சந்தையாக சீனா மாறுவதையும் உறுதிசெய்ய உலகவங்கி கோரியது. அதிக மனிதர்கள் உயிருடன் இருத்தல், உலகமயமாதலுக்கு நெருக்கடிக்குரிய ஒன்றாக உலகவங்கி கருதுகின்றது. இப்படி உணவின் மூலம் படுகொலை செய்வது, உலக ஜனநாயகத்தினதும் அடிப்படையாகவும், சுதந்திரத்தின் உன்னதமான கோட்பாடாகவும் உள்ளது. சீனப் பாசிஸ்டுகளோ மக்களின் வாழ்வை அழிக்கவே கடன்களை வாங்கிக் குவிக்கின்றனர்.


உலகவங்கியின் வழிகாட்டலுக்கும் கட்டளைக்கும் ஏற்ப மக்களுக்கு எதிராக முன்னேறும் சீனா, 1990க்கு பின் அரசுத் துறையில் நான்கு கோடிப் பேரை அவர்களின் வேலையை விட்டே துரத்தியது. இன்றும் வருடம் 30 லட்சம் பேர் வேலையை இழந்து வருகின்றனர். இவை எல்லாம் உலகமயமாதல் என்ற சுதந்திர அமைப்பின் நிஜமான சாட்சியங்களே. சீனாவில் உண்மையில் இன்று என்ன நடக்கின்றது என்பதே, என்ன செய்யப் போகின்றது என்பதற்கு முன்மாதிரியாக உள்ளது. சீனப் பொருளாதாரம் முற்று முழுதாகவே மாஃபிய மயமாதலுக்குள் தகவமைந்துள்ளது. எந்தவிதமான அரசியல் சட்ட திட்டத்தையும், சீன மக்கள் பயன்படுத்தும் நிலை முற்றாக மறுக்கப்படுகின்றது. பரந்துபட்ட மக்கள் சிறிய சொத்துக்களை வைத்திருக்கும் சட்டப்பூர்வமான உரிமையை, எந்தச் சட்டமும் பாதுகாக்கவில்லை. பெரும் பணக்காரக் கும்பல், மாஃபிய வலைப்பின்னலூடாக இணைத்து பலாத்காரமாகவே சீன மக்களிடம் பறிமுதலையே நடத்துகின்றனர். சீன மக்களின் அற்ப சொத்துக்களையும், நீதிமன்றம் மற்றும் போலீசாரின் துணையுடன் சட்டப்பூர்வமாகவே பெரும் முதலாளிகள் பறித்தெடுக்க அரசு துணை நிற்கின்றது. சுரண்டல் கட்டமைப்பும் கூட மாஃபிய வலைப் பின்னலின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டுவிட்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் சீனாவை ஆள்வது திடீர்ப் பணக்காரக் கும்பல் சார்ந்த ஒரு மாஃபிய கும்பல் தான். இதன் மூலம் உயர்ந்த சுரண்டல் வீதத்தை, உள்நாடு மற்றும் அந்நிய மூலதனத்துக்கு உறுதி செய்யப்படுகின்றது. சமூகப் பாதுகாப்புத் திட்டம் எதுவும் சீன மக்களுக்கு இன்று கிடைப்பதில்லை. எந்த உரிமையும் மக்களுக்குக் கிடையாது. சீனாவில் சுரண்டுவதுக்கும், சூறையாடுவதற்கும் உள்ள ஜனநாயகம் சார்ந்த சுதந்திரம், அந்நிய மூலதனத்தை இயல்பாகவே தொடர்ச்சியாகக் கவர்ந்தெடுப்பதை உறுதி செய்கின்றது. இது எந்த வேகத்தில் வெறியாட்டம் போடுகின்றது என்பதை சீனாவில் ஊடுருவியுள்ள அந்நிய முதலீடே நமக்கு எடுத்துக்காட்டுகிறது.


உண்மையில் அந்நிய முதலீடுகள் சீனாவில் புகுந்த வடிவத்தை நாம் பார்ப்போம்.


1989 300 கோடி டாலர்
1997 4200 கோடி டாலர்
1999 3800 கோடி டாலர்
2002 5300 கோடி டாலர்


மற்றொரு புள்ளிவிபரப்படி சீனாவில் அந்நிய முதலீடு


1997 1998 1999 2000 2001
சீனா 4423.7 4375.1 4031.9 4077.2 4684.6
சீனா ஹாங்காங் 1136.8 1477.0 2459.6 6193.8 2283.4


சீன முதலாளிகள் முதலாளித்துவ மீட்சியை நடத்தி கம்யூனிசத்தை தூக்கி எறிந்த பின்பு, அந்நிய மூலதனம் எப்படி எல்லை கடந்து ஊடுருவி வருகின்றது என்பதை இவை எடுத்துக் காட்டுகின்றது. இதைத்தான் மூலதனம் சுதந்திரம், ஜனநாயகம் என்று மார்பு தட்டுகின்றனர். சுதந்திரத்துக்காவும், ஜனநாயகத்துக்காவும் குரல் கொடுத்துப் போராடுவதாக பசப்பும் எந்த ஈனர்களும், இதனால் ஏற்பட்ட சமூக விளைவை ஆராய்வதில்லை. உண்மையில் பரந்துபட்ட மக்களின் சர்வாதிகார கம்யூனிசத்துக்கு எதிராக, ஜனநாயகத்தின் பெயரிலும் சுதந்திரத்தின் பெயரிலும் நடந்த முதலாளித்துவ மீட்சியைத் தொடர்ந்து, சீன முதலாளித்துவ வர்க்கம் சிலிர்த்துக் கொண்டது. அந்நிய மூலதனம் என்றுமில்லாத குதூகலத்தில் துள்ளிக் குதித்தது. இதன் மொத்த விளைவு என்ன? 1989இல் வெறும் 300 கோடி டாலர் அந்நிய முதலீடு என்ற நிலை மாறி, 2002இல் இது 20 மடங்கையும் தாண்டிச் சென்றது. இது சீன மக்களின் வாழ்வியல் அடிப்படைகளையே முற்றாகத் தகர்த்துள்ளது.


சமூகப் பாதுகாப்பு என எதுவுமற்ற நிலைக்குள், சீன மக்கள் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்காக தமது முதுகுத் தோலை உறித்து எடுத்து பறையாக்கும் மூலதனத்தின் வக்கிரத்துக்கு இரையாக்கப் படுகின்றனர்.


இப்படி உண்மையில் அந்நிய மூலதனம் ஊடுருவிப் பாய்ந்த வேகம் மலைக்க வைக்க கூடியவை. 19992002க்கும் இடையில் மொத்தமாக உலகளாவிய அதிக அந்நிய முதலீடுகள் இடப்பட்ட மேற்கு அல்லாத நாடுகளை எடுத்து ஆராய்ந்தால்


சீனா 38400 கோடி டாலர் (19822002க்கு இடையில் 44800 கோடி டாலர்)
பிரேசில் 15800 கோடி டாலர்
அர்ஜென்டினா 6500 கோடி டாலர்
போலந்து 5100 கோடி டாலர்
ரசியா 2600 கோடி டாலர்
இந்தியா 2400 கோடி டாலர்
பிலிப்பைன்ஸ் 1300 கோடி டாலர்
இந்தோசீனா 500 கோடி டாலர


ஒப்பீட்டளவில் சீனாவில் குவிந்த அந்நிய மூலதனம் மிகப் பிரம்மாண்டமானது. 19821998க்கும் இடையில், அதாவது சீன முதலாளித்துவ மீட்சிக்கு பிந்திய 17 வருடத்தில், சீனாவில் ஊடுருவிய அந்நிய முலதனம் 6400 கோடி டாலர் மட்டுமே. அதற்குப் பிந்திய காலத்தில் அதாவது உலகமயமாதலின் வேகநடை போடத் தொடங்கியதன் பின்பாக 1999க்கும் 2002க்கும் இடைப்பட்ட நான்கு வருடத்தில் 38,400 கோடி டாலர் அந்நிய மூலதனம் சீனாவில் வெள்ளமாக புகுந்துள்ளது. இது கட்டுக்கடங்காத வேகத்தில் செல்லுகின்றது. இது சார்ந்த உற்பத்திகள் மேற்கத்திய சந்தைகளைத் தடுமாற வைக்கின்றது. மேற்கில் உள்ள உற்பத்தி மையங்கள், தொழிற்சாலைகள் இரவோடு இரவாகவே புதிய காதலியுடன் சீனாவுக்குள் தப்பி ஓடிவிடுகின்றது.


இப்படிச் சீனாவை நோக்கி ஓடிவந்த, ஓடிவரும் அந்நிய மூலதனங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை எனப் பார்ப்போம். சீனாவில் உள்ள அந்நிய முதலீடுகள் 2002 செப்டம்பரில்


ஹாங்காங் 19,984 கோடி டாலர் 45.96 சதவீதம்
அமெரிக்கா 3,842 கோடி டாலர் 8.84 சதவீதம்
ஜப்பான் 3,535 கோடி டாலர் 8.13 சதவீதம்
தாய்வான் 3,197 கோடி டாலர் 7.35 சதவீதம்
வேர்ஜி தீவுகள் 2,276 கோடி டாலர் 5.23 சதவீதம்
சிங்கப்பூர் 2,097 கோடி டாலர் 4.82 சதவீதம்
பிரான்ஸ் 545 கோடி டாலர் 1.25 சதவீதம்
மற்றவை 8,009 கோடி டாலர் 18.42 சதவீதம்
மொத்தம் 43,478 கோடி டாலர் 100 சதவீதம்


சீனாவில் அதிக முதலீட்டைக் குவித்து வைத்திருப்பவர்கள் யார் என்பதை இங்கேக் காண்கின்றோம். இதில் ஹாங்காங் பெரியளவில் அந்நிய முதலீட்டை சீனாவில் கொண்டு இருக்கின்றது. ஆனால் உள்ளடகத்தில் ஹாங்காங் அல்லாத அந்நிய மூலதனம், ஹாங்காங் ஊடாகப் பின்பக்க வழியாகச் சீனாவில் ஊடுருவியதையே இது குறிக்கின்றது. இது தான் தாய்வான் முதல் பல நாடுகளின் பின் உள்ள கதை. உலகில் இக்காலக் கட்டத்தில் அதிக அந்நிய முதலீட்டை உள்ளிழுத்த நாடுகளில் சீனாவாக இருப்பது என்பது, அங்குள்ள மக்கள் மேலான அதீதமான அடிமைத்தனத்தை எடுத்துக் காட்டுகின்றது. மக்கள் மேலான வரைமுறையற்ற, பாசிசச் சுரண்டலுடன் கூடிய சூறையாடல் தான், அதிக அந்நிய முதலீட்டை கவர்ந்தெடுக்கின்றது. இதன் மூலம் உலகில் அதிக மலிவுப் பொருளை உற்பத்தி செய்வதுடன், உலகில் பல உற்பத்தியில் பெருவீதத்தை சீனாவே கைப்பற்றியுள்ளது. அந்நிய மூலதனம் குவிந்துள்ள சீனாவின் மறுபக்கத்தில், சீன முதலாளிகளின் சுரண்டலும் சூறையாடலும் பெரும் மூலதனத்தை உருவாக்கி விடுகின்றது. இந்த மூலதனம் நிதியாகவும், மூலதனமாகவும் எல்லை கடந்து செல்வது அதிகரித்து வருகின்றது. உள்வருவதும், வெளிச் செல்வதும் தலைகால் தெரியாத வேகத்தில் ஒருங்கே நடக்கின்றது. மறுபக்கத்தில் சீன முதலீடுகள், ஏகாதிபத்தியங்களுக்கு இணையாக புதிதாக உலகெங்கும் பாய்கின்றது.


அந்நிய முதலீடுகள் கோடி டாலரில்
2001 2002
அமெரிக்கா 14,400 3,000
சீனா 4,680 5,270
பிரான்ஸ் 5,520 5,150
பிரிட்டன் 6,200 2,500
ஜெர்மனி 3,400 3,800
கனடா 2,900 2,050
நெதர்லாந்து 5,120 2,910


2002இல் அந்நிய முதலீட்டை அதிகமிட்ட நாடுகளை எடுத்தால், சீனாவே அதிக முதலீட்டையிட்டது.


சீனா 5,270 கோடி டாலர்
பிரான்ஸ் 4,820 கோடி டாலர்
ஜெர்மனி 3,810 கோடி டாலர்
அமெரிக்கா 3,010 கோடி டாலர்
நெதர்லாந்து 2,920 கோடி டாலர்
பிரிட்டன் 2,500 கோடி டாலர்
கனடா 2,140 கோடி டாலர்
ஸ்பனியோல் 2,120 கோடி டாலர்
பிரேசில் 1,920 கோடி டாலர்
அயர்லாந்து 1,900 கோடி டாலர்
பெல்ஜியம் 1,830 கோடி டாலர்
இத்தாலி 1,460 கோடி டாலர்
ஹாங்காங் 1,370 கோடி டாலர்


2002இல் சீனாவே அதிக அந்நிய முதலீட்டை உலங்கெங்கும் நடத்தியது. இதன் மூலம் உலகம் புதிய கெடுபிடிக்குள் நகர்கின்றது. பாரம்பரியமான ஏகாதிபத்தியங்கள் கடும் நெருக்கடியில் சிக்கி நிற்கின்றன. ஜப்பான் முன்னணி பட்டியலில் இருந்தே காணாமல் போனது. ஒன்றுபட்ட ஐரோப்பிய முதலீடுகளே அதிகரித்துச் செல்லுகின்றது. இதனுடன் சீனா மற்றும் ஹாங்காங் கணிசமான ஒரு அந்நிய முதலீட்டை உலகெங்கும் நடத்துகின்றது. உண்மையில் சர்வதேச ரீதியான நெருக்கடி புதிய வடிவில் சிக்கலாகி, கோரமாகி வருகின்றது.
2000இல் மொத்தமாக ஏகாதிபத்திய அரசுகளின் அந்நிய முதலீடு 73,500 கோடி டாலராகும். இது 2002இல் அரைவாசியாகியது. இந்த நெருக்கடியான காலத்தில் சீனா முழு வேகத்தில் உலகில் தலைநீட்டியது. 5270 கோடி டாலரை நேரடியாக முதலீடு செய்தது. சீனா 1991 தொடங்கி 2002 முடிந்த 12 வருடத்தில் மொத்த அந்நிய முதலீடாக 44,800 கோடி டாலரை உலகெங்குமிட்டது. அதேநேரம் ஹாங்காங்குடன் சேர்ந்ததால், அந்நிய முதலீடு 89,100 கோடி டாலராக மாறியுள்ளது. இது உலகில் இரண்டாவது மிகப் பெரிய அந்நிய முதலீடாகும். முதலாவது இடத்தில் உள்ள அமெரிக்காவோ, 1,35,100 கோடி டாலரை அந்நிய முதலீடாக உலகெங்கும் கொண்டுள்ளது. அதேநேரம் அமெரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிகளின் முதலீடு கடந்த 12 வருடத்தில் 1,50,100 கோடி டாலராகும். பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனங்களின் அந்நிய முதலீடு 1,03,300 கோடி டாலராகும். இது போல் பிரான்ஸ் 63,200 கோடி டாலரும், ஜெர்மனி 57,800 கோடி டாலருமாகும். ஒருபுறம் அரசின் அந்நிய முதலீடும், ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் அக்கம் பக்கமாகவும், ஒன்றுக்குச் சார்பாக மற்றொன்றாக இயங்கி உலகையே சூறையாடுகின்றது.


உலகில் ஏகாதிபத்தியங்களின் (தொழில்வள நாடுகளின்) மொத்த அந்நிய முதலீடுகள் 2002 முடிய உலகளாவில் 7,10,000 கோடி டாலராகும். இது அந்நிய மொத்த முதலீட்டில் 90 சதவீதமாகும். இந்த அந்நிய முதலீட்டில் 4,60,000 கோடி டாலர் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி சொந்தமாக இருந்தது. மறுபக்கத்தில் பெர்லின் சுவர் தகர்க்கப்படும் முன்பாக, 1990இல் மத்திய ஐரோப்பாவின் அந்நிய முதலீடு 300 கோடி டாலரே இருந்தது. இது 2002இல் 18,800 கோடி டாலராகியது. அதாவது 12 வருடத்தில் 60 மடங்கு மேலாகவே, அந்நிய மூலதனம் மத்திய ஐரோப்பாவில் ஊடுருவியது. கம்யூனிசத்துக்கு எதிரான சுதந்திரம், ஜனநாயகம் என்ற கோசத்தின் பின் உள்ள உள்ளடக்கம் இப்படி வக்கிரமாக வெளிப்பட்டு நிற்கின்றது. அங்கு வாழ்ந்த மக்களின் தலைவிதி சூறையாடலுக்குட்பட்டு, இருந்த கோவணத்தையும் இழப்பதையே துரிதப்படுத்துகின்றது.


இது தனித்து ஒரு பக்கம் மட்டும் ஒரு போக்கில் நிகழவில்லை. இரண்டாம் உலக யுத்தத்தின் பண்பான அமெரிக்காவின் தனிப் பலத்தையும் கூட சிதைக்கத் தொடங்கியுள்ளது. உண்மையில் இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் என்பது மிகப் பிரம்மாண்டமானதாக இருந்தது. தனது பலத்தைக் கொண்டு 1949இல் அமெரிக்கா 30 முதலாளித்துவ நாடுகளின் பணமதிப்பை ஒரே நேரத்தில் குறைக்க வைத்தது. 1950இல் அமெரிக்காவின் அந்நிய முதலீடு 20,550 கோடி ரூபாவாகியது. இது 1976இல் இது 2,40,000 கோடி ரூபாவாகியது. இது ஏகாதிபத்தியங்களின் மொத்த மூலதன ஏற்றுமதியில் 52 சதவீதமாக இருந்தது. மேற்கு ஐரோப்பாவில் அமெரிக்காவின் தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு 1957இல் 10880 கோடி ரூபாவாக இருந்தது. இது 1982இல் 384360 கோடி ரூபாவாக மாறியது. தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு 35 சதவீதமகவும், அரசு முதலீடு 13 சதவீதத்தாலும் அதிகரித்தது. 1970க்கும் 1978க்கும் இடையில் அந்நிய முதலீடு 1920 கோடி டாலரில் இருந்து 4050 கோடி டாலராக அதிகரித்தது. அதேநேரம் இந்த முதலீட்டால் கிடைத்த லாபம் 290 கோடி டாலரில் இருந்து 890 கோடி டாலராக அதிகரித்தது. 1970இல் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஜெர்மனியின் அந்நிய வெளிநாட்டு முதலீட்டில் 84.2 சதவீதம் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவிலேயே இட்டுயிருந்தனர். இதில் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. முதலீடுகள் அதிகளவில் ஏகாதிபத்தியத்தின் உள்ளும் நகரத் தொடங்கியது.


1999இல் அமெரிக்காவில் மூலதனம் உலகளவில் பரவிய விதம்

மொத்த மூலதனத்தின் சதவீதத்தில் மூலதனத்தில் அளவு
தென் அமெரிக்கா 19.7 22,300 கோடி டாலர்
தென் கடல் தீவுகள் 3.5 4,000 கோடி டாலர்
ஆசியா 13 14,600 கோடி டாலர்
கனடா 10 11,200 கோடி டாலர்
ஐரோப்பா 51.5 58,200 கோடி டாலர்
மத்திய அரேபியா 1 110 கோடி டாலர்
ஆப்பிரிக்கா 1.3 130 கோடி டாலர்

1955இல் மேற்கு ஐரோப்பாவில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசு முதலீடு 25840 கோடி ரூபாவாக இருந்தது. அதேநேரம் ஏகபோக தனியார் முதலீடு 11,840 கோடி ரூபாவாக இருந்தது. இந்த அந்நிய முதலீடு மேற்கில் 1999இல் 58,200 கோடி டாலராகியது. இது உலகளாவிய அமெரிக்காவின் அந்நிய முதலீட்டில் 51.5 சதவீதமாகியது. லெனின் கூறியது போல் ஏகாதிபத்தியத்தை இனங் காண்பதற்குரிய குணாதிசயமாக இருப்பது விவசாயப் பிரதேசங்களை மட்டும் அது கைப்பற்ற முனைகின்றது என்பது அல்ல. வெகுவாய்த் தொழில் வளர்ச்சியடைந்த பிரதேசங்களையும் அது கைப்பற்ற முனைவது ஆகும் என்றார். ஏகாதிபத்திய அமெரிக்கா உலகெங்கும் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னான தனது பொருளாதார பலத்தின் மூலம் உலகெங்கும் கால் பரப்பியது.


ஆனால் நிலைமை இன்று தலை கீழாகியுள்ளது. சீனா, ஜப்பான், ஐரோப்பா உலகளவில் அதிக அந்நிய முதலீடுகளை இட்டு உலகை அன்றாடம் மறுபங்கீடு செய்கின்றது. இதேபோல் 2002இல் ரசியா கிழக்கு ஐரோப்பாவில் நேரடியாக இட்ட அந்நிய முதலீடு 400 கோடி டாலராகியது. இது 2003இல் 680 கோடி டாலராகியது. 2003இல் ரசியா தனது வெளிநாட்டு அந்நிய முதலீட்டை 65 சதவீதத்தால் உயர்த்தியது. மொத்தத்தில் இவற்றுக்கு எதிராக பிரிட்டன், அமெரிக்கா கடுமையான தற்காப்பில் ஈடுபடுவதுடன், பகிரங்கமான பலாத்காரமான ஆக்கிரமிப்பில் ஈடுபடுகின்றது. உலக வர்த்தகத்தைக் கைப்பற்றும், உலகளாவிய நெருக்கடியின் மொத்த விளைவு என்ன எனப் பார்ப்போம். அமெரிக்கா, பிரிட்டன் 2003க்கு முந்திய இரண்டு வருடத்தில் தனது அந்நிய முதலீட்டின் அளவை 37,000 கோடி டாலரால் இழந்தது. 2003க்கு முந்திய பத்து வருடத்தில் அந்நிய முதலீட்டின் அளவு 37,000 கோடியால் குறைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் அந்நிய முதலீடுகளின் சரிவு வேகமாக நடக்கின்றது.


அமெரிக்காவின் அந்நிய முதலீடு


2002 3010 கோடி டாலர்
2001 13080 கோடி டாலர்
2000 30770 கோடி டாலர்
1999 28950 கோடி டாலர்

இதேபோல் பிரிட்டனின் அந்நிய முதலீடு


2002 2500 கோடி டாலர்
1999 6200 கோடி டாலர்


அந்நிய முதலீட்டின் சரிவால் ஏகாதிபத்தியத்துக்கு இடையில் ஏற்படும் சர்வதேச நெருக்கடிகள் கடுமையானவை. இது இராணுவ ரீதியான ஆக்கிரமிப்பாக மாறுகின்றது. இது தவிர்க்க முடியாமல், ஏகாதிபத்தியத்துக்கிடையிலான ஒரு போருக்கான சர்வதேச நெருக்கடிக்குள் இழுத்துச் செல்லுகின்றது. அமெரிக்காவின் அந்நிய முதலீடு 2002இல் மிக குறைந்த அளவை எட்டியது. இது 2002இல் 3010 கோடி டாலராகியது. பிரான்சை எடுத்தால் 2002இல் 5,150 கோடி டாலராக இருந்த அந்நிய முதலீடு 2001இல் 5,260 கோடி டாலராக இருந்தது. மேற்கத்திய அந்நிய முதலீடு 2002இல் 49,000 கோடி டாலராக இருந்தது. இது 2001இல் 61,500 கோடி டாலராக இருந்தது. பொதுவான சரிவு அந்நிய முதலீட்டில் காணப்பட்ட போதும், அதில் ஏற்றத்தாழ்வு ஏகாதிபத்தியத்துக்கு இடையில் கடுமையாகவே பிரதிபலித்தது. 2002இல் பிரான்சின் 22,119 பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் உலகெங்கும் உற்பத்தியில் ஈடுபட்டது. இது உலகளாவிய அந்நிய முதலீட்டில் 4 சதவீதமாகும். இதன் மொத்த பெறுமதி 60,000 கோடி ஈரோவாகும்.


பிரான்சின் உலகளாவிய முதலீடுகளின் எண்ணிக்கை


பிராந்திய ரீதியாக
ஆசியா 3,371
மத்திய கிழக்கு 772
ஆப்பிரிக்கா 2,733
தென் அமெரிக்கா 1,346
வட அமெரிக்கா 2,766
ஐரோப்பா 11,131
மொத்தம் 22,119


பிரெஞ்சு அந்நிய முதலீடுகள் தொடர்ந்தும் அதிகரித்து செல்லுகின்றது. இது பிராந்திய ரீதியாக சில பிரதேசங்கள் குறித்த ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தைக் கூட உருவாக்குகின்றது. இன்று அந்நிய மூலதனம் பிராந்திய ஆதிக்கத்தைக் கூட உருவாக்குகின்றது. உதாரணமாக தென் அமெரிக்காவை அமெரிக்காவும், ஆப்பிரிக்காவை குறிப்பாக பிரான்சின் ஆதிக்கத்தையும் பிராந்திய ரீதியாகவே தக்க வைக்கின்றது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலைமையிலான புதிய சர்வதேச இராணுவ ஆக்கிரமிப்புகள் பிரெஞ்சு மூலதனத்துக்கு, சர்வதேச நெருக்கடிகளை உருவாக்கி வருகின்றது. இக்காலத்தில் பிரான்சின் அந்நிய முதலீடுகளின் எண்ணிக்கையை எடுத்தால்


2000 2,994
2001 1,926
2002 1,778
2003 1,755


தொடர்ச்சியாக முதலீடுகளின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டிருப்பதை, இது எடுத்துக்காட்டுகின்றது. சர்வதேச ரீதியாக பொது நெருக்கடி ஒன்று, அங்குமிங்குமாக அலைபாய்கின்றது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், பிரிட்டனின் வெளிநாட்டு முதலீடுகளே உலகளாவியதில் மிகப் பெரிய பங்கு வகித்தது. 1914இல் பிரிட்டிஷ் முதலீடு உலகளாவிய அந்நிய முதலீட்டில் 45.5 சதவீதமாக இருந்தது. இது 1978இல் 16.2 சதவீதமாகவும், 1990இல் 13.8 சதவீதமாகவும், 1994இல் 11.8 சதவீதமாகவும் வீழ்ச்சிக் கண்டது. இந்த வீழ்ச்சி தொடர்ந்து வருகின்றது. இந்த வீழ்ச்சி கடுமையான ஏகாதிபத்திய நெருக்கடிகளை அலையலையாக உருவாக்கி வருகின்றது. ஈராக், சூடான்... என்று தொடரும் பல நேரடி இராணுவ ஆக்கிரமிப்புக்கள் எல்லாம், உலகை மறுபங்கீடு செய்யும் சர்வதேச நிகழ்ச்சி நிரலின் வெளிப்பாடாகவே தொடருகின்றது. இந்த நிலைமை என்பது தொடர்ந்தும் ஒரு நெருக்கடியான காலகட்டத்தின் ஊடாகவே நகருகின்றது. உதாரணமாக நெதர்லாந்து 1999க்கும் 2002க்கு இடையில், அந்நிய முதலீடு 5120 கோடி டாலரில் இருந்து 2920 கோடியாகக் குறைந்துள்ளது. பிரான்சின் அந்நிய முதலீடு 5260 கோடி டாலரில் இருந்து 4820 கோடியாகக் குறைந்துள்ளது. 2002இல் உலகளவில் மொத்தமாக அந்நிய முதலீடு 61500 கோடி டாலராக இருந்தது. இது 2003இல் 49000 கோடி டாலராக குறைந்தது. இது ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலும், அது போல் ஏகாதிபத்தியத்துக்கும் மக்கள் கூட்டத்துக்கும் இடையில் கடுமையான முரண்பாட்டைக் கொண்ட கெடுபிடியான காலகட்டத்துக்குள் நுழைந்துள்ளதையே எடுத்துக் காட்டுகின்றது. அந்நிய முதலீடுகள் வரலாற்று ரீதியான ஒரு தொடர்ச்சியான ஏகாதிபத்திய நலன்களுடன் பின்னிப் பிணைந்ததாகவே இருந்து வந்துள்ளது.


உலகையே கொள்ளை அடிக்க, எல்லை கடந்த ஏகாதிபத்திய அந்நிய முதலீடுகளின் மொத்த வரலாற்றையும் பார்ப்போம்.


1960 6,800 கோடி டாலர்
1967 11,200 கோடி டாலர்
1973 21,100 கோடி டாலர்
1980 51,300 கோடி டாலர்
1985 68,600 கோடி டாலர்
1990 1,71,400 கோடி டாலர்
1993 2,13,500 கோடி டாலர்
1994 2,41,200 கோடி டாலர்
1995 2,84,000 கோடி டாலர்
1996 ,14,500 கோடி டாலர்
1997 3,42,300 கோடி டாலர்
1998 4,11,700 கோடி டாலர்
2002 7,10,000 கோடி டாலர்


1960க்கும் 1998க்கும் இடையிலான அதாவது 38 வருடத்தில், எல்லை கடந்த வெளிநாட்டு மூலதனம் 60 மடங்கு மேலாக பெருகிக் கொழுத்துள்ளது. அதாவது மூலதனப் பாய்ச்சல் 6,000 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இது 2002உடன் ஒப்பிடும் போது 104 மடங்காகியது. அதாவது மூலதனப் பாய்ச்சல் 10,400 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 1990க்கும் 1998க்கும் இடைப்பட்ட காலத்தில் 2.4 மடங்கால் மூலதனப் பாய்ச்சல் நடந்துள்ளது. அதாவது 240 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 2002 உடன் ஒப்பிடும் போது 414 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. உண்மையில் உலகமயமாதல் என்பது எல்லை கடந்து பாய்ந்து செல்லும் அந்நிய மூலதனத்தின் சூறையாடும் நலன்களுடன், இறுகப் பின்னிப் பிணைந்தவையே என்பதை மீண்டும் இவை துல்லியமாக நமக்குச் சுட்டி நிற்கின்றது. இங்கு தேசியம் என எதுவும், இன்று நிலவும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தில் கிடையாது என்பதை, மூலதனம் முகத்தில் அறைந்தாற் போல் பளிச்சென்று பதிலளிக்கின்றது.


அந்நிய மூலதனத்தின் ஆதிக்கமே ஜனநாயகமாகி அதுவே சுதந்திரமானதாகிவிட்டது. தேசிய அரசுகள் என்று நாம் நம்பும் எல்லைகளைக் கடந்து ஏகாதிபத்தியங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதை ஏகாதிபத்தியம் சார்ந்த தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. இப்படி 1991இல் 40,000 பன்னாட்டு நிறுவனங்களும், அதனுடன் இணைந்த 2.5 லட்சம் வெளிநாட்டுக் கிளை நிறுவனங்களும் உலகு எங்கும் எல்லை கடந்து விரிந்து கிடந்தன. 2000இல் 60,000 தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் 8.2 லட்சம் அந்நிய முதலீட்டை நடத்தி இருந்தது. 2002இல் 65000 தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள், உலகளவில் 8.5 லட்சம் அந்நிய முதலீட்டை நடத்தி இருந்தது. அந்நிய முதலீடு தேசிய எல்லை கடந்து, தேசிய அரசுகளின் மேல் தமது ஆதிக்கத்தை நிறுவி வருகின்றது என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. இவற்றைப் பாதுகாக்கும் சட்டதிட்டங்கள் தான், உலகமயமாதல் என்னும் சட்டதிட்டங்கள். இவற்றையே தேசிய அரசுகள் தமது சட்டதிட்டமாக்கி வருகின்றது. 1991இல் இவற்றின் மொத்த விற்பனை வருமானம் 4,80,000 கோடி (4.8 டிரில்லியன்) டாலராகும். அதாவது 1980இல் கிடைத்த வருமானத்தைப் போல் இது இரண்டு மடங்காகும். தேசங்களின் எல்லை கடந்து சூறையாடும் உலகமயமாதலின் வெற்றி என்பது, 11 வருடத்தில் அதன் வருமானம் இரண்டு மடங்கானதைக் காட்டுகின்றது. இது இன்று பல மடங்காகிவிட்டதை மேலுள்ள தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன.


உலகைக் கைப்பற்றும் சர்வதேச நெருக்கடியில், 1994இல் உலகளவில் பன்னாட்டு நிறுவனங்களின் நிலையான வெளிநாட்டு முதலீடு 2,60,000 கோடி டாலராக அதிகரித்த அதே நேரம், அதன் உற்பத்தி 23,000 கோடியாக இருந்தது. அதாவது அந்நிய முதலீட்டின் மூலம் செய்த உற்பத்தியை, 19 நாடுகளின் தேசிய வருமானம் மட்டுமே இதைவிட அதிகமாக இருந்தது. வருடாந்தரம் நடக்கும் புதிய முதலீடுகள் மூலம் செய்யும் உற்பத்தி, பல தேசங்களின் வருடாந்தர தேசிய உற்பத்தியை விட அதிகமாகும் போக்கு, சர்வதேச போக்காகவே இது பரிணமித்துள்ளது.


மிக வறுமைக்குள்ளான மிகவும் பின்தங்கிய நாடுகளைக் கூட ஏகாதிபத்தியம் சூறையாடுவதில் இருந்து விதிவிலக்காக விட்டு விடுவதில்லை. நிதி மூலதனத்துக்கான வட்டி முதல் நேரடி அந்நிய மூலதனம் மூலம் சுரண்டுவது வரை விதிவிலக்கற்ற பொது நடைமுறையாக இருப்பதே உலகமயமாதலாகும். ஏகாதிபத்தியம் சூறையாடுவதால் அதிக மரணவீதத்தைக் கொண்ட ஆப்பிரிக்காவில், 1996இல் போடப்பட்ட பன்னாட்டு மொத்த முதலீடு 550 கோடி டாலராகும் இது உலகளாவிய முதலீட்டில் 1.5 சதவீதமாகும். 1997இல் இந்த முதலீடு 900 கோடி டாலராகியது. இது 1970இல் 100 கோடி டாலராக மட்டுமே இருந்தது. 1983 முதல் 1987 வரையான காலத்தில் சராசரி வருடம் 190 கோடி டாலர் முதலீடாக அமைந்தது. வறுமை தலைவிரித்தாடும் ஆப்பிரிக்காவில், பண்ணை மந்தைகளாகி கையேந்தி நிற்கும் மக்கள், ஏகாதிபத்தியக் கொள்ளையால் அன்றாடம் பல லட்சக்கணக்கில் இறக்கின்றனர். அதையிட்டு கவலைப்படாத ஏகாதிபத்தியம் முன்பைவிட கொடூரமாகவே அங்கிருந்து செல்வத்தைக் கவர்ந்து வருகின்றனர். இதையே அதிகரித்து வரும் பன்னாட்டு முதலீட்டின் அளவு சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது.


1997இல் மேற்கு அல்லாத நாடுகளில் அந்நிய முதலீடுகளை பிராந்திய ரீதியாக எடுத்து ஆராய்ந்தால்


தென் அமெரிக்கா மற்றும் கரிபிய நாடுகள் 11891.8 கோடி டாலர்
கிழக்கு ஆசிய மற்றும் பசிபிக் நாடுகள் 10425.7 கோடி டாலர்
ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா 4987.5 கோடி டாலர்
தென் ஆசியா 1111.0 கோடி டாலர்
வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு 789.9 கோடி டாலர்
ஆப்பிரிக்கா 667.4 கோடி டாலர்


1997இல் மேற்கு அல்லாத பிரதேசங்களில் அந்நிய முதலீடுகள் 29,873 கோடி டாலராக இருந்தது. அதேநேரம் அந்நிய முதலீடு உலகளவில் 3,42,300 கோடி டாலராக இருந்தது. ஆனால் 1970இல் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனியின் மொத்த அந்நிய முதலீட்டில் 84.2 சதவீதம் ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் லத்தீன் அமெரிக்காவில் போட்டிருந்தது. உலகமயமாதல் வேகம் பெற்ற போது ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடந்த மாற்றங்கள், அந்நிய மூலதனத்தில் ஒரு பகுதியை உள்ளிக்க தொடங்கியது. இதையே 1997இல் தரவுகள் எடுத்துக் காட்டுகின்றது. பின்தங்கிய பிரதேசங்களில் செய்த முதலீட்டை விடவும் மேற்கில் 9 மடங்கு மேலானதாக இருந்தது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் உற்பத்தி மற்றும் வாழ்க்கைச் செலவுடன் கூடிய கூலியை ஒப்பிடும் போது, மேற்கு அல்லாத நாடுகளின் முதலீட்டின் அளவு உயர்ந்தது. பணத்தின் பெறுமானத்தை டாலருடன் ஒப்பிட்டால், அவை பல பத்து மடங்காகவே இருக்கின்றது. உதாரணமாக 2003 பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு சிலியை எடுத்தால் 635 மடங்காகும். இதே போல் இந்தியா 45 மடங்காகவும், இலங்கை 100 மடங்காகவும், நைஜீரியா 136 மடங்காகவும், நேபாளம் 74 மடங்காகவும், வங்காளதேசம் 60 மடங்காகவும், தாய்லாந்து 40 மடங்காகவும் உள்ளது. உதாரணமாக மேற்கு அல்லாத முதலீடு மற்றொரு நாட்டில் ஊடுருவும் போது, ஒரு நாட்டின் பணத்தின் பெறுமானத்துக்கு ஏற்ப பலமடங்காகின்றது. இங்கு கூலியுடன் ஒப்பிடும் போதும் இதே நிலைதான் உள்ளது. உதாரணமாக பணம் 50 மடங்கால் பணப் பெறுமதி உயரும் போது, மேற்கு அல்லாத முதலீடு 14,93,650 கோடியாகின்றது. இது 100 மடங்காகும் போது 29,87,300 கோடியாகி விடுகின்றது. நாட்டின் தேசிய வருமானத்துடன் ஒப்பிடும் போது, இந்த முதலீட்டின் பெறுமானம் மிகப் பெரியதாக இருப்பதுடன், அனைத்தையும் மாற்றி அமைக்க கூடிய ஒன்றாக இருப்பதைக் காணமுடியும். மொத்த முதலீட்டை அந்தந்த நாட்டின் பணப் பெறுமதியில் ஒப்பிடும்போது, மேற்கு அல்லாத முதலீட்டை மேற்குடன் ஒப்பிடும்போது அது பல மடங்காகி விடுகின்றது. தேசங்கள் எப்படி அழிந்து சிதைந்து வருகின்றது என்பதையும், தேசிய முதலாளித்துவம் எப்படி சூறையாடப்பட்டு வருகின்றது என்பதையும் இது எடுத்துக் காட்டுகின்றது. தேசங்களின் தலைவிதியை நாம் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது. இது ஒரு தொடர்கதையாகின்றது. இதைப் புரிந்து கொள்ள, தேசங்கடந்த அந்நிய முதலீட்டின் அளவை ஒப்பீட்டில் சில நாடுகளைச் சார்ந்து பார்ப்போம்.


அந்நிய முதலீடு நேரடியாக கோடி டாலரில்


இஸ்ரேல் எகிப்து இந்தியா பிரிட்டன் செக் குடியரசு கங்கேரி இலங்கை
1997 174.3 89.1 300.6 6300.5 100.2 16.68 43.3
1998 49.4 107.6 200.6 11900.7 200.7 21.44 20.6
1999 141.4 106.5 200.2 20600.5 500.1 23.72 20.1
2000 383.2 123.5 200.5 25900.5 400.6 28.22 17.8
2001 120 40 300.2 18500.3 400.8 29.26 17.2
2002 150 30 400.3 16300.7 400.9 26.12 -


2001இல் அந்நிய முதலீடு


மொறக் 265.8 கோடி டாலர்
அல்ஜிரியா 118 கோடி டாலர்
எகிப்து 51 கோடி டாலர்
துருக்கி 86.2 கோடி டாலர்
சிரியா 20.5 கோடி டாலர்
ஜோர்டான் 10 கோடி டாலர்


தேசங்கடந்த அந்நிய மூலதனங்களைக் கொண்டு நிலையான மூலதனத்தை உருவாக்கி உலகத்தையே அடிமைப்படுத்தி சுரண்டும் ஏகாதிபத்தியம், புதிய நாடுகளை அடிமைப்படுத்த புதிய மூலதனங்களை நகர்த்துகின்றது. பெரும் மூலதனங்கள் மூலம் பல நாடுகளை அடிமைப்படுத்திய மூலதனம், புதிய நாடுகளை நோக்கி பெருமெடுப்பில் நகர்வது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. உலகில் மிகப் பலவீனமான மக்கள் கூட்டங்களை அடிமைப்படுத்தவும், உயர்ந்த சுரண்டல் வீதமே எப்போதும் முன்நிபந்தனையாக உள்ளது. இதை நிறைவு செய்ய உயர்ந்த தொழில் நுட்பத்தை இயக்கவல்ல, இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்ட நாடுகளில் மூலதனத்தில் பாய்ச்சல் அலை அலையாக இடமாறி நகர்கின்றது. அதாவது உயர்ந்த சுரண்டல் வீதத்தைக் கோரும் அதேநேரம், அதிலும் பணப் பெறுமதியில் உயர்ந்த டாலர் விகிதத்தையும் கோருகின்றது. இதற்குத் தொழில் நுட்ப அறிவை இலவசமாகப் பெறக் கூடிய இலவச தொழிலாளர் படை உள்ள நாடுகளைத் தெரிவதுடன், வேலையின்மை அதிக வீதத்தில் உள்ள நாடுகளைத் தெரிவு செய்கின்றனர். தொழிலாளர்களின் நிரந்தர அடிமைத்தனத்தை விலைபேசி விற்றுவிடக் கூடிய நாடுகளையும், மூலதனத்தின் சுயேச்சையான கட்டுப்பாடுகளற்ற இலகுவான சூறையாடலுக்கு இசைவான நாடுகளையே மூலதனம் தெரிவு செய்கின்றது. மூலவளங்களை மிக மலிவு விலையில் பெறக் கூடிய நாடுகள் தெரிவு செய்யப்படுகின்றன. இதனடிப்படையில் தான் மூலதனம் உலகெங்கும் எகிறிக் குதிக்கின்றது.


உண்மையில் இவை தேசவளங்களை, தேச எல்லைகள் கடந்து சூறையாடப்படுவதைக் காட்டுகின்றது. உலகளவில் மக்கள் தமது வாழ்க்கையை இழந்து வந்ததையும், இழந்து வருவதையும் எடுத்துக் காட்டுகின்றது. இந்த இரத்தம் குடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களும், இதன் தொங்கு சதைகளும் நாட்டின் எல்லையைக் கடக்கும் முன்பு, அங்கிருந்த வளங்களை நுகர்ந்தவர்கள் அந்த நாடுகளில் வாழ்ந்த மக்கள்தான். ஆனால் அதை இன்று பன்னாட்டு நிறுவனங்கள் தேச எல்லை கடந்து தேசத்தை பலாத்காரமாகப் புணர்ந்து, மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்த பின்பு, வீதிகளில் வெற்று உடல்களாக எறிந்து விடுவதை உலகமயமாதல் செய்கின்றது. உலகமயமாதல் பற்றி பல்வேறு விதண்டாவாதமான, வக்கிரமான கருத்துக்கள் அனைத்தும், எதார்த்தத்துக்கு நேர்மாறானதாகவே உள்ளது. அறிவுத் துறை சார்ந்த பூச்சூடல்கள் எல்லாம் எதார்த்தத்தைக் கடந்த வக்கிரமானதாக இருப்பதையே புள்ளிவிபரங்கள் துல்லியமாக எடுத்துக் காட்டி நிறுவுகின்றது. அதே போல் மக்களின் எதார்த்தமான வாழ்க்கையும், தேசங்களில் நடந்துவரும் மாற்றங்களும் உலகமயமாதலின் கோரமான விளைவுகளாகி எதார்த்தத்தில் காட்சிப் பொருளாகின்றது.

No comments: