பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Friday, October 17, 2008

இலங்கை திறந்த பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியது ஏன்?

இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களும் அதன் தாக்கங்களும் இலங்கை மக்களின் வாழ்க்கை முறை, வாழ்க்கைத் தரத்திலிருந்து பொருளாதார அடிப்படை வரை பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

இன்றைய நவீன உலகில் பொருளாதார சீர்திருத்தம் என்றால் நவதாராண்மை வாதமாகவே கொள்ளப்படுகிறது. இந்த நவதாராண்மை வாதமானது கோட்பாட்டு ரீதியான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இது சிந்தனைக் கிளர்ச்சி அதனூடாகத் தேடலைத் தூண்டவல்லது. சந்தைச் சக்திகள் போட்டி அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ள தூண்டப்படுவதால் சவால்களும் எழுந்து நிற்கின்றன. சவால்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உற்பத்தியாளர் - நுகர்வோரிற்கு ஏற்பட வேண்டியுள்ளது. நவதாராண்மைவாத பொருளாதாரக் கொள்கையும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியும் இன்று இரு துருவங்களாக நிற்கின்றன.

கடந்த 29 வருடங்களாக அமுலிலுள்ள நவதாராண்மைவாதப் பொருளாதாரக் கொள்கையால் ஏற்படுத்தப்பட்ட திறந்த பொருளாதார முறைமையால் நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டவில்லை. மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரவில்லை. ஆனால், நவதாராண்மைவாதப் பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்திச் செயற்படும் சிங்கப்பூர், தாய்லாந்து, கொங்கொங், தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பல முன்னேற்றம் கண்டுள்ளன.

தற்போது தென்னாசியாவிலுள்ள இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் திறந்த பொருளாதார முறைமையையே பொருளாதார வளர்ச்சிக்கான படிக்கற்களாக நினைக்கின்றன. அப்படி யானால், அது இலங்கையில் வெற்றியளிக்காமைக்கு இலங்கை இக்காலப் பகுதியில் தமிழர் இனப்பிரச்சினையை இராணுவ ரீதியாக அணுகுவதென்ற கொள்கையே காரணமாகும்.

பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற அடிப்படையில் இலங்கையில் ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் 1977 ஆம் ஆண்டு நவதாரண்மை வாதக் கோட்பாட்டை ஏற்றது. இதன் அடிப்படையில் திறந்த பொருளாதார முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1970 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை ஆட்சிப்பீடத்திலிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான சுதந்திரக்கட்சி மிக இறுக்கமான மூடிய பொருளாதாரக் கொள்கையை அதாவது, தேவைகள் அனைத்தும் உள்ளுர் உற்பத்தியைக் கொண்டு மட்டும் பூர்த்தி செய்ய வேண்டிய பொருளாதார முறைமையை அப்போது இறுக்கமாகக் கடைப்பிடித்தது. இதனால், மக்கள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தனர். தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கஷ்ரங்களையும் வேதனைகளையும் சந்தித்தனர். இது மக்களை ஆட்சியாளர் மீதான அதிருப்திக்கு வழிகோலியது. இதன் விளைவாகவே ஆட்சிப் பொறுப்பிலிருந்து சுதந்திரக் கட்சி இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆட்சிபீடம் ஏறிய ஐ.தே.கட்சி முன்னைய ஆட்சிக்கால நெருக்கடிகள் வேதனைகளிலிருந்து மக்களை மீட்டு புதிய சாதனையாளராக தம்மைக் காட்டிக்கொள்ள அவர்களின் சிந்தனையில் எழுந்த முடிவாக நவதாராண்மை வாதக் கோட்பாடு அறிமுகப்படுத்தப்படுகிறது. இது அவர்களின் சிந்தனையின் வெளிப்பாடு எனக் கூறுவதைவிட மேற்கு நாட்டவரின் சிந்தனைக்குக் கொடுத்த செயல் வடிவம் எனக் கூறுவதே பொருத்த மானது.

இந்தக் கோட்பாட்டு அமுலாக்கத்தின் வழிமுறையாகத் திறந்த பொருளாதார முறைமை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி உள்ளுரில் பொருட்களுக்கான விலையை கேள்வி, நிரம்பல்களுடாக சந்தைச் சக்திகளே முழுமையாகத் தீர்மானிக்கும் நிலை வரை சந்தை திறந்து விடப்படுகிறது.

இதன் மூலம் ஏற்றுமதி, இக்குமதிக்கு உள்ளுர் சந்தைகள் தாராளமாகத் திறந்து விடப்படுகின்றன. உள்ளுரில் பொருட்கள் தட்டுப்பாடின்றிப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை ஏற்படுகிறது. சுதந்திரக்கட்சி ஆட்சியில் நுகர்வுப் பொருட்களுக்காக வர்த்தக நிலையங்களில் வரிசையில் காத்திருந்து அதிருப்தியுற்ற மக்கள் பொருட்கள் தாராளமாகக் கிடைக்கும் நிலையை வரவேற்றனர்.

அன்று ஐ.தே. கட்சி ஆட்சியாளரால் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதார முறைமையை 1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சுதந்திரக்கட்சி தலைமையில் இலங்கையின் இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக அமைத்த சனாதிபதி சந்திரிகா தலைமையிலான அரசாங்கமும் தொடர்ந்து கடைப்பிடிப்பதென முடிவு செய்தது.

ஏனெனில், 1977 இல் இருந்து 1994 வரை 17 வருடங்களாக திறந்த பொருளாதார முறைமை அமுலில் இருந்ததாலும் உள்ளுர் துறைகள் திறந்த பொருளாதார முறைமைக்கு பழக்கப் பட்டுவிட்டதாலும் உலக நாடுகளும் அதாவது இலங்கை அதிக பொருளாதார உறவைக் கொண்டுள்ள மேற்கு நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் திறந்த பொருளாதாரக் கொள்கையை ஆதரித்துச் செயற்பட்டு வந்ததாலும் சிறிமாவோ காலத்து கசப்பான அனுபவங்களாலும் அப்போதைய ஆட்சியாளரான சந்திரிகா குமாரதுங்க திறந்த பொருளாதார முறைமையையே தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவு செய்தார். இன்று வரை இதே பொருளாதாரக் கொள்கையே இலங்கையில் ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால், இன்றுள்ள முக்கியமான கேள்வி என்னவென்றால், தென்னாசியாவிலேயே முதன் முதலாகத் திறந்த பொருளாதாரக் கொள்கைக்குள் காலடி எடுத்துவைத்து உள்ளுர் சந்தைகளை வெளிநாட்டு வர்த்தகர்களுக்குத் திறந்து விட்ட நாடாக இலங்கை இருந்தபோதும் ஏன் பொருளாதாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்ட முடியாது இருக்கின்றது என்பதே. இது முக்கியமாக ஆராயப்பட வேண்டிய விடயம். திறந்த பொருளாதார முறைமையைக் கடைப்பிடிக்க முடிவு செய்த இலங்கை அரசாங்கம் உலக வர்த்தக அமைப்பின் ஒரு நிறுவன உறுப்பினராகவும் இணைந்து கொண்டது. இதன் மூலம் சர்வதேச சந்தையில் இலங்கை பொருட்களுக்கான வர்த்தகம் மீதான கடப்பாடுகளையும் நிதியியல் பணிகள் பற்றிய பணிகளிலுள்ள வர்த்தகத்தின் பொது உடன் படிக்கையின் மீதான கடப்பாடுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதனால், சர்வதேச நிறுவனங்கள் - பல்தேசிய கம்பனிகள், இலங்கையில் ஸ்தாபிக்கப்படவும் இலங்கையிலுள்ள நிறுவனங்களில் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் முதலீடு செய்யவும் சட்ட ரீதியாக வழி பிறந்தது. இதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் உள்பாய்ச்சலாக நாட்டுக்குள் வந்து நிதியியல் செயற்பாடுகளை சுறுசுறுப்படையச் செய்தன. வெளிநாட்டு உற்பத்திப் பொருட்களும் உள்ளுர் சந்தைகளை ஆக்கிரமித்துக் கொண்டன. பொருட்களின் தரமும் உயர்ந்தன. வர்த்தகம் நிதிச்சேவை, தகவல் தொழில்நுட்பம் என்பன வற்றிற்கு பலமான அடித்தளம் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து அடுத்த கட்ட பரிமாணங்களாக வர்த்தக விழுமியங்களை விருத்தி செய்யக்கூடிய முகாமைத்துவக்குழுக்கள் தொழில்சார் தகைமை கொண்ட ஊழியர், தொழில்துறை நிபுணத்துவம், தொழில்பிரிவு முகாமைத்துவம் உள்வாங்கப்பட்டமை திறந்த பொருளாதார முறைமையால் உள்ளுர் சந்தையிலும் நிறுவனங்களிலும் ஏற்பட்ட முகாமைத்துவ ரீதியான அபிவிருத்தி என்றே கூறலாம்.

இவற்றின் மூலம் தொழில்துறைக்குள் போட்டியிடும் பண்பு அதிகரித்து மேலும் வர்த்தகச் சந்தர்ப்பங்களை இனங்காணல், புதிய மூலோபாயங்களைத் தேடல், விருத்தி செய்தல், செயற்பாட்டு ஆற்றலை அதிகரித்தல், துரித பொறுப்புக்கூறும் ஆற்றல் போன்ற பண்புகள் வளர்க்கப்பட்டு உறுதியான கூட்டாண்மை உறவு முறை வளர்க்கப்படுகிறது. இந்தச் செயற்பாடுகளின் ஒட்டுமொத்த விளைவுகளாக வெளிநாட்டு நிபுணத்துவம், வெளிநாட்டு மூலதனம், வெளிநாட்டுப் பொருட்கள் உள்ளுர் சந்தையை ஆக்கிரமித்து விடுகின்றன. இது உள்ளுர் மக்கள் குறைந்த விலையில் தரமான பொருட்களைத் தட்டுப்பாடின்றி நுகரக்கூடிய நிலை. ஆனால், இதற்கு மறுபக்கமும் உள்ளது. உள்ளுர் உற்பத்தியாளர் பொருளின் தரத்திலும் விலையிலும் வெளிநாட்டுப் பொருட்களுடன் தமது சந்தையிலேயே போட்டிபோட முடியாமல் நட்டமடைந்து உற்பத்தியைக் கைவிடுகின்றனர்.

உற்பத்தித்துறையைக் கைவிட்டு இந்த உற்பத்தியாளர் வெளிநாட்டு நிறுவனங்களில் அல்லது சேவைத்துறையில் அல்லது வர்த்தகத்துறையில் மனிதவலு மாற்றீடு செய்யப்படுகிறது. இவர்களில் பலர் கீழுழைப்பிலும் இருக்கும் நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக அனைத்து குடிமக்களும் பொருள் நுகர்விற்கும் தொழிலுக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் கம்பனிகளில் தங்கி வாழும் நிலையே ஏற்பட்டு விடுகின்றது. இதனூடாக வெளிநாட்டவர் இவர்களை முகாமை செய்ய முற்படுகின்றனர். அதாவது, உள்ளுர்வாசிகளின் செயற்பாடு அல்லது நடத்தையில் அல்லது நிறுவனத் தீர்மானங்களில் வெளிநாட்டவரின் விருப்பு வெறுப்புக்கள் செல்வாக்கும் செலுத்துகின்றன.

இந்த நிலையில்தான் கடந்த 29 வருடங்களாக வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் சராசரி 4.8 சதவீதமாக இருந்திருக்கின்றது. 2001 ஆம் ஆண்டு மட்டும் 2000 ஆம் ஆண்டைவிட மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவடைந்துள்ளது.


வருடாந்த பொருளாதார வளர்ச்சி வீதம்

1977 - 4.2
1978 - 8.2
1979 - 6.3
1980 - 5.8
1981 - 5.8
1982 - 5.1
1983 - 5.0
1984 - 5.1
1985 - 5.0
1986 - 4.3
1987 - 1.5
1988 - 2.7
1989 - 2.3
1990 - 6.2
1991 - 4.6
1992 - 4.3
1993 - 6.9
1994 - 5.6
1995 - 5.5
1996 - 3.8
1997 - 6.3
1998 - 4.7
1999 - 4.3
2000 - 6.0
2001 - 1.5
2002 - 4.0
2003 - 6.0
2004 - 5.4
2005 - 6.0
பொருளாதார வளர்ச்சி பற்றிய புள்ளி விபரங்களுள் பாதுகாப்புத்துறை முதலீடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது ஒரு குறைபாடாகவே கொள்ளவேண்டும். மேலும் இக்காலப் பகுதியில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதேநேரம் இறக்குமதியும் அதிகரித்துள்ளது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் வருடாந்தம் ஏற்றுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பைவிட இறக்குமதியில் ஏற்பட்ட அதிகரிப்பு மிகையாக இருப்பதுதான்.

இதன் மூலம் ஒன்று வெளிப்பட்டுள்ளது. உள்ளுர் தேவையைப் பூர்த்தி செய்வதில் இறக்குமதி முக்கியமான பங்கு வகிக்கின்றது என்பது.


ஆண்டு 1977 1987 1997 2002 2003 2004 2005

ஏற்றுமதி 767.1 1395.7 4639 4699 5133.3 5757.2 6346.7

இறக்குமதி 726.2 2075.1 5863.8 6105.6 6671.9 7999.8 8863.2

இந்த நிலையில்தான் அரச கட்டுப்பாட்டுப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து பொருளாதார முகாமைப்படுத்தலில் அரசின் பங்கு கேள்விக்குறியாகியுள்ளது. சர்வதேச நிறுவனங்கள் ஆக்கிரமிப்புச் செய்துள்ள இன்றைய நிலையில் எஞ்சியுள்ள பாரம்பரிய போக்குடைய நிறுவனங்கள் அவற்றின் மரபு ரீதியான முடிவு செய்யும் போக்கு காரணமாக தடைகளை எதிர்கொள்கிறது.

இவை எல்லாவற்றையும் விட திறந்த பொருளாதார முறைமையின் அடிப்படையில் வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் சிறிலங்காச் சந்தைகளைத் திறந்துவிட்டு வெளிநாட்டுப் பொருட்களுக்கும் முதலீடுகளுக்கும் சாதகமாக அமைந்துள்ள அளவுக்கு சிறிலங்காவின் பொருட்களை வெளிநாடுகள் ஏற்றுக்கொள்ள அல்லது தமது சந்தைகளைத் திறந்துவிட அவைகள் தயாராக இருக்கவில்லை. ஓரளவு திறந்துவிடவே அவை தயாராக இருந்தன. இதற்குப் பலவீனமான பொருளாதார நிலைமையையும் யுத்தத்தில் தீவிரப் போக்கையும் கொண்டிருந்த சிறிலங்கா ஆட்சியாளர்கள் வெளிநாட்டவரின் முதலீடு - உட்பாய்ச்சல் அவசியமாக இருந்ததால் ஏற்றுக்கொண்டனர். இது ஏற்றுமதி எதிர்பார்த்த அளவு இக்காலத்தில் இல்லாமல் போனதற்கும் உள்ளுர் உற்பத்தி பாதிப்படைந்ததற்கும் ஒரு காரணமாகும்.

அதுமட்டுமல்ல, சிறிலங்கா அரசாங்கம் நீண்ட காலமாக புரையோடிப்போயுள்ள தமிழர் இனப்பிரச்சினையை இராணுவ வழிமூலம் தீர்க்க எடுக்கும் முயற்சிகளும் பொருளாதாரம் எதிர்பார்த்த வளர்ச்சியைப் பெறமுடியாததற்கு ஒரு காரணமாகும். அதாவது, தென்னாசியாவில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் சிறிலங்கா இருப்பதால் மேற்கு நாட்டவரால் முதலில் திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தூண்டப்பட்டிருக்கலாம். கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் இருப்பதால் திறந்த பொருளாதார முறைமையை அமுல் படுத்துவது இலகுவானதும் குறைந்த காலத்தில் விரைவாக வளர்ச்சியடையக்கூடிய சாதகமான காரணிகள் பல இருக்கின்றன. இருந்தும் சிறிலங்கா ஆட்சியாளரின் யுத்த மனோபாவம் இவை எல்லாவற்றையும் மேவிய நிலையில் இருந்ததால் அதில் வெற்றி காண முடியாதுள்ளனர்.

இராணுவ வழி மூலம் தமிழரின் அரசியல் பிரச்சினையைத் தீர்க்க முற்பட்ட சிறிலங்கா அரசாங்கம் இதற்காகப் பாரிய யுத்தங்களைத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டி ஏற்பட்டது. இதனால், படை ஆட்சேர்ப்பு, ஆயுத தளவாடம் எனப் பெருந்தொகையான நிதியை பாதுகாப்பிற்கென வருடாந்தம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் தீவிரம் பெற்ற காலத்திலிருந்து சிறிலங்காவின் பாதுகாப்புச் செலவு வரவு - செலவுத் திட்ட மொத்த வருமானத்தில் சுமார் 22 சதவீதமாக இருந்து வருகிறது. இது மூன்றாம் உலக நாடு ஒன்றிற்கு அளவு கடந்த ஒதுக்கீடாகவே கொள்ளப்படுகிறது. இது குறித்து சர்வதேச நிதி நிறுவனங்களின் அதிகாரிகள், ஆய்வாளர்கள் பல தடவைகளில் எச்சரித்துமிருந்தனர்.

சாதாரணமாகவே மூன்றாம் உலக நாடுகளில் ஓரளவு ஆரோக்கியமான பொருளாதாரச் செயற்பாட்டைக் கொண்ட நாடுகளில் வருடாந்த மொத்த வருவாயில் ஏழு அல்லது எட்டு சதவீதமே பாதுகாப்புச் செலவிற்காக ஒதுக்கப்படுகிறது. ஆனால், அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இந்த வீதம் நான்கு அல்லது ஐந்து வீதத்திற்குள்ளேயே நின்று விடுகின்றன. ஆனால், சிறிலங்கா போன்ற சிறிய நாடுகள் பலவீனமான பொருளாதார நிலைமையைக் கொண்ட நாடுகள் 22 வீதத்தைப் பாதுகாப்புச் செலவிற்கு ஒதுக்குவதால் பொருளாதாரத்தில் வளர்ச்சியுற முடியாது. ஏனெனில், அபிவிருத்திக்கு ஒதுக்கும் நிதியில் குறைவு ஏற்படுகிறது. இது பொருளாதாரம் எதிர்பார்த்த வளர்ச்சியைப் பெற முடியாது போனமைக்கு ஒரு காரணமாகும்.

ஆனால், சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு சராசரி 4.8 சதவீதமாக உள்ளது. உண்மையான பொருளாதார வளர்ச்சி வீதம் இதைவிடக் குறைவாகவே இருக்கின்றது. அதாவது, மொத்த உள்நாட்டு உற்பத்திக் கணிப்பீட்டில் பாதுகாப்புத்துறை சம்பந்தமான முதலீடுகள், கொள்வனவுகள், சேர்க்கப்படுகிறது. இவை பொருள் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படாது போவதுடன் சில காலத்தில் பெறுமதி பூச்சியமாகும் அளவிற்கு அழிந்தும் விடுகின்றன. ஆகவே, இதை மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் சேர்ப்பது பொருத்தமானதல்ல. ஆனால், இவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்ப்பது பொருத்தமானதாகக் கொள்ளமுடியும். இந்தக் கணிப்பீடு என்பது கொள்கை ரீதியாக சரியாக இருப்பினும் நடைமுறைத் தாக்கங்களுடாகப் பார்க்கும்போது சாதகமான தாக்கங்களை ஏற்படுத்துவதில்லை. ஆனால், ஆட்சியாளர் தமது காலத்தில் பொருளாதாரம் வளர்ச்சிப் போக்கைக் காட்டியுள்ளதாக வெளிப்படுத்துவதற்கு இந்த முறையைக் கைக்கொள்கின்றனர்.

ஒட்டுமொத்தத்தில் பார்க்கும்போது நவதாராண்மைவாதக் கொள்கையால் திறந்த பொருளாதாரச் செயற்பாட்டின் காரணமாக சிறிலங்காவின் பொருளாதாரத்தில் எதிர்பார்த்த சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த முடியாமல் போனமைக்கு சிறிலங்கா ஆட்சியாளரின் தமிழர் மீதான யுத்த மனோபாவமே பலமான காரணியாக இருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

No comments: