
வடமேற்கு சீனாவின் சோள விவசாயிகளுக்கு சுன் ஜியாங்ஹொங்கின் சோளத் தட்டுகள், சோளக் கதிர்களின் மீதான் ஆர்வம் மட்டில் வியப்பு மேலிடுகிறது. எதற்காக இந்த நபர் நம்மிடம் வந்து சோள அறுவடைக்கு பின்னர் பயனில்லாமல் வீசி எறியப்படும் தண்டுகள் அல்லது சோளத் தட்டுகளை கேட்கிறார் என்ற கேள்விகள் அவர்களுக்கு உண்டு. வழமையாக கால்நடைத் தீவனமாக அல்லது வெற்றாக எரியூட்டப்பட்டுவிடுகிற இந்த சோளத் தட்டுகளை பயன்படுத்தி எத்தனால் எனப்படும் எரிபொருளை தயாரிக்கும் ஒரு ஆலையை நிறுவவேண்டும் என்பதுதான் சுன் ஜியாங்ஹொங்கின் எண்ணம். சோழியன் குடுமி சும்மா ஆடுமா? எத்தனால் மற்றும் பயோடீசல் எரிபொருள் பயன்பாட்டிலும், சந்தையிலும் ஒரு புரட்சியே செய்யும் அளவுக்கு உலகின் எரிபொருள் தேவை இருக்கிறது. பயனில்லாதது என்று தூக்கியெறிப்பட்ட, கொளுத்து குளிர் காயப்பட்ட இது போன்ற பயிர்களின் மிச்சங்களில் எரிபொருள் தயாரித்து வளரும் நாடுகள் தங்களது தேவையை நிறைவு செய்ய முயற்சிக்கலாம் என்பது மகிழ்ச்சியான சேதியல்லவா. ஆனால் இதெல்லாம் எளிதில் நிகழ்ந்துவிடக்கூடிய மாய வித்தை அல்ல. சவால்கள் நிறைந்த பணியாகும்.
உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால், ஒரு டன் எத்தனால் தயாரிக்க நான்கு டன் சோளத் தட்டுகள் அல்லது தண்டுகள் தேவை. வீணாகப்போகும் இவற்றை சேகரிப்பதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதே சுன் ஜியாங்ஹொங்கின் அனுபவம். இது சீனா போன்ற நாடுகளின் பயோடீசல், எத்தனால் ஆகிய பயோ எரிபொருள் அல்லது உயிரி எரிபொருள் துறையின் நிலையாகும்.
சீனாவில் உயிரி எரிபொருள் என்பது வேண்டுமானால் புதியதாக இருக்கலாம் ஆனால் இந்த எரிபொருளின் தயாரிப்பில் முக்கியத்துவமிக்க கிரெயின் ஃபெர்மன்டேஷன் எனப்படும் நுண்ணுயிர் பதப்பாடு முறை சீனாவில் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பரிச்சயமான ஒன்று என்கிறார் சீன வேளான் பொறியியல் கழகத்தின் தலைவர் ஷு மிங்.
பயோ எரிபொருள் என்று பார்த்தால் அதிகமாக பயன்பாட்டில் இருப்பது எத்தனால் ஆகும். இது பெரும்பாலும் சோளத்திலிருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர சோயாபீன்ஸிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பயோ டீசல் அமெரிக்கா, பிரேசில் நாடுகளில் அதிகம். கரும்பு உற்பத்தி அதிகம் உள்ள பிரேசில் இந்த பயோ எரிபொருள் துறையில் பெரும் பங்கு ஆற்றி வருகிறது. அமெரிக்காவில் இந்த பயோ எரிபொருள் துறை இன்றைக்கு நேற்றல்ல, கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானது. அப்போதைக்கு தேவைக்கதிகமான விளைச்சல், தானியங்கள் கூடுதலாக உள்ள நிலையில் உபரியானதை வீணாக்காமலிருக்க இந்த எத்தனால், பயோ டீசல் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் 2000ம் ஆண்டில் முற்பகுதியில் உலக பெட்ரோல் டீசல் விலை அதிகாகிக்கொண்டிருந்தபோது, மாற்று எரிபொருள் தேவை என்ற நிலையில், இந்த பயோ எரிபொருட்கள் மாற்று எரிபொருளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. புதிய ஆய்வுகள் இந்த பயோ எரிபொருட்கள் முன்பு நினைத்ததைவிட அதிகமான பயன் தருபவை, உற்பத்தித் திறன் கொண்டவை என்று வலியுறுத்துகின்றன.
அன்மையில் பெய்சிங்கில் சிங்ஹுவா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநில வேளாண்துறை உள்ளிட்ட சில துறைகளும், நிறுவனங்களும் ஏற்பாடு செய்த உலக பயோ எரிபொருள் ஆய்வரங்க கூட்டமர்வில் சீனாவின் மிகப்பெரிய அளவிலான வேளான் உற்பத்தி பொருட்கள் பயோ எரிபொருளாக மாற்றப்படும் சாத்தியங்களை உறுதிபடுத்துவதாக சீன தேசிய உயிரி மேம்பாட்டு மைய்த்தின் உயிரி தொழிநுட்பத்துறை சியு ஹொங்வேய் கருத்து தெரிவித்துள்ளார். இன்றைக்கு சீனாவின் ஹேனான், அன் ஹூய் ஹெய்லோங்சியாங், லியாவ்நிங், சிலின் ஆகிய மாநிலங்களில் வழமையான பெட்ரோலுடன், எத்தனால் எனப்படும் உயிரி எரிபொருளை, பயோ எரிபொருளை கலந்து பயன்படுத்தும் முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹேனான், அன் ஹூய் ஹெய்லோங்சியாங், மற்றும் சிலின் மாநிலங்களில் உள்ள நாஙு ஆலைகளில் எத்தனால் உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. சீனாவை பொறுத்த வரை பயோ எரிபொருள் உற்பத்தியை தொழிலாகக் கொண்டால் பெருமளவு லாபம் பார்க்கமுடியாது. காரணம் இங்கே பெட்ரோல் டீசல் விலை இந்தியாவிலோ அல்லது வேறு சில நாடுகளில் உள்ளது போலவோ அதிகம் இல்லை. ஆனால் அதர்காக இந்த மாற்று எரிபொருளின் ஆக்கப்பூர்வமான பலன்களை ஒதுக்கிவுட முடியுமா என்ன. அன்மையில் சென்னையில் தேசிய வேளான் அறக்கட்டளை மையத்தில் வைத்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் சந்த்த்தபோது 2020ம் ஆண்டுக்குள் உணவு உற்பத்தியை தொழில்நுட்ப உதவியுடன் இருமடங்காக அதிகரிக்க விவசாயிகள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் தொடர்ந்து ஒரே பயிராக பயிர் செய்யாமல் சுழற்சி முறையில் பயிர்களை மாற்றி மாற்றி பயிர் செய்ய வேண்டும் என்றும் இதன்காரணமாக அதிக உற்பத்தி கிடைப்பதுடன் மண்ணின் வளமும் அதிகரிக்கும் என்றும் கூறிய குடியரசுத் தலைவர்,
நாட்டில் டீசல் எண்ணை இறக்குமதிக்காக ரூ.13 ஆயிரத்து 500 கோடி செலவாகிறது. இந்த நிலையில் பயோ-டீசல்தான் மாற்று எரிபொருள். காட்டாமணக்கில் 22 சதவீதம் எண்ணை உள்ளது. எனவே, விவசாயிகள் பயோ-டீசல் உற்பத்திக்காகவும், தங்களது வருமானத்தை பெருக்கிக்கொள்ளவும், விளைநிலங்களில் காட்டாமணக்கு பயிரிட முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக அரசின் 2006 - 2007 திருத்த நிதியறிக்கையில் விவசாயிகளது நலன் பற்றி குறிப்பிடும்போது, எத்தனால் பெட்ரோலிற்கு மாற்றாகவும், பயோ டீசல், டீசலிற்கு மாற்றாகவும் பயன்படுகிறது. முதல் கட்டமாக பெட்ரோலுடன் எத்தனால் 5 விழுக்காடு கட்டாயமாகக் கலந்து பயன்படுத்த நடுவணரசு ஆணையிட்டுள்ளது. எனவே, அத்தனை சக்கரை ஆலைகளிலும் எத்தனால் உற்பத்தி செய்வதற்கான வசதியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். சர்க்கரைச் சோளம், சர்க்கரைக் கிழங்கு மூலமும் எத்தனால் தயாரிக்கலாம் என்பதனால் இவைகளை பயிர் செய்ய விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கப்படும் என்றும் ஜெட்ரோப்பா எனப்படும் காட்டாமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பயோ டீசலாக, டீசலிற்கு மாற்றாக பயன்படும் என்பதால் தரிசு நிலங்களில் காட்டாமணக்கு விளைவிக்க ஊக்குவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக பயோ எரிபொருளை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் உலகின் இரு பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளான சீனாவும் இந்தியாவும் ஊக்கமுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இன்றைக்கு உலக பொருளாதார வளர்ச்சியில் தங்களது அசுர வேக வளர்ச்சியால் மற்ற எல்லா நாடுகளையும் வாயைப் பிளக்கச் செய்யும் இந்த இரு பெரும் நாடுகள் முனைப்புடன் செயல்பட்டால், வேளான்மையை அடிப்படையாகக் கொண்ட இந்த நாடுகளின் கையில் பயோ எரிபொருட்களின் எதிர்காலம் என்பதை மாற்ற இயலாது.