பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Friday, September 19, 2008

2005ஆம் ஆண்டு சீனப் பொருளாதாரம்

2004ஆம் ஆண்டு சீனப் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியுற்றதை சீனத் தேசிய புள்ளி விபரப் பணியகம் அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரம் காட்டுகிறது. மொத்த உள் நாட்டு உற்பத்தி, முந்தைய ஆண்டில் இருந்ததை விட 9.5 விழுக்காடு அதிகமானது. 2005ஆம் ஆண்டில், சீனப் பொருளாதாரம் சீராகவும் விரைவாகவும் வளர்ச்சியடையக்கூடும். சீனப் பொருளாதார வளர்ச்சி, உலகில் இதர நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமானது என்று சீன-அன்னிய பொருளாதார துறையினர் செய்தியாளரிடம் பேட்டி அளித்த போது தெரிவித்தனர்.

2004ஆம் ஆண்டில், சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி, 13 லட்சம் கோடி யுவானை தாண்டியுள்ளது என்று பூர்வாங்க புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. ஆண்டு முழுவதிலும் மொத்த தானிய விளைச்சல் சுமார் 47 ஆயிரம் கோடி கிலோகிராமாகும். தொடர்ந்து 5 ஆண்டுகளாக தானியம் விளைச்சல் குறைந்து வந்த ஒரு நிலைமை மாறியுள்ளது. தொழில் நிறுவனங்கள் ஈட்டிய மொத்த லாபம், முதன்முதலாக ஒரு லட்சம் கோடி யுவானை தாண்டியுள்ளது. நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் வாழ்கின்ற மக்களின் வருமானம் அதிகரித்து வருகின்றது. இதில், விவசாயிகளின் நபர்வாரி நிகர வருமானம் உண்மையில் 6 விழுக்காட்டுக்கு மேலாக அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில், இந்த வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக உள்ளது. முழு ஆண்டிலும், மொத்த ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு, ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. அன்னிய முதலீட்டுத் தொகை, 6 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 60 ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமாகும்.
2004ஆம் ஆண்டில் சீனப் பொருளாதாரம் கண்டுள்ள முன்னேற்றம் பற்றி, சீனத் தேசிய புள்ளி விபரப் பணியகத்தின் தலைவர் Li De Shui கூறியதாவது:

"1978ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை, சீனப் பொருளாதாரம் ஆண்டுக்கு 9.4 விழுக்காடு என்ற அளவில் வளர்ந்து வருகின்றது. சீனப் பொருளாதார வளர்ச்சியின் உள்ளார்ந்த இயக்கு ஆற்றல் வலுவாக உள்ளது. முதலீட்டுத் தேவை மிகவும் அதிகம். மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் வருமானம் உயர்ந்து வருவதுடன், நுகர்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தவிர, கடந்த ஆண்டில், சர்வதேச பொருளாதாரம் சீராக வளர்ச்சியுற்றதால், சீனாவின் ஏற்றுமதிக்கு இது சாதகமானது." என்றார் அவர்.
2003ஆம் ஆண்டு முதல், சீனப் பொருளாதாரம் புதிய வளர்ச்சிக் காலக்கட்டத்தில் நுழைந்துள்ளது. ஆனால், இதில் சில பிரச்சினைகள் தோன்றின. எடுத்துக்காட்டாக, நிலையான சொத்துக்களில் முதலீடு, அளவுக்கு மீறி வேகமாக அதிகரித்து வருகின்றது. இதில், இரும்புருக்கு, சிமென்ட் உள்ளிட்ட ஒரு பகுதி தொழில்களுக்கான முதலீடு அளவுக்கு மீறி அதிகமாக உள்ளது. அடுத்தடுத்து 5 ஆண்டுகளில், தானிய விளைச்சல் குறைந்து, தானியங்களின் விலை பெரிதும் உயர்ந்து வருகின்றது. இதன் விளைவாக, மொத்த விலை வாசி அதிகரித்து வருகின்றது. இந்த பிரச்சினைகளைத் தீர்த்து, பொருளாதாரத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்கும் பொருட்டு, வேளாண்மை வளர்ச்சியை விரைவுபடுத்துவது, நம்பிக்கை கடனின் அளவைக் கட்டுப்படுத்துவது உட்பட ஒட்டுமொத்த சீர்திருத்த நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டுள்ளது. ஒட்டுமொத்த சீர்திருத்தம், குறிப்பிடத்தக்க பயனை தந்துள்ளதால், சீனப் பொருளாதார இயக்கத்தில் நிலவும் பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகின்றன.

சீனப் பொருளாதாரம் சீராகவும் வேகமாகவும் வளர்ச்சியடைவதற்கு உத்தரவாதம் அளிக்கும் பொருட்டு, இவ்வாண்டு ஒட்டுமொத்த சீர்திருத்தத்தை மேலும் வலுப்படுத்த, தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சீன அரசு தெள்ளத்தெளிவாக அறிவித்துள்ளது.
இவ்வாண்டு, நிதி கொள்கையின் சீர்திருத்தத்திற்கு நிதானமான குறிக்கோளை சீன மத்திய வங்கி முன்வைத்தது. நுகர்வுடன் நெருங்கிய தொடர்புடைய மொத்த நாணய வினியோக அளவு 15 விழுக்காடு அதிகரிக்கக்கூடும். புதிதாக அதிகரிக்கும் கடன் தொகை 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி யுவானை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 2004ஆம் ஆண்டில் இருந்ததை விட இந்த இரண்டு இலக்குகள் ஓரளவு தணிவடைந்துள்ளன. ஆனால் பெரும் மாற்றம் இல்லை.

கடந்த சில ஆண்டுகளாக, சீனப் பொருளாதார வளர்ச்சி, உலக பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ பங்காற்றியுள்ளது. இத்தகைய சார்ந்து நிற்கும் பொருளாதார வளர்ச்சியை வெளிநாட்டு பொருளாதார நிபுணர்கள் பலர் உறுதிப்படுத்தினர். சீனாவிலுள்ள ஜப்பானிய வணிக சங்கத்தின் துணை தலைவரும், ஜப்பானிய Tokyo-Mitsubishi வங்கியின் பெய்ஜிங் கிளைத் தலைவருமான Hirokazu Yanagigaoka சீன-ஜப்பானிய பொருளாதார வர்த்தக உறவு பற்றி குறிப்பிடுகையில், தற்போது, சீன-ஜப்பானிய பொருளாதாரம் நாளுக்கு நாள் நெருங்கி வருகின்றது. சீனாவில் முதலீடும் சீனாவுடனான வர்த்தகமும் இல்லை என்றால், ஜப்பானிய பொருளாதாரம் இத்தகைய வேகத்துடன் வளர்ச்சியடைய முடியாது என்றார். இவ்வாண்டு சீன-ஜப்பானிய பொருளாதார வர்த்தக உறவின் வளர்ச்சி மீது தாம் பேரார்வம் காட்டுவதாக செய்தியாளரிடம் அவர் தெரிவித்தார்.
சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக உறவு பற்றி, சீனாவிலுள்ள அமெரிக்க வணிக சங்கத்தின் தலைவர் Charles M. Martin, சீனப் பொருளாதார வளர்ச்சி, அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு தந்துள்ள நலனையும் வாய்ப்பையும் ஆராய்ந்தார். 2004ஆம் ஆண்டு, மிக அதிகமான அமெரிக்க சரக்குகளை இறக்குமதி செய்யும் நாடாக சீனா மாறியது. இதற்கிடையில், சீனா அமெரிக்காவின் இறக்குமதி சரக்குகளின் ஐந்தாவது மூல நாடாகும் என்று அவர் கூறினார். சீனப் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியினால், சீனாவிலுள்ள அமெரிக்க தொழில் நிறுவனங்கள் பயனடைந்து வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான், தென் கிழக்காசிய மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றுடனான பொருளாதார வர்த்தக உறவு சீராக வளர்ச்சியுற்று வருகின்றது. சீனப் பொருளாதார வளர்ச்சிக்கும் உலக பொருளாதார வளர்ச்சிக்கும் இது மிகவும் சாதகமானது என்று பொருளாதார துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்

No comments: