பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Saturday, September 27, 2008

இலங்கையுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்த சீனா இணக்கம்





K.S.அனோஜி
ஆசிய பசுபிக் பொருளாதார உடன்படிக்கையின் கீழ் இலங்கையினுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து, அண்மையில் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்வையிடச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன ஜனாதிபதியுடனும், சீன வர்த்தக அமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

ஆசிய பசுபிக் பொருளாதார உடன்படிக்கையின் கீழ் இலங்கையின் ஏற்றுமதி வரிகளை குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை தான் கவனத்தில் கொள்வதாகவும் சீன ஜனாதிபதி கு ஜிந்தாவோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையின் உற்பத்திக் கொள்ளளவை அதிகரிப்பதற்கு சீனா உதவியளிக்க இணங்கியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சீன வர்த்தக அமைச்சரைச் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீன தொழில்முயற்சியாளர்களுக்காக மீரிகம ஏற்றுமதி வலயத்தில், விசேட முதலீட்டு வலயம் ஒன்றை ஒதுக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, இலங்கையின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு சீனா தொடர்ந்தும் நிதியுதவியளிக்கும் என சீன வர்த்தக அமைச்சர் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார். கொழும்பு-கட்டுநாயக்க அதிவேகப் பாதை, புத்தளம் அனல்மின் நிலையம், ஹம்பாந்தோட்டை எண்ணெய்த் தாங்கி ஆகிய திட்டங்களுக்கு நிதியுதவியளிப்பதையும் சீன வர்த்தக அமைச்சர் இந்த சந்திப்பின் போது உறுதிப்படுத்தியுள்ளார்.
சீன 'எக்சிம்' வங்கியின் தலைவர் லீ ரோகுவைச் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித்திட்டத்திற்கான நிதியுதவி குறித்தும் கலந்துரையாடியுள்ளதாக சீனாவிலுள்ள இலங்கைத் தாதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 2008 இன் முதல் அரையாண்டில் 7.3 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக சிறீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

No comments: