பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Wednesday, September 24, 2008

200 கோடி டொலர்களுக்கும் அதிகமாக இலங்கையின் வர்த்தக நிலுவை அதிகரிப்பு



இலங்கையின் வர்த்தக நிலுவை கடந்த 4 மாதங்களில் 200 கோடி டொலர்களுக்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. ஏற்றுமதி மூலம் கிடைக்கும் செலாவணியின் பெரும்பகுதி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தப்படுவதால் வர்த்தக நிலுவை இடைவெளி கடுமையாக அதிகரித்திருக்கிறது.
மத்திய வங்கி நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை மூலம் வர்த்தக நிலுவை அதிகரித்திருப்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த ஜனவரியிலிருந்து ஏப்ரல் வரையான காலப் பகுதியில் இறக்குமதிச் செலவு 4.53 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் இதே காலப் பகுதியில் 3.29 பில்லியன் டொலர்களாக இறக்குமதி செலவினம் இருந்தது. ஏற்றுமதி 2.23 பில்லியன் டொலர்களிலிருந்து 2.48 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்திருப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வருடத்தின் முதல் 4 மாதங்களிலும் வர்த்தக நிலுவை 92.4 சதவீதமாக விரிவடைந்திருக்கும் அதேவேளை, சென்மதி நிலுவை மேலதிகமாக 320 மில்லியன் டொலர்களாக அதிகரித்திருப்பதாக வங்கி கூறியுள்ளது.
சென்மதி நிலுவைகள் சாதகமான நிலைமையை அடைந்திருப்பது எவ்வாறென்பதை மத்திய வங்கி கூறவில்லை. ஆனால், வெளிநாடுகளில் வேலைபார்க்கும் இலங்கையர்கள் அனுப்பும் பணத்தின் அளவு எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமெனவும் அதிகளவான அந்நியச் செலாவணி கிடைத்திருப்பதாகவும் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த மேயில் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்தின் தொகை 23.3 சதவீதத்தால் 752.2 மில்லியன் டொலர் அதிகரித்ததாக மத்திய வங்கி தெரிவித்திருந்தது.
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களிலும் 1.11 பில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருட்களை இலங்கை கொள்வனவு செய்திருந்தது. கடந்த வருடம் இதே காலப் பகுதியில் 632 மில்லியன் டொலரை எரிபொருள் கொள்வனவுக்காக செலவிட்டிருந்தது. இந்த வருடம் 76.3 சதவீதம் கொள்வனவுக்காக செலுத்தப்பட்ட தொகை அதிகரித்திருக்கிறது.
உலக உணவுப் பொருள் அதிகரிப்பால் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் தருணத்தில் தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு அதிக அனுகூலம் கிடைத்திருக்கின்றது.

No comments: