பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Saturday, October 25, 2008

இலங்கையை வறுமைப் பிடியிலிருந்து மீட்கவழி என்ன?

வறுமையானது பல பரிமாணங்களைக் கொண்டது. தங்கள் அடிப்படைத் தேவைகள் தன்னும் பூர்த்தி செய்ய முடியாத வருமானமுடையவர்கள் வறியவர்கள். அத்துடன், அத்தியாவசிய தேவைகளைப் பெற முடியாத தனிப்பட்டவர்களும் வறியவர்கள். எனவே, வறுமையானது நுகர்வுத் தேவையின் ஒரு குறைந்த தொகுதியைப் பெறக்கூடிய குடும்பமொன்றின் திறனை மையமாகக் கொண்டது. நுகர்வுத் தேவையின் குறைந்த தொகுதியைப் பெற முடியாத வருமானமுடைய குடும்பமும் வறுமைக்குரிய குடும்பமாகும்.
இலங்கையில் வறுமை பற்றிய தகவல்களைச் சேகரிக்க குடிசன மதிப்பீடும் புள்ளிவிபரத்திணைக்களத் தரவுகளுமே பெரும்பாலும் உதவுகின்றன. 1991 இற்கும் 1995 இற்கும் இடையிலான 5 வருட வறுமையானது உயர் வறுமைக்கோட்டின் பிரகாரம் 33 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறைந்த வறுமைக்கோட்டின் பிரகாரம் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. எனவே, எமது நாட்டின் 1995 குடி மதிப்புத் திணைக்களத்தின் படி சனத்தொகையில் 25 சதவீதத்தினர் கடுமையான நீண்டகால வறுமையில் மூழ்கியுள்ளனர். கடுமையானதாகவும் தற்காலிகமானதான வறுமையில் 45 சதவீத்தினர் மூழ்கியுள்ளனர்.
1990 ஆம் ஆண்டு மொத்த உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 5.1 சதவீதமாக இருந்தபோது தலைக்குரிய மொத்த உள்ளூர் உற்பத்தி 3.9 சதவீதமாக இருந்தது. எனவே, மொத்த உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி வீதமோ அல்லது அதன் விநியோக விளைவுகளோ வறுமை மட்டத்தைக் குறைக்க முயலவில்லை. மேலும், நடைபெற்ற போர்ச்சூழல் நிலையானது மொத்த உள்ளூர் உற்பத்தியை ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 2 இலிருந்து 3 சதவீதமாக குறைத்துள்ளது. 1990 இல் குடி மதிப்பீட்டுத் திணைக்கள புள்ளிவிபரப்படி ஆள் ஒன்றுக்கு மாதத்திற்கு குறைந்த வறுமைக்கோடாக ரூ.791 இனையும் 20 சதவீத உயர்ந்த வறுமைக்கோடான ரூ.950 இனையும் பயன்படுத்தியது. மத்திய வங்கியின் மதிப்பீட்டுப் படி குறைந்த வறுமைக்கோடாக ரூ.860 இனையும் 20 சதவீத உயர்ந்த வறுமைக்கோடாக ரூ.1,032 இனையும் பயன்படுத்தியுள்ளது. 1996 இல் மத்திய வங்கி குறைந்த வறுமைக்கோடாக தலைக்குரிய கணிப்புச் சுட்டெண் 19 சதவீதத்திலும் உயர்ந்த வறுமைக்கோட்டின் படி 31 சதவீதத்திலும் மதிப்பீடு செய்துள்ளது. குறைந்த வறுமைக்கோட்டிற்குக் கீழே வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கடுமையான வறுமையினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் குறைந்த மற்ற உயர்ந்த வறுமைக்கோடுகளுக்கு இடையில் வாழ்பவர்கள் அடிக்கடி ஏற்படும் தற்காலிக வறுமையினால் பாதிக்கப்பட்டும் காணப்படுகின்றனர்.
மாவட்ட மட்டத்தில் வறுமையைக் கணிப்போமாயின் கொழும்பு மாவட்டம் மிகக்குறைந்த 19 சதவீத நுகர்வு வறுமைத் தாக்கங்களையும் மிக உயர்ந்த 74 சதவீத நகர மயமாக்கலையும் கொண்டுள்ளது. குருநாகல், இரத்தினபுரி, அநுராதபுரம், புத்தளம் ஆகிய மாவட்டங்கள் உயர்ந்த வறுமை மாவட்டங்களாகவும் மிகக் குறைந்த நகர மயமாக்கலையும் கொண்டிருந்தன. மிக வறிய மாவட்டங்களாக மொனராகலை, இரத்தினபுரி, பதுளை, குருநாகல் ஆகிய மாவட்டங்கள் காணப்பட்டன.
வறுமைக்கும் வேலையில்லாப் பிரச்சினைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. 1997 இல் வேலை வாய்ப்பற்றோரில் 71 சதவீதத்தினர் இளைஞர்களாகியிருந்தனர். க.பொ.த. உயர்தர வகுப்புத் தகைமையாகவுள்ள 24 சதவீதத்தினர் வேலை வாய்ப்பின்றி இருந்தனர். 1990 இல் வேலை வாய்ப்பின்றி ஆண்களை விட பெண்களே அதிகம் காணப்பட்டனர். 2000 ஆம் ஆண்டில் ஆண்களின் வேலை வாய்ப்பின்மை வீதம் 7 சதவீதத்திற்குக் குறைவாகவும் பெண்களின் வேலை வாய்ப்பின்மை வீதம் 12 சதவீதமாகவும் காணப்பட்டன. தொழிலாளர்களில் பலர் விவசாயிகளாக இருந்தபோதும் இவர்களில் பலர் மிக உயர்ந்த வறுமைத் தாக்கத்திற்கு (52 சதவீதம்) உள்ளாயினர். மிக வறியவர்கள் நெல் உற்பத்தியில் அல்லது பெருந்தோட்ட வேலைகளில் காணப்பட்டனர். உற்பத்தி தொழிலாளர்களுக்கிடையில் வறுமை மட்டம் 38 சதவீதமாக மிக உயர்வாக காணப்பட்டது. இன்று அரசு பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பளித்துள்ள போதும் க.பொ.த. உயர்தரத்திலுள்ள வேலையற்றோர் பலர் உள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வறுமையின் நடமாட்டம் அதிகரிக்கக் காரணம் 20 வருட போர்ச் சூழலாகும். மக்கள் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, போசாக்கு ரீதியாகப் பலத்த பாதிப்புக்குள்ளாயினர். போர் காரணமாக ஏறக்குறைய 600,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 1,72,000 பேர் முகாம்களில் தஞ்சமடைந்தனர். வீடுகள் பல சேதமாக்கப்பட்டன. 60,000 உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் 48 சதவீதமாக பெண்கள் ஊட்டச்சத்து இன்றி காணப்பட்டனர். இந்தப் போர்ச் சூழ் நிலை கட்டுப்பாடுள்ள, கட்டுபாடற்ற பிரதேசங்களை வடக்கு, கிழக்கில் உருவாக்கியது. கட்டுபாடற்ற பிரதேசங்களென அரசு பல பொருளாதாரத் தடைகளை விதித்து வறுமை மட்டத்தை அங்கு கூட்டியுள்ள நிலை இருந்தது. இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தடைகள் பல நீக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் விவசாயம் தொழிலடிப்படையில் 40 சதவீதமாகவும் மொத்த உள்ளூர் உற்பத்தியில் 18 சதவீதமாகவும் உள்ளது. எனவே, இதனை நவீன தொழில்நுட்ப உதவியுடன் குறைந்த செலவில் உற்பத்தித் திறனைக் கூட்ட முயல வேண்டும். உயர் வேலைவாய்ப்பு வீதமானது உயர் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும். உயர்ந்த வருமானங்களுடனான உயர் உற்பத்தித்திறன் மிகு தொழில்களில் நாம் நாட்டம் கொள்ள வேண்டும். இலங்கையின் பொருளாதாரத்தை எமது நாட்டின் செழிப்பான இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் பயன்படுத்தி முன்னேற்ற முடியும். 20 வருடமாக நிகழ்ந்த போர்ச் சூழ்நிலையில் வளங்கள் சீரழிக்கப்பட்டுள்ளன. எனினும், முன்னேற்றத்தை நாடி வளங்களைப் பயன்படுத்த வேண்டும். பொருளாதார வளர்ச்சி வீதங்கள் எமது நாட்டின் 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் வரையே காணப்படுகிறது. இதை மாற்றி 10 சதவீத பொருளாதார வளர்ச்சி வீதத்தை அடையும் இலக்காக நாம் கடைப்பிடிக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகரித்து வருமானங்களை உயர்த்த வேண்டும்.
அரசாங்கமானது இன்று உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் நோக்குடன் நிலக்கண்ணிகளை அகற்றியும் அத்தியாவசிய சமூக சேவைகள் உட்கட்டமைப்புகளான நீர் விநியோகம், தெருக்கள் நிர்மாணம் என்பனவற்றை சீர்திருத்துகின்றது. தனியார்துறை பங்குபற்றுதலும் இன்று ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினதும் தனியார் துறையினதும் ஒன்றிணைவுடன் நவீன தொழில்நுட்ப ரீதியான முறையில் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். சிறிய நடுத்தரமான தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதன் மூலம் கிராமிய நகர்ப்புற குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கலாம். வறுமையை இது ஓரளவு குறைக்கமுற்படும்.
மேலும், நாம் கைத்தொழில் மயப்படுத்தலில் நாட்டம் கொள்ள வேண்டும். வளங்களை அடிப்படையாகக் கொண்டு கைத்தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். இதனால் வேலையற்றோருக்கு தொழில் வாய்ப்பளிக்க முடியும். சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் அந்நிய செலாவணியைப் பெற முடியும். நகர அபிவிருத்தியை ஏற்படுத்த காணிகளை வழங்கி அரசு உதவ வேண்டும். நகர நீர் வழங்கல் திட்டங்களில் தனியார்துறையினரை ஈடுபடுத்த வேண்டும். நகர உட்கட்டமைப்பை ஏற்படுத்த நகராட்சி மன்றங்கள், பிரதேச சபைகளுக்கு உரிய வருவாயைத் தோற்றுவிக்க வழிவகுக்க வேண்டும்.
உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் வாழ்கைத்திறன்களை உயர்வடையச் செய்யவும் தரமான கல்வி, சுகாதார, சமூக நல வசதிகளைப் பெறவும் முயல வேண்டும். கல்வி, சுகாதார நலனுக்காக நாம் தனியார் துறையினரை ஊக்குவிக்க வேண்டும். இலங்கையில் தனியார்துறையை பொருளாதார வளர்ச்சிக்கு வசதியளிக்கும்போது பல எதிர்ப்புகள் ஏற்பட இடமுண்டு. மேலும், வறுமையைக் குறைக்க முயல வேண்டும். இலங்கையின் அபிவிருத்திப் பங்காளிகளின் உதவியுடன் வறுமையைக் குறைக்க முயல வேண்டும். எனவே, பொருளாதார வளர்ச்சியில் கூடிய நாட்டம் தேவை.
அரசாங்கம் இன்று பாரிய பற்றாக்குறைகளைச் சுமப்பதைக் காணலாம். பற்றாக்குறையின் இலக்கு மொத்த உள்ளூர் உற்பத்தியின் 8.5 சதவீதமாகும். இந்தப் பற்றாக்குறையானது பொது படுகடனில் மொத்தத் தொகையானது அதிகரிக்க வழிவகுக்கிறது. எமது பொது கடனைப் பார்ப்பின் 2002 ஆம் ஆண்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 83,200 கடன் பெற்றுள்ளதாகவே கருத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான பெரிய பற்றாக்குறைகள் கட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்து செல்லுமாயின் பொதுக்கடனானது பொருளாதார வளர்ச்சியை விஞ்சுவதால் நாம் இதைத் தாங்க முடியாத நிலை ஏற்படும். அரசிறைப் பற்றாக்குறை காரணமாக ஏற்றுமதி, சேவை வருமானங்களின் மூலமாக பெறும் நிதியானது, கூடுதலான பொருட்கள் சேவைகள் இறக்குமதி செய்யும் நிலையினால் பாதிக்கப்படுகிறது. மேலும், நாணயமானது விரைவாக மதிப்பிறங்கியதுடன், சென்மதி நிலுவைகளின் பதிவும் மேலதிக அழுத்தத்தைக் கொடுக்கின்றன. கடன் சேவைச் செலவுகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் படுகடனில் வட்டிச்செலவை ஓர் படிப்படியான அடிப்படையில் குறைக்க வேண்டும். உயர் வட்டி கொண்ட கடன்களை விடுத்து மிகவும் குறைந்த வீதம் வட்டி கொண்ட கடனை பரிமாற்றம் செய்ய வேண்டும்.
அரசானது அரசிறைப் பற்றாக்குறையை 2001 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீதத்திலிருந்து 2002 ஆம் ஆண்டில் 8.9 சதவீதமாக குறைக்க முனைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பங்காக அரசதுறைப் படுகடன் 2002 இல் 103 சதவீதத்திலிருந்து 2006 ஆம் ஆண்டில் 81 சதவீதமாக வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்பட்டது. இது அரசிறை திட்டத்தின் வளர்ச்சி, குறைந்த வட்டி வீதங்கள், செலவினக் கட்டுப்பாடுகள் என்பவற்றில் தங்கியுள்ளன.
இலங்கையில் சமாதான சூழ்நிலை ஏற்பட வேண்டும். 2002 பெப்ரவரி 22 ஆம் திகதி சமாதானத்தை ஏற்படுத்த ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் செய்தது. இந்த யுத்த நிறுத்தம் சமாதானச் சூழ்நிலையை ஏற்படுத்த எடுக்கப்பட்ட முதல் முயற்சியாகும். சமாதான சூழ்நிலை இருந்தால் தான் பொருளாதார வளர்ச்சிக்குக் கூடுதலான நாட்டம் செலுத்த முடியும். எனவே, வறுமையைக் குறைப்பதாயின் சமாதான வாசலைத் திறந்துவிட வேண்டும். எமது 20 வருட யுத்த காலம் எமது வளங்களை பாதித்ததை நாம் அறிவோம். எனவே, சமாதானம் முன்னெடுக்கப்படுமாயின் முன்னேற வழியுண்டு. மோதும் நிலை மாறி நிலைத்து நிற்கக்கூடிய சமாதானத்திற்கு முயல வேண்டும்.
உயர்ந்த உற்பத்தியாற்றல் கொண்ட கைத்தொழில் மற்றும் சேவைகள் துறை உற்பத்திக்கு கிராமிய குடித்தொகையைப் பயன்படுத்த வேண்டும். எனவே, கிராமிய அபிவிருத்திக்குப் புத்துயிரளிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை நாடலாம். இலங்கையில் வறிய மக்களில் 90 சதவீதத்தினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மேலும், விவசாயத்தில் உற்பத்தி ஆக்கத்திறனை அதிகரிக்க வேண்டும். உற்பத்திச் செலவினைக் குறைக்க வேண்டும். விவசாயமான பயிர் செய்தல், விலங்கு வளர்ப்பு, மீன்பிடி, காட்டுத்தொழில் என்பவற்றில் வளர்ச்சி வீதம் அதிகரிக்கப்பட வேண்டும்.
சிறிய, நடுத்தர அளவுக் கைத்தொழில்களுக்கு நீண்டகால கொடுகடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வங்கிகள் மூலம் சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு ஏற்ற கொடு கடன்களை வழங்கி ஊக்குவிக்கலாம். மேலும், தனியார்துறைக்கு முதலீடு செய்வதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்த வேண்டும்.
கைத்தொழில்துறையில் வறியவர்களை ஈடுபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும். இதற்கு ஏற்ற மூலப் பொருட்களையும் மூலதனப் பொருட்களையும் இறக்குமதி செய்யக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும். புதிய தொழில் முயற்சிகளுக்கும் விரிவாக்கத்திற்கும் இறை ஊக்குவிப்புகள் வழங்க வேண்டும். கைத்தொழில் பேட்டைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். கைத்தொழில் முயற்சிகளுக்கு நீண்டகால கடன் வழங்கமுற்பட வேண்டும். தொழில் முயற்சிகளில் செலவுகளைக் குறைக்கும் புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும், நகரங்களில் கைத்தொழில் வலயங்களை நிறுவ அரசு மாத்திரமல்ல தனியார்துறைகளையும் ஊக்குவிக்க வேண்டும்.
மேலும், சுற்றுலாவை வளர்ப்பதன் மூலம் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கலாம். சூழல், சுற்றுலா வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிவகுக்கும். சுற்றுலாக் கைத்தொழில் வளர்ச்சிக்கு சமாதானம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்காக சுற்றுலா விடுதிகள் அமைக்கப்பட வேண்டும், பேணப்பட வேண்டும். சூழல், சுற்றுலா பாதுகாப்பு என்பன பேணப்பட வேண்டும். சுற்றுலா அபிவிருத்தியுடன் சிறிய வியாபாரங்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பான 6.6 மில்லியன் ஹெக்டயர் நிலத்தில் 28 சதவீதம் காடுகளாகும். 1.65 மில்லியன் ஹெக்டயர் பாதுகாக்கப்பட்ட காடுகளாகும். காடழிப்பும் வேகமான மண்ணரிப்பும் நாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனாலும் சுற்றாடல் சூழல் என்பவற்றில் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை அரசானது கவனத்தில் எடுத்து சூழலைப் பாதுகாக்க வேண்டும்.

No comments: